
இப்போது ஃபேஸ்புக், ட்விட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் கூடாரம் அடித்துத் தங்கியிருக்கும் இடம் கிளப் ஹவுஸ்.
அமெரிக்க அதிபரைப் பார்த்து ஒன்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று ஆரப்பாளையம் பொதுக்கூட்ட மேடையில் இருந்து சவால்விடுவது, ‘என் பெண்டாட்டி என்ன பண்ணுனா தெரியும்ல?’ என்று மொக்கை ஜோக்கு களைப் பட்டிமன்ற மேடையில் அவிழ்த்துவிடுவது போன்றவற்றில் பேரார்வம் கொண்டவர்கள் தமிழர்கள். பிரபலங்களும் தலைவர்களும் பேசியதையே கேட்டு மகிழ்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்கள் இப்போது தாங்களே பேச்சாளர்களாகியுள்ளனர்.
ஏற்கெனவே ட்விட்டர் இணைய தளம் ட்வீட் இடுவதைத் தாண்டி ‘ஸ்பேசஸ்’ என்னும் உரையாடல் வசதியையும் ஏற்படுத்திக்கொடுத்தது. பல்வேறு தலைப்புகளில் பலர் தங்கள் கருத்துகளை ட்விட்டர் ஸ்பேசஸ் மூலம் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனந்த விகடன் சார்பாக எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவு மற்றும் கலைஞர்.மு.கருணாநிதி, இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோரின் பிறந்தநாள்கள், ‘ஃபேமிலிமேன் - 2’ குறித்த சர்ச்சைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ட்வீட்டர் ஸ்பேசஸ் நிகழ்வுகளை ஒருங் கிணைத்தோம். இப்போது ஃபேஸ்புக், ட்விட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் கூடாரம் அடித்துத் தங்கியிருக்கும் இடம் கிளப் ஹவுஸ்.

உங்கள் மொபைலில் ‘கிளப் ஹவுஸ்’ செயலியைத் தரவிறக்கம் செய்து, உங்கள் விவரங்களைப் பகிர்ந்து கொண்டால் போதும். உங்கள் விருப்பத்துக்கேற்ற உரையாடல் அறைகளை கிளப் ஹவுஸ் காட்டுகிறது. சினிமாவும் சாதியமும், ‘சிங்காரச் சென்னை திட்டம் அடித்தட்டு மக்களை பாதிக்குமா?’, ஸ்கிரீன் பிளே எழுதுவது எப்படி, ஒற்றைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் சந்திக்கும் சவால்கள் என்று விதவிதமான தலைப்புகளில் உரையாடுகிறார்கள். ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க ஆதரவுக் குழுவான அரக்கர்களுக்கும் இடையே நடந்த விவாதங்கள் சென்ற வார கிளப் ஹவுஸ் பரபரப்பு.
இன்னும் சில குழுக்கள் ‘நமக்கு எதுக்குப்பா சீரியஸ்’ என்று பாட்டும் கூத்துமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். தமிழ், மலையாளம், இந்தி என்று விதவிதமான குரல்கள் கிளப் ஹவுஸில் ஒலிக்கின்றன. ‘இரவு ஆடையின்றி உறங்குகிறீர்களா?’ என்று ஓர் உரையாடல். எட்டிப் பார்த்தால் சிக்குபவர்களை எல்லாம் ‘`நீங்க நைட்டு டிரஸ் போட்டுத் தூங்குவீங்களா, இல்லைன்னா..?” என்று கேட்கிறார்கள். எஸ்கேப் ஆகி ‘ஒயின்ஷாப்’ அறைக்குள் நுழைந்தால் ‘என்ன சரக்கு பிடிக்கும்?’ என்று உரையாடுகின்றனர்.

இப்படி ஜாலியான உரையாடல்கள் முதல் அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர், மாற்று சினிமா, நவீன இலக்கியம், டெக்னாலஜி என்று சீரியஸ் தலைப்புகள் வரை விதவிதமான உரையாடல்கள். இந்த உலகத்தில் நுழைந்தால் நிறைய ப்ளஸ்கள். ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்று மாவோ சொன்னதைப்போல் பலரின் கருத்துகள், அனுபவங்கள், ஆதங்கங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது. கிளப் ஹவுஸ் மூலம் புதிய நட்பு வட்டங்கள் பூக்கின்றன. அரசியல் ஆளுமைகள் முதல் சினிமாப் பிரபலங்கள் வரை இந்த கிளப் ஹவுஸ் உரையாடல்களில் பங்கேற்பதால், “நீட் தேர்வு எப்பதான் ரத்து ஆகும்?”, “அதென்ன வடசென்னை மக்களை ரவுடியாவே காட்டுறீங்க?” என்று (சட்டையைப் பிடிக்காமல் மைக்கைப் பிடித்து) கேட்கலாம் என்பது வரை ஏராளமான பலன்கள் உண்டு.
சரி இதில் பிரச்னையே இல்லையா என்றால், அது எப்படி சண்டையில கிழியாத சட்டையிருக்கும்? மாற்றுக்கருத்து உள்ளவர்கள் கெட்டவார்த்தையால் திட்டுவது, அவதூறுகளை அள்ளிவிடுவது என்று ரசாபாசமாவதும் உண்டு. பலர் தங்கள் மனதில் உள்ள சாதிய, மத, ஆணாதிக்க அழுக்குகளை அவிழ்த்து விட்டுச் சிக்கலில் சிக்கிக்கொள்வதும் உண்டு. மேலும் பலர் கிளப் ஹவுஸ் சுவாரஸ்யத்துக்கு அடிமையாகி 24 மணிநேரமும் அங்கேயே குடியிருக்கிறார்கள். எப்போது கிளப் ஹவுஸைத் திறந்தாலும் ‘வாட் இஸ் மை கருத்துன்னா...’ என்று யாராவது சவசவ என்று பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு நமக்குத் தேவையான, நம் ரசனைக்கு உகந்த உரையாடல்களைக் கேட்டால், பங்கெடுத்தால், ஆரோக்கியமான முறையில் உரையாடினால் கிளப் ஹவுஸில் எல்லா நாளும் இனியநாளே!
சரி, இந்தக் கட்டுரையை எழுதி முடித்துவிட்டு, ‘இப்போது என்னென்ன தலைப்புகளில் கிளப் ஹவுஸ் உரையாடல்கள் நடக்கின்றன?’ என்று திறந்துபார்க்கிறேன்.
