விஜய்யின் `தலைவா'...`Time To Lead' மட்டும்தான் பிரச்னையா? `தலைவா டே' கொண்டாட்ட பின்னணி என்ன?
விஜய் நடித்த`தலைவா' படம் வெளியானது ஆகஸ்ட் 20. ஆனால் ஆகஸ்ட் 9-ம் தேதியைத்தான் விஜய் ரசிகர்கள் `தலைவா டே’ என்று கொண்டாடுகிறார்கள்... ஏன்... அந்தப் படம் வெளியான சமயத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு காரணம் என்ன? - விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.
விஜய் தொடர்ச்சியாகப் பல தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த சமயம் அது. 2012 ஜனவரியில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான `நண்பன்' படத்தின் மூலம் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்திருந்தார் விஜய். அதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான `துப்பாக்கி' படம் விஜய்க்கு மிகப்பெரிய கம்பேக் ஆக அமைந்தது. துப்பாக்கியின் மெகா வெற்றியால் அவரின் அடுத்த படமான `தலைவா' படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிறின. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2013 ஆகஸ்ட் 9-ம் தேதியன்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என அனைத்து தென்மாநிலங்களிலும் மிகப் பெரிய ரிலீஸூக்குக் காத்திருந்தது தலைவா. ஆனால், திடீரென தலைவா படம் சொன்ன தேதியில் வெளியாகவில்லை.

`விஜய்யின் தலைவா படம் வெளியானால், திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு வைப்போம்' என்று திரையரங்குகளுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9-ம் தேதியன்று படம் வெளியாகவில்லை. வெடிகுண்டு மிரட்டல்தான் தலைவா படம் வெளியாகாததற்குக் காரணமாக முதலில் சொல்லப்பட்டாலும், பின்னர் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் இதன் பின்னால் இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. குறிப்பாகப் படத்தில் அரசியல் வசனங்கள் பேசுவதும் `டைம் டூ லீட்' என்ற வாசகத்தோடு படத்தின் தலைப்பு இருப்பதும்தான் ஜெயலலிதாவை கோபம் கொள்ளச் செய்தது என்று செய்திகள் வந்தன.
இன்று ஆகஸ்ட் 9-ம் தேதி, தலைவா படம் இந்தத் தேதியில் வெளியாகவில்லையென்றாலும் விஜய் ரசிகர்கள் வருடா வருடம் இந்தத் தேதியன்று சமூக வலைதளங்களில் `தலைவா டே' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து காமன் டிபிக்களை வெளியிட்டுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டும் தலைவா படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய் காமன் டிபி போஸ்டரை வெளியிட, சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்துகொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
உண்மையிலேயே `டைம் டூ லீட்' என்பதுதான் தலைவா படப் பிரச்னைக்குக் காரணமா? விஜய் தரப்புக்கும் ஜெயலலிதா தரப்புக்கும் இடையே அந்தச் சமயத்தில் ஏற்பட்ட பிரச்னைதான் என்ன?
தி.மு.க-வுடன் ஏற்பட்ட பிரச்னை!
2009, ஜூலை 26-ம் தேதியன்று தனது ரசிகர் மன்றங்களை `மக்கள் இயக்கமாக' மாற்றினார் விஜய். மக்கள் இயக்கத்துக்காக`உழைத்திடு உயர்ந்திடு... உன்னால் முடியும்' என்ற வாசகத்தோடு கொடி ஒன்றை அறிமுகப்படுத்தினார் விஜய். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க நினைத்தனர். ஆனால், அதற்கடுத்த மாதத்திலேயே காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார் விஜய். இது அப்போதைய ஆளும்கட்சியான தி.மு.க-வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான `காவலன்' படத்திற்கு தி.மு.க முட்டுக்கட்டை போட்டது.
அரசியல் வளையத்திற்குள் சிக்கிய முதல் விஜய் படம் காவலன்தான். படம் வருமா வாராதா என்று திரையரங்கங்களுக்கு வெளியில் எக்கச்சக்க ரசிகர்கள் காத்திருக்க, படத்தின் ரிலீஸ் தேதி ஒருநாள் தள்ளிப்போனது. அடுத்த நாளும் மதியக் காட்சிகளிலிருந்துதான் படம் போடப்பட்டது.
அ.தி.மு.க ஆதரவு!
இந்தச் சம்பவத்துக்குப் பின், நீண்ட கால தி.மு.க அனுதாபியான விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அ.தி.மு.க-வின் பக்கம் சாய ஆரம்பித்தார். 2011 சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கியது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஜெயலலிதாவை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அ.தி.மு.க பலவீனமாக இருக்கும் சில தொகுதிகளில் விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தி.மு.க-வுக்கு எதிராகத் தீயென வேலை செய்ததாக பரவலாக அரசியல் நோக்கர்களால் பேசப்பட்டது.

