
தீராப்பகை... திடுக் குற்றச்சாட்டு...
சென்னையில் தொழிலதிபரைக் கடத்தி, சொத்துகளை மிரட்டி எழுதி வாங்கிய வழக்கில் காவல்துறை உதவி ஆணையர், ஆய்வாளர் உட்பட 10 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒருவரை ஒருவர் சிக்கவைக்க நடத்தும் ஈகோ யுத்தம்தான் தமிழகக் காவல்துறை வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது!
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், வெங்கடேசன் என்பவரின் சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு புராஜெக்ட்களைச் செய்து கொடுத்துவந்தார். அந்த வகையில் ராஜேஷுக்கு 5.5 கோடி ரூபாயை வெங்கடேசன் கொடுக்கவேண்டியிருந்தது. இதை 2015-ம் ஆண்டுவாக்கில் செட்டில் செய்துவிட்டார் வெங்கடேசன். அதன் பிறகே வில்லங்கம் விளையாடத் தொடங்கி வழக்கு, கைது, ஐ.பி.எஸ் அதிகாரிகள் மோதல் என நீண்டிருக்கிறது. இதன் பின்னணியை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சிலர் நம்மிடம் விவரித்தார்கள்...

“வெங்கடேசன் தனது தொழிலுக்காக ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த சிவா ராவ், சீனிவாச ராவ் ஆகியோரிடம் 15 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். வெங்கடேசனிடம் அவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ‘ராஜேஷ் எனக்குப் பணம் தர வேண்டியிருக்கிறது; அவர் தந்துவிட்டால், உங்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று கூறியிருக்கிறார். இதையடுத்துத்தான், ஆந்திர கும்பல் ராஜேஷிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறது. இந்த விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ராஜா, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அகில இந்திய இந்து மகாசபைத் தலைவர் ஸ்ரீ உள்ளிட்டோர் ஆந்திர கும்பலுக்காகக் களமிறங்கியிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ஆந்திர கும்பல், ராஜேஷ் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. தொடர்ந்து அப்போதைய திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார் உள்ளிட்ட காவல் அதிகாரிகளின் உதவியுடன் ராஜேஷ் பெயரிலிருந்த சில சொத்துகளை மிரட்டி எழுதி வாங்கியது ஆந்திர கும்பல். ஒருகட்டத்தில் இவர்களின் டார்ச்சர் தாங்க முடியாத ராஜேஷ், தனது இருப்பிடத்தை கோவைக்கு மாற்றிக்கொண்டார்” என்றவர்கள், அதன் பின்பு நடந்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஈகோ மோதலையும் பகிர்ந்துகொண்டார்கள்.
“கோவையில்தான் ராஜேஷுக்கு ஐ.பி.எஸ் அதிகாரியான அருணின் அறிமுகம் கிடைத்தது. ஆந்திர கும்பல் தன்னிடம் சொத்துகளை மிரட்டி எழுதி வாங்கிய விஷயத்தை அருணிடம் சொல்லியிருக்கிறார் ராஜேஷ். தொடர்ந்து அருணின் அறிவுரைப்படி அப்போதைய டி.ஜி.பி திரிபாதியிடம் ராஜேஷ் புகார் அளித்தார். அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில் இறங்கிய சி.பி.சி.ஐ.டி போலீஸார் திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ பாண்டியராஜன், காவலர்கள் கிரி, ஜோசப், ஜெயக்குமார், இந்து மகாசபைத் தலைவர் ஸ்ரீ, ஆந்திராவைச் சேர்ந்த பிரமுகர்கள் என 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஸ்ரீயைக் கைதுசெய்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டார்கள். இந்தநிலையில்தான், இந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி தினகரனின் பெயரைச் சேர்க்கும் முயற்சி நடக்கிறது. எதிர் முகாமான தினகரன் தரப்பிலும், அருணை இந்த வழக்கில் சிக்கவைக்கக் காய்நகர்த்துகிறார்கள்” என்றார்கள்.
தினகரனுக்கு நெருக்கமான அதிகாரிகள் சிலரோ, “இந்தப் புகார் அப்போதைய போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் கவனத்துக்கு வந்ததும், துணை கமிஷனர் ஒருவரின் தலைமையில் இன்னொரு போலீஸ் டீம் விசாரணை நடத்தியது. அதில், இந்த விவகாரத்தில் தினகரனுக்குச் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்” என்றார்கள்.
அருணுக்கு நெருக்கமான அதிகாரிகளோ, “சென்னை வடக்குக் கூடுதல் ஆணையராக தினகரன் இருந்தபோது அவரது உத்தரவுப்படிதான் துணை கமிஷனர் சிவக்குமார் இருதரப்பினரிடமும் பஞ்சாயத்து செய்திருக்கிறார். அதை சிவக்குமாரும் பலரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு அருணை இந்த வழக்கில் சிக்கவைக்க தினகரன் முயல்கிறார்” என்றார்கள்.

இந்த விவகாரம் சூடு பிடித்துவந்த நிலையில், சமீபத்தில் தினகரன் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி பதவியிலிருந்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தினகரனிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். “என்னைப் பிடிக்காத சிலர் என்னைப் பணியிலிருந்து தூக்கிவிட வேண்டும் என்று என்மீது பொய்க் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கூறிவந்தனர். அதில் எந்த உண்மையும் இல்லாமல் போனதால், இந்த வழக்கில் என்னைச் சிக்கவைக்கப் பார்க்கிறார்கள். எனக்கும் இந்த வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றார் திட்டவட்டமாக.
திருச்சி மாநகர காவல் ஆணையராக இருக்கும் அருணிடம் கேட்டால், “இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தினகரன் வீட்டில் பொருள்கள் இடம் மாறியிருந்தால்கூட அதற்கும் நான்தான் காரணம் என்பார். தினகரன் சென்னை வடக்குக் கூடுதல் ஆணையராக இருந்தபோது ஒரு குடும்பத்தை மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கினார். அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் முதல் உதவி கமிஷனர் வரை தினகரன் சொல்லித்தான் இந்தக் குற்றத்தைச் செய்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். சி.பி.சி.ஐ.டி இந்த வழக்கை விசாரித்து, உண்மைத்தன்மை இருப்பதாலேயே வழக்கு பதிவு செய்திருக்கிறது. இதில் என்னைக் குறைசொல்வது எந்தவிதத்தில் நியாயம்?” என்றார் காட்டமாக.