சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“களிமண் பொம்மைகளும் மண்பாண்ட சமையலும் மக்களுக்குப் பிடிக்குது!”

மண்பாண்டத் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
மண்பாண்டத் தொழில்

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் வழங்கப்படும் மாநில விருதை 1997-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் பெற்றேன்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

மண்பாண்டத் தொழில் நலிவடைந்து போனாலும், மாற்றி யோசித்தால் எதுவும் சாத்தியம். இதை நிரூபிக்கும் வகையில், பலருக்கும் பயிற்சி கொடுத்து களிமண் கைவினைக் கலைஞர்களாகவும் தொழில்முனைவோராகவும் மாற்றிவருகின்றனர், கஜேந்திரன் குடும்பத்தினர்.

திண்டுக்கல்லிலிருந்து நத்தம் சாலையில் நொச்சி ஓடைப்பட்டி பகுதியில் சாலையோரத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட பெரிய குதிரையும், யானையும் நம்மை வரவேற்கின்றன. உள்ளே நுழைந்ததும் களிமண்ணால் ஆன அம்மன், முருகன் உள்ளிட்ட கடவுள் சிலைகளைக்கொண்ட சிறு கோயில். புற்களை மேயும் மான்கள், புலிகளின் ஊடாக படிகளில் ஏறி வீட்டுக்குச் சென்றோம். மண்சட்டிகளை அடுக்கியதுபோல அமைக்கப்பட்டிருந்த தூண்களுக்கு நடுவே அமர்ந்தோம். வீட்டைச் சுற்றியிருந்த ஷெட்டில் ஆண்கள், பெண்கள் என 50 பேர் மும்முரமாகக் களிமண் கைவினைப் பொருள்களைச் செய்துகொண்டிருந்தனர். பிஸியாக இருந்த கஜேந்திரன் நம்மை வரவேற்று, மனைவி வாசுகி, மகன் கலைச்செல்வன், மருமகள் சந்தானலட்சுமி ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார்.

அவர்களிடம் பேசினேன். ``கலைஞர்களின் புகலிடமான பாண்டிச்சேரிதான் எங்கள் பூர்வீகம். களிமண் சிலைகள் செய்வதில் மூத்த கலைஞரும், பத்ம விருது பெற்றவருமான வி.கே.முனுசாமி என் குருநாதர். அவரிடம் கற்கும்போது என்னுடன் சேர்ந்து பயின்ற உறவினரான வாசுகியைக் கரம் பிடித்தேன். எங்களுக்கு கலைச்செல்வன், நேசப்ரியன் என்ற இரு மகன்களும் கலைவாணி என்ற மகளும் இருக்கின்றனர்.

“களிமண் பொம்மைகளும் மண்பாண்ட சமையலும் மக்களுக்குப் பிடிக்குது!”

எங்கள் முன்னோர்கள் மண்பாண்டத் தொழிலில் இருந்தவர்கள்தான். பிளாஸ்டிக் பொருள்களின் வருகையால் படிப்படியாக எங்கள் தொழில் நலிவடையத் தொடங்கியது. பலரும் வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனர். எங்கள் குருநாதர் மீதிருந்த ஈர்ப்பின் காரணமாக இந்தக் கலையைக் கற்று, இந்தத் தொழிலைவிட்டுப் போகவே கூடாது என்ற உறுதியில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நாங்களும் மண்பாண்டங்கள் மட்டுமே செய்துகொண்டிருந்தால், என்றோ காணாமல்போயிருப்போம். ஆனால், எங்கள் குருநாதரிடம் அம்மன் சிலைகள், அய்யனார், கருப்பசாமி உள்ளிட்ட காவல் தெய்வங்கள், விநாயகர், முருகன் உள்ளிட்ட கடவுள்களின் சிலைகள், களிமண்ணால் செய்யப்படும் அழகுப்பொருள்களை உருவாக்கக் கற்றுக்கொண்டிருந்தோம். அதுதான் எங்களைக் காப்பாற்றியது.