விஜய் ரசிகர்கள் வேலை செய்ததால்தான் அந்த இடங்களில் அ.தி.மு.க வெற்றிபெற்றது என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அ.தி.மு.க-வின் வெற்றிக்கு விஜய் ரசிகர்களும் சிறு காரணம் எனலாம்.
ஜெயலலிதா முதல்வர் பதவியேற்ற பின் மீண்டும் அவரை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி எஸ்.ஏ.சி-யும் விஜய்யும் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சி இப்படி சொன்னார்.
ராமாயணத்தில் ராமருக்கு அணில் உதவியது போல... அ.தி.மு.க வெற்றிக்கு நாங்களும் அணில் போல உதவி செய்திருக்கிறோம்.எஸ்.ஏ.சி
எஸ்.ஏ.சி கொடுத்த இந்தப் பேட்டிக்குப் பிறகுதான் விஜய் ரசிகர்களை சமூக வலைதளங்களில் `அணில்' என்று அழைக்கும் டிரெண்ட் ஆரம்பமானது.
இதைத் தொடர்ந்து பட விழா ஒன்றில் கலந்துகொண்டார் விஜய். அந்த விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் ``ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திவிட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் தம்பி விஜய்'' என்றார். சீமானின் இந்தப் பேச்சு அ.தி.மு.க-வினரை கொதிப்படையச் செய்தது.

இதற்கிடையில் தன்னை ஆளும்கட்சியைச் சேர்ந்தவராகவே காட்டிக்கொண்டார் விஜய். 2011 தீபாவளிக்கு வெளியான விஜய்யின் `வேலாயுதம்' படத்தின் சாட்டிலைட் உரிமை ஜெயா டி.வி-க்கு வழங்கப்பட்டது.
`வேலாயுதம்' படத்தில், `இது எதிர்க்கட்சிக்காரர்களின் சதி' என்று ஒரு வசனம் வரும்; அந்த வசனத்துக்கு மறு வசனம் பேசும் விஜய் `நல்லவேளை நான் ஆளும்கட்சி' என்று சொல்லியிருப்பார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும், 150 சீட்களை கைப்பற்றித் தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தது அ.தி.மு.க. தே.மு.தி.க 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. `அ.தி.மு.க-வின் பிரமாண்ட வெற்றியில் எங்களுக்கும் பங்குண்டு' என்று தே.மு.தி.க-வினர் மார்தட்டிக் கொண்டனர். ஆனால், தனிப்பெரும்பான்மையாகக் கிடைத்த வெற்றியைக் கூட்டணி கட்சிகளோடுகூட பங்கு போட்டுக்கொள்ள ஜெயலலிதா விரும்பவில்லை.

