அலசல்
அரசியல்
Published:Updated:

விசாரணைக்கு வரும் சி.ஏ.ஏ வழக்குகள்... எப்படியிருக்கும் உச்ச நீதிமன்ற அணுகுமுறை?!

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா
பிரீமியம் ஸ்டோரி
News
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா

தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்ற பிறகு, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

நீண்டகாலமாகக் கிடப்பிலிருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (2019) எதிரான வழக்குகளை விசாரிக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, வழக்கு விசாரணை எந்தத் திசையில் செல்லும் என்று விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமானது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு இச்சட்டம் (சி.ஏ.ஏ) வழிவகை செய்கிறது. ஆனால், அந்த நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்கிறது சட்டம். கூடவே, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் தொடங்கப்பட்டால், காலங்காலமாக இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களும்கூட குடியுரிமையற்றவர்கள் ஆக்கப்படுவார்கள் என்பதால், சி.ஏ.ஏ-வுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

விசாரணைக்கு வரும் சி.ஏ.ஏ வழக்குகள்... எப்படியிருக்கும் உச்ச நீதிமன்ற அணுகுமுறை?!

உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட அரசியல் கட்சியினராலும், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளாலும் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, சி.ஏ.ஏ-வை நடைமுறைப்படுத்துவதற்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டது.

கடைசியாக, இந்த வழக்குகள் மீதான விசாரணை 2021-ம் ஆண்டு, ஜூன் 15-ம் தேதி நடைபெற்றது. அதன் பிறகு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்ற பிறகு, செப்டம்பர் 12-ம் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது, “உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்கள் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) ஆகியவற்றின் வெவ்வேறு பிரிவுகளுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. எனவே, இந்த மனுக்களைத் தனித்தனியாக வகைப்படுத்த வேண்டும்” என்று மத்திய அரசையும் வழக்குதாரர்களையும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்தப் பணியை மேற்கொள்வதற்கு நான்கு வார காலம் அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், மீண்டும் இந்த வழக்கை அக்டோபர் 31-ம் தேதி விசாரிக்கவிருக்கிறது. அதன் பிறகு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

யு.யு.லலித்
யு.யு.லலித்

தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்ற பிறகு, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சி.ஏ.ஏ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை எப்படி இருக்குமோ என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் இதை உற்றுநோக்குகின்றன!