தொடக்கத்தில் திண்டுக்கல்லில் சிறிய அளவில் மண்பாண்டப் பொருள்களையும், கைவினைப் பொருள்களையும் தயாரித்து விற்பனை செய்துவந்தோம். பிறகு இங்கு பெரிய ஷெட் அமைத்து யானை, குதிரை, மான் உள்ளிட்ட விலங்குகளின் சிலைகள், துளசி மாடம், பூந்தொட்டிகள், 50 வகையான விளக்குகள், மண்பானைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், கடவுள்களின் சிலைகள் ஆகியவற்றைத் தயாரித்து வியாபாரம் செய்து வருகிறோம். இதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவருகிறோம்.

“களிமண் பொம்மைகளும் மண்பாண்ட சமையலும் மக்களுக்குப் பிடிக்குது!”

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் வழங்கப்படும் மாநில விருதை 1997-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் பெற்றேன். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருணாநிதிக்கு குதிரை பொம்மையை பரிசாக அளிக்கச் சொல்லியிருந்தார்கள். அதனால் நானும் குதிரை பொம்மையை அவரிடம் கொடுத்தேன். ஆனால், அவர் எனது மேஜையில் இருந்த யானை பொம்மைதான் வேண்டும் எனக் கேட்டு வாங்கிச் சென்றார். மூன்று ஆண்டுகள் கழித்து கோவையில் நடந்த கண்காட்சி ஒன்றில் பங்கேற்க கருணாநிதி வந்திருந்தார். அப்போது அவர் எனது மேஜைக்கு அருகே வந்து பொருள்களைப் பார்வையிட்டபோது யானை பொம்மையை கொடுத்தேன். `ஏற்கெனவே நீங்கள் கொடுத்த யானை பொம்மை எனது மேஜையில் இருக்கிறது. எனவே, இதை வேறு யாருக்காவது விற்பனை செய்துவிடுங்கள்' என்று கூறிவிட்டுச் சென்றார். துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் திண்டுக்கல்லுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபோது அவருக்குப் பரிசளிக்க குதிரை, யானை, மனிதர்கள் எனச் சிறுதொகுப்பு கொண்ட ஒரு பரிசுப்பொருளைத் தயார் செய்து கொடுத்தேன். அதை வாங்கிய ஸ்டாலின் `இந்தப் பரிசு என் வீட்டுக்குச் செல்ல வேண்டும்' என்று தனது உதவியாளரிடம் அழுத்தமாகக் கூறினார். இவையெல்லாம் பெரும் உத்வேகத்தைக் கொடுத்தன'' என்றார்.

“களிமண் பொம்மைகளும் மண்பாண்ட சமையலும் மக்களுக்குப் பிடிக்குது!”

``நானும் விருதுகள் வாங்கியிருக்கிறேன்'' என்று தனது நினைவுகளைப் பகிர்ந்தார் வாசுகி. ``சென்னையில் 2003-ல் நடந்த விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கையால் சிறந்த களிமண் கைவினைக் கலைஞருக்கான பூம்புகார் மாநில விருது பெற்றேன். அப்போது அவர் `இது போன்ற தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த தொடர்ந்து உழையுங்கள்’ என்றார். அதேபோல வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதியிடம் பாராட்டு பெற்றேன். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த ஸ்டாலினுக்கு அவர் முன்பாகவே உடனடியாக சிறிய யானை சிலையைச் செய்து கொடுத்தேன். அவர் என்னை வெகுவாகப் பாராட்டிவிட்டுச் சென்றார்.

“களிமண் பொம்மைகளும் மண்பாண்ட சமையலும் மக்களுக்குப் பிடிக்குது!”