தி.மு.க வெறும் 23 சீட்களை மட்டுமே ஜெயித்திருந்த காரணத்தால் தே.மு.தி.க எதிர்க்கட்சியானது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அதன்பின்னர் சட்டசபையிலேயே இரண்டு கட்சிகளும் மோதிக்கொண்டன. தே.மு.தி.க-வின் கொறடா சந்திரகுமார், பேருந்துக் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றைப் பற்றிப் பேசியதுதான் இரண்டு கட்சிகளும் சட்டமன்றத்திலேயே மோதிக் கொண்டதற்கு முக்கியக் காரணம். மோதல்களுக்குப் பின் விஜயகாந்த் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டார். அதன்பின் பேசிய ஜெயலலிதா...
அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் தே.மு.தி.க-வுக்கு இத்தனை உறுப்பினர்கள் கிடைத்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தும் கிடைத்தது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேராவிட்டால் தே.மு.தி.க-வுக்கு கடந்த தேர்தலில் ஒரு இடம்கூடக் கிடைத்திருக்காது. அவர்களுடன் கூட்டணி சேர்ந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன். இனிமேல் தே.மு.தி.க-வுக்கு இறங்குமுகம்தான்.சட்டமன்றத்தில் ஜெயலலிதா
29 சீட்கள் ஜெயித்த கூட்டணி கட்சியோடுகூட வெற்றியைப் பகிர்ந்துகொள்ளாமல் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று பேசிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விஜய்யின் தந்தையும் சீமானும் பேசியது நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இதுவரையிலும்கூட ஜெயலலிதா விஜய்யைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 2011 டிசம்பரில் தமிழகத்தில் தானே புயல் கோரதாண்டவம் ஆடியது. கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது தானே புயல். அந்தச் சமயத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் நிவாரண உதவித் தொகையை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேரில் சந்தித்து வழங்கினர். ஆனால், விஜய்யோ புதுச்சேரி, கடலூர் ஆகிய பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று உதவிகளை வழங்கினார்.

புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நிவாரணப் பொருள்களைப் பொதுமக்களுக்கு வழங்கினார் விஜய். அங்கு விஜய்யைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் சுப்பையா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடலூர் கம்மியாப் பேட்டை பகுதியில் பிரமாண்ட மேடையமைத்திருந்தனர் விஜய் ரசிகர்கள். அங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய்.
கடலூர் கம்மியாப் பேட்டையைச் சேர்ந்த மீனவர்களுக்கு புதிய மீன்பிடி படகுகளையும் நிவாரணப் பொருள்களையும் வழங்கினார் விஜய். இந்த நிகழ்வில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்தது. விஜய்யின் 50-வது படமான `சுறா' மிகப் பெரிய தோல்விப் படமாக இருந்தாலும், விஜய் மீனவராக நடித்த காரணத்தினால் மீனவ மக்களிடத்தில் விஜய்யின் செல்வாக்கு அதிகரித்திருந்ததை அந்தக் கூட்டம் நிரூபித்தது.

பொதுவாக எம்.ஜி.ஆர் செல்லும் கூட்டங்களில், வயதான தாய்மார்கள் எம்.ஜி.ஆரை முத்தமிடுவது போன்ற புகைப்படங்களையும் விடியோக்களையும் நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அதேபோன்று கடலூர் கூட்டத்தில் விஜய்க்கு வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் முத்தமிடும் புகைப்படம் வைரலானது. விஜய் ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களைக் கொண்டு `தலைவா வா... தலைமையேற்க வா' என்பது போன்ற வாசகங்களைக் கொண்ட பேனர்களையும் போஸ்டர்களையும் தமிழகத்தின் சில இடங்களில் வைத்தது அ.தி.மு.க-வினரை கொதிப்படையச் செய்தது.
தாய்மார்கள் கூட்டம்
விஜய்யின் `வேலாயுதம்' படத்தின் இசை வெளியீட்டு விழா 2011-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்றது. அங்கும் எக்கச்சக்க கூட்டம் கூடியது. அதன்பின் 2012-ம் ஆண்டு வெளியான `நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அந்த கல்லூரி நிர்வாகம் கிளாஸ் வாரியாகப் பிரித்து டிக்கெட் விற்பனை செய்தது. காசு கொடுத்தும் விஜய்யைப் பார்க்க அங்கு ஏராளமானவர்கள் கூடினர்.
இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த விழாவுக்கு விஜய் சென்றாலும் அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூடுவது, குறிப்பாகப் பெண்கள் கூட்டம் கூடுவது ஜெயலலிதாவிற்குப் பிடிக்காத விஷயமாக அமைந்தது.