எங்கள் மூத்த மகன் கலைச்செல்வன் அனிமேஷன் படித்துவிட்டு நல்ல வேலையில் இருந்தார். வேலையில் திருப்தி இல்லாமல் அவர் படித்த கல்வியை எங்கள் தொழிலில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். ஒருகாலத்தில் மண்ணைத் தரையில் போட்டு, காலால் மிதித்துக் குழைப்போம். சக்கரத்தை ஒரு கையில் சுழற்றிக்கொண்டே மறு கையால் பானை வடிப்போம். இப்போது அதற்கெல்லாம் மெஷின் வந்து, வேலை எளிதாகிவிட்டது. முன்பு சூளையில் பொருள்களுக்குத் தீ மூட்டினால் புகை ஏற்படும். தற்போது புகை ஏற்படாதவாறு மின்சூளை, ஆயில் சூளைகள் வந்துவிட்டன. இதனால் புதுமையான பொருள்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டோம். ஆனால், பொருள்களைக் கையால் மட்டுமே செய்கிறோம். சில இடங்களில் மெஷின், மோல்ட் அச்சு ஆகியவற்றைப் பயன்படுத்தி மண்பாண்டப் பொருள்களைத் தயார் செய்கிறார்கள். அதைப் பார்த்தவுடன் கண்டுபிடித்துவிட முடியும்.

தற்போது என் மருமகளும் கற்றுக்கொண்டு முழுநேரத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். என் இளைய மகன், மகள் ஆகியோரும் சிறுவயதிலிருந்தே மண்பாண்டப் பொருள்கள், சிலைகள் செய்ய கற்றுக்கொண்டுவிட்டனர். ஐடி துறையில் பணியாற்றிவரும் அவர்களும் விரைவில் எங்களுடன் இணையவிருக்கின்றனர். தொடக்கத்தில் உள்ளூரில் மட்டுமே விற்பனையாகிவந்த பொருள்கள், தற்போது தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா வரை செல்கின்றன. இந்தத் தொழிலை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பது எங்களின் இலக்கு’’ என்கிறார் வாசுகி.

கஜேந்திரன் குடும்பத்தினருடன்...
கஜேந்திரன் குடும்பத்தினருடன்...

``நெருக்கடியான காலகட்டங்களைக் கடந்து தொழிலை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். சில ஆண்டுகளாக களிமண் எடுக்கவே மிகவும் சிரமப்பட்டிருக்கிறோம். அனுமதிக்காக அலைக்கழிக்கப்பட்டிருக்கிறோம். பெரும் சிரமத்துக்கு இடையே மண் எடுத்து, பக்குவப்படுத்தி, சக்கரத்தில் வைத்து பானைகளைத் தயாரித்தால், வாங்க ஆள் இருக்காது. தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது. குடும்பம் குடும்பமாக எங்களைத் தேடி வருகின்றனர். மண்பாண்டச் சமையலுக்கு மக்கள் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். பிளாஸ்டிக்குக்கு மாற்றாக அனைத்தையும் மண்பாண்டங்களாகத் தயாரிக்க முடியும்.

மண் தண்ணீர் பாட்டில், கரண்டி, மண் தட்டு, குழம்புச் சட்டிகள், தண்ணீர்ப் பானைகள் என அனைத்தையும் மக்கள் விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளனர். இதில் சுவை நன்றாக இருக்கும்; உணவும் விரைவில் கெட்டுவிடாது. சட்டியில் சூடேற்ற நேரம் அதிகமாகும், பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான். மண்பாண்டப் பாத்திரங்கள் செய்வதற்கென களிமண்ணைத் தேர்வுசெய்து, பதப்படுத்திச் செய்கிறோம். இதனால் எங்களின் மண்பாண்டங்கள் எளிதில் உடையாது.

பிளாஸ்டிக் தொட்டிகளில் வளர்க்கப்படும் செடிகளைவிட மண்தொட்டியில் வளர்க்கப்படும் செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள், காய்கள், கனிகளைக் கொடுக்கின்றன. குறிப்பாக, மூலிகைச் செடிகள் வளர்க்க தொட்டிகளை வாங்குகின்றனர். துளசிமாடத் தொட்டிகள் அதிகம் விற்கின்றன.

“களிமண் பொம்மைகளும் மண்பாண்ட சமையலும் மக்களுக்குப் பிடிக்குது!”

குழந்தைகளுக்கான களிமண் பொம்மைகள், சொப்புச் சாமான்கள், சேமிப்பு உண்டியல்கள், மேஜிக் விளக்குகள், குபேர பானை அடுக்குகள் செய்கிறோம். அழகுச்செடிகள் வளர்ப்புக்கான தொட்டிகளை வாத்து, யானை, குதிரை போன்ற உருவங்களில் செய்து கொடுக்கிறோம். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டது. கொரோனா கால

கட்டத்துக்குப் பிறகு நிறைய பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு மண்பாண்டச் சொப்புச் சாமான்கள், மூலிகைச்செடி வளர்ப்புக்கான தொட்டிகள், மண்பாண்டப் பாத்திரங்கள் வாங்கத் தொடங்கினர்.

தென் மாவட்டங்களில் கிராமத்து காவல் தெய்வங்களை சிலையாகச் செய்து பாரம்பர்ய முறைப்படி திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதற்காக அய்யனார், கருப்பு, அம்மன் சிலைகளை 6 அடி உயரம் வரை செய்து கொடுக்கிறோம். எங்கள் குருநாதர் 30 அடி உயர சாமி சிலைகளை செய்யக்கூடியவர். ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை விரதமிருந்து பக்தியோடு சிலைகளைச் செய்வோம். அப்போதுதான் கடவுள் சிலைகள் நன்றாக அமையும். கடவுள் சிலைகள் முதல் அனைத்துப் பொருள்களையும் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியாகக் காயவைத்து அடுக்கடுக்காகச் செய்ய வேண்டும். அப்போதுதான் தரமாக இருக்கும்.

அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பயிற்சி முகாம்கள் தவிர, கல்லூரி மாணவர்கள், கைவினைப் பொருள்கள் தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்கள், மகளிர் குழுவினர் என சுமார் ஆயிரம் பேருக்குப் பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்களில் பலரும் தனியாகத் தொழில் தொடங்கி சிறப்பாகச் செய்துவருகின்றனர். குறிப்பாக நல்லாம்பட்டி மகளிர்குழுவைச் சேர்ந்த 12 பெண்கள் களிமண் கைவினைக் கலைஞர்களாக மாறி நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் நேரடியாகக் கல்லூரிகளுக்கும் சென்று பயிற்சியளித்துவருகிறோம். கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்தபோதும் எங்கள் பயிற்சி பலருக்கும் வாய்ப்பைக் கொடுத்தது. சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் குழுவினர் எங்களைத் தேடி வந்தனர். அவர்களுக்கும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு கொடுத்தோம்.

“களிமண் பொம்மைகளும் மண்பாண்ட சமையலும் மக்களுக்குப் பிடிக்குது!”

கோயில் திருவிழாவுக்கு சாமி சிலைகள், விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜைக்கான கொலு, கார்த்திகை என சீஸன் இருந்து கொண்டேயிருக்கும். அதுமட்டுமல்லாமல் நாட்டுப்பசுக்களின் சாணத்திலிருந்து உரம் தயாரிப்பதற்கான களிமண் கூம்புகளைச் செய்து கொடுக்கிறோம். மேலும், புதுமையான விளக்கு வகைகளை நாங்களே உருவாக்குகிறோம். இதனால் எப்போதும் வேலை இருந்துகொண்டேயிருக்கும்.

ஆர்வமும் திறமையும் கைகூடி வந்தால், ஒரு மாதத்தில்கூட கற்றுக்கொள்ள முடியும். கைகூடி வரவில்லையென்றால் 10 ஆண்டுகள் ஆனாலும் இந்தக் கலையைக் கற்க முடியாது. எங்களிடம் கற்க வருவோரிடம், `நாம் கற்றிருக்கும் பாரம்பர்யமான கலையை நவீன யுகத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுங்கள். அப்போதுதான் கலையும் தொழிலும் நலிவடையாது’ எனக் கூறி அனுப்புகிறோம்'' என்கிறார் கஜேந்திரன்.