விஜய்க்குப் பெண் ரசிகைகள் ஏராளம். குறிப்பாக பி,சி சென்டர்களில் திருப்பாச்சி, சிவகாசி ஆகிய சென்டிமென்ட் படங்களின் மூலம் எல்லா வயதைச் சேர்ந்த பெண்களையும் கவர்ந்து வைத்திருந்தார் விஜய். பி, சி சென்டர்களில் உள்ள பெண் ரசிகைகளைத் திருப்திப் படுத்துவதற்காகத்தான் `ஜில்லா', `பைரவா' போன்ற சென்டிமென்ட் படங்களில் மதுரை, நெல்லை என்று சென்னை அல்லாத நகரங்களைச் சார்ந்த இளைஞராக அவ்வப்போது நடித்து வருகிறார் விஜய்.
தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே பலம் வாய்ந்த கட்சிகள்தான். ஆனால், தாய்மார்கள் ஆதரவை அதிகம் பெற்ற கட்சி அ.தி.மு.க-தான். அதே தாய்மார்கள் கூட்டம் விஜய்யைக் காணக் கூடுவதை ஜெயலலிதா விரும்பவில்லை.
துப்பாக்கி பிரச்னை!
2012 தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி படத்தின் ரிலீஸுக்கு முன்பு, `இஸ்லாமியர்களைத் தவறாக இப்படம் சித்திரிக்கிறது' என்று இஸ்லாமிய அமைப்புகள் விஜய்க்கு எதிராகக் கிளம்பின. இந்தப் பிரச்னைகளுக்குப் பின்னும் ஜெயலலிதாதான் இருக்கிறார் என்ற பேச்சுகள் அப்போது அடிபட்டன. இந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி-யும் இஸ்லாமிய அமைப்புகளிடம் `எந்த உள்நோக்கத்தோடும் இந்தப் படத்தில் காட்சிகள் அமைக்கப்படவில்லை. அந்தக் காட்சிகள் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என்றனர். மேலும், எஸ்.ஏ.சி ``விஜய் இனி வரும் ஏதாவது ஒரு படத்தில் நிச்சயம் இஸ்லாமியராக நடிப்பார்" என்று உறுதியளித்த பின் துப்பாக்கி படம் சொன்ன தேதியில் வெளியானது.

இதையடுத்து, 2013-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் விஜய்யின் பிறந்தநாள் விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டு மேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், அந்த விழாவுக்கு அ.தி.மு.க அரசு எதிராக நின்ற காரணத்தால் ஏ.எம்.ஜெயின் கல்லூரி அனுமதி மறுத்தது. பின்னர் மேடை கலைக்கப்பட்டது.
தலைவா பிரச்னை!
இதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருந்தது விஜய்யின் `தலைவா'. இந்தப் படத்தின் பெயரும் பெயருக்குக் கீழே டேக் லைனாக இருந்த `டைம் டூ லீட்' என்பதும் வெள்ளை சட்டையில் விஜய் அரசியல் பேசியதும் அ.தி.மு.க-வினரையும் ஜெயலலிதாவையும் சூடேற்றியது. ஆகஸ்ட் 9-ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், 9 திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனால் எந்த திரையரங்கும் தலைவா படத்தை வெளியிட முன்வரவில்லை.

ஆகஸ்ட் 8-ம் தேதியன்று, விஜய்யும் எஸ்.ஏ.சி-யும் கொடநாட்டுக்குச் சென்றனர். காலை 9.30 மணியளவில் அங்கு சென்றவர்களுக்கு மாலை வரை ஜெயலலிதாவைக் காண அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் மீண்டும் சென்னைக்குத் திரும்பினர். ஆகஸ்ட் 9-ம் தேதியன்று தமிழகத்தைத் தவிர உலகம் முழுவதும் தலைவா படம் வெளியானது. தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் பலரும் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களுக்குத் `தலைவா' படத்தைக் காணப் படையெடுத்தனர்.
அடுத்த நாளே படம் நல்ல பிரின்ட்டில் இணையத்தில் வெளியானது. இதன்பின் ஆகஸ்ட் 14-ம் தேதியன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகர் விஜய். அந்த வீடியோவில்,
தலைவா படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியாகவில்லை. தியேட்டர்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்ததால் தமிழ்நாட்டில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் இருக்கிறோம். இது விஷயமாகப் பேச மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறோம். மிக விரைவில் அவர்களைச் சந்திக்க வாய்ப்புக் கொடுக்கப்படும் என்று நம்புகிறோம். அம்மா தமிழகத்துக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறார்கள். தமிழகத்தை முதல் மாநிலமாகக் கொண்டு வர உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு இவ்வளவு நல்ல விஷயங்களைச் செய்யும் அவர்கள், இந்த தலைவா பிரச்னையிலும் தலையிட்டுக் கூடிய சீக்கிரம் படம் வெளியாக உதவி செய்வார்கள் என்று நம்புகிறோம்.நடிகர் விஜய்
இந்த வீடியோவில் கையைக் கட்டிக் கொண்டு மிகவும் அமைதியாகப் பேசியிருந்தார் விஜய்.
தலைவா படப் பிரச்னையில் ஜெயலலிதா சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெரிந்துகொண்ட காரணத்தால் திரையுலகைச் சேர்ந்த எவரும் தலைவா படத்துக்கு ஆதரவு தர முன்வரவில்லை. ஆனால், தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் விஜய்க்கு ஆதரவாகப் பேசினர். அதில் முக்கியமானவர் சமீபத்தில் மறைந்த திமுக எம்.எல்.ஏ அன்பழகன்.
படக்குழு ஒப்புக் கொண்டால் என் அன்பு பிக்சர்ஸ் மூலம் `தலைவா' படத்தைத் தமிழகத்தில் 300 திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளேன்.அன்பழகன்
தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு டி.வி நிகழ்ச்சியில், ``தமிழ் சினிமா ஜெயலலிதா ஆட்சியில நல்லாயில்ல... நடிகர் விஜய்கிட்ட கேட்டுப் பாருங்க தலைவா படத்தப்போ எவ்வளவு கஷ்ட்டப்பட்டார்னு..." என்று விஜய்யைப் பற்றி பேசியிருந்தார்.
விஜய் கையைக் கட்டிக்கொண்டு பேசிய வீடியோ வெளியானதிலிருந்து 6-வது நாள் அதாவது ஆகஸ்ட் 20-ம் தேதியன்று தமிழகத்தில் தலைவா படம் வெளியானது. அதன்பின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் விஜய் அந்த அறிக்கையில்...
பல வேலைகளுக்கு நடுவிலும் இப்பிரச்னைக்குத் தீர்வு கண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னோடு பொறுமை காத்த ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தலைவா படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.விஜய்
இந்த சம்பவத்திற்குப் பின் விஜய் எந்தக் கட்சிக்கும் சார்பாகப் பேசவில்லை. மிகவும் அடங்கியிருந்தார். ஜெயலலிதா மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பெரிய நட்சத்திரங்களில், முதல் ஆளாக வந்து மரியாதை செய்துவிட்டுப் போனவர் விஜய்தான்.

ஜெயலலிதா மறைந்த பின்னர் மீண்டும் அரசியல் பேச ஆரம்பித்த விஜய், படங்களிலும் சரி, இசை வெளியீட்டு விழாக்களிலும் சரி ஆளும்கட்சியான அ.தி.மு.க-வை சீண்டிப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
`தலைவா' படப் பிரச்னைகளுக்குப் பின் விஜய் அடக்கி வாசித்தார் என்பது உண்மைதான் என்றாலும், 11 நாள்கள் தமிழகத்தில் தாமதமாக வெளியானதால், விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் அந்தப் படம் மிக முக்கியமானதாக அமைந்தது.
அதன் காரணமாகத்தான் இன்று வரை ஆகஸ்ட் 9-ம் தேதியை மறக்காமல் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

1996-ல் போயஸ் கார்டனில், ஜெயலலிதா கார் வருவதால் ரஜினியின் காருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விஷயத்துக்குப் பின்தான் ``ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் யாராலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது" என்று பேசினார் ரஜினி. இதுதான் ரஜினிக்கு அரசியலில் ஆரம்பப் புள்ளியாகப் பேசப்பட்டது. அதேபோல விஜய் அரசியலுக்கு வந்தால், அதன் ஆரம்பப் புள்ளியாக இந்த `தலைவா' படப் பிரச்னைதான் பேசப்படும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.