
இந்தியா முழுதும், 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநில கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன.
கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பவை கூட்டுறவு வங்கிகள்.
அவை இனி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாகக் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் அவசரச் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனால் சாமானிய மக்களின் பங்களிப்புடன் சிறப்பாகச் செயல்பட்டுவரும் கூட்டுறவு வங்கிகளின் தனி உரிமை பறிபோகும் என்கிற அச்சம் எழுந்துள்ளது. கிராமப்புறங்களில் இயங்கிவரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் இந்த வரம்புக்குள் வராது என்கிற அறிவிப்பையும் மத்திய அரசு கொடுத்துள்ளது. இது விவசாயிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயல் தலைவரான வழக்கறிஞர் ஈசன். ‘`கிராம தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் மாவட்டங்களில் இயங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. நிதி ஆதாரங்களை மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம்தான் கடன் சங்கங்கள் பெற்று வருகின்றன. கடன் சங்கங்களுக்கு இந்த அவசரச் சட்டம் பொருந்தாது என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு. குறிப்பாகச் சிறு குறு நடுத்தர விவசாயிகளைக் கந்து வட்டிக்கொடுமையிலிருந்து காப்பாற்றிவருவது தொடக்க வேளாண்மைச் சங்கங்கள்தான். விவசாயிகளால் தேர்வு செய்யப்படும் நிர்வாகக் குழுக்களின் கண்காணிப்பில்தான் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடு உள்ளது.
அவற்றில் முறைகேடுகள் இல்லை என்று கூற முடியாது. குறிப்பாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதில் பாராமுகம் காட்டிவரும் நிலையில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள்தான் அவர்களுக்குக் கைகொடுத்துவருகின்றன. பெரும்பாலும் உள்ளூர் பிரமுகர்களே நிர்வாகிகளாக இருப்பதால் தயக்கம் இல்லாமல் சங்கத்தில் சென்று தங்கள் பொருளாதாரத் தேவைகளை விவசாயிகள் பூர்த்தி செய்து வருகிறார்கள். ஆனால், கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ்வரும் பட்சத்தில், மொழி தெரியாத, முகம் தெரியாத நபர்கள் ஊழியர்களாகப் பணிபுரியும் வாய்ப்புள்ளது. அது விவசாயிகளை அந்நியப்படுத்திவிடும். எனவே இந்த அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்’’ என்றார்.

இந்தியா முழுதும், 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநில கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில், 8.6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்த வங்கிகளில் மொத்தம் 4.85 லட்சம் கோடி ரூபாய் வைப்புத்தொகை உள்ளது. இவற்றின் நிர்வாகம், அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சமீபத்தில், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடந்தது. இதனால், அந்த வங்கிகளின் வாடிக்கை யாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில்தான், கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறது மத்திய அரசு. இந்த நடவடிக்கைக்கு, சில அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன.
“கூட்டுறவு வங்கிகள் அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், அதன் செயல்பாடுகள் முறையாகத் தணிக்கை செய்யப்படுவதில்லை. சமீபத்தில் பி.எம்.சி வங்கியில் முறைகேடு நடந்தபோது, கூட்டுறவு வங்கிகளில் நடக்கும் அனைத்து முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வந்தன. அந்த வங்கியானது, ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே, டெபாசிட் பணத்திலிருந்து 70 சதவிகிதத்தைக் கடனாகக் கொடுத்திருக்கிறது. இது அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை, அதன் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருந்த பணம் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக மாற்றப்பட்டது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
கூட்டுறவு வங்கியில் இருக்கும் பணமும் மக்களின் பணம்தான். அந்தப் பணத்தைப் பாதுகாப்பது, வங்கிக் கட்டுப்பாட்டு அமைப்பான ஆர்.பி.ஐ-யின் கடமையாகும். அதனால்தான் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயம்தான். தற்போது இயற்றப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தினால், இனி கூட்டுறவு வங்கிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஆர்.பி.ஐ கண்காணிக்கும். இதனால் முறைகேடுகள் நடப்பது நிச்சயமாகத் தடுக்கப்படும்.
ஆர்.பி.ஐ-க்குக் கீழ் கொண்டு வருவதால், கடன் வாங்குவதில் சிக்கல் உருவாகுமா அல்லது விதிமுறைகள் கடுமையாக்கப்படுமா என்ற சந்தேகம் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் வேண்டாம். கூட்டுறவு வங்கிகளின் அதிகாரம் அனைத்தும் அப்படியேதான் இருக்கும். மேற்பார்வையை மட்டும் இனி ஆர்.பி.ஐ மேற்கொள்ளும்” என்கிறார் பொருளாதார நிபுணர் வி.கோபால்.

இதுதொடர்பாகப் பேசிய தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் சுந்தரவிமலநாதன், “பல மாநிலங்களில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. ஆனால் நமது மாநிலத்தில் அதன் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காரணம் அரசியல்வாதிகள் அதில் பெருமளவு முறைகேடுகளைச் செய்துவருகிறார்கள். தன்னுடைய கட்சிக்காரர்களுக்குத்தான் கடன். மாற்றுக் கட்சியினருக்கு இல்லை என்பது போன்ற பாகுபாடு அரங்கேறிவருகிறது.
இந்தச் சூழ்நிலையில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாக மத்திய அரசு சொல்கிறது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்று வருவதை நாடே அறியும். பல தொழிலதிபர்களின் கடன்கள் வாராக் கடன்களாக இருக்கின்றன. ஆக, கூட்டுறவு வங்கிகளில் உள்ள முறைகேடுகளைக் காரணம் காட்டி ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்குப் பதிலாகக் கூட்டுறவு அமைப்புகள் எந்த நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதோ, அதனை முழுமையாகச் செயல்படுத்தி, அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல், கேரளா போலச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் இதற்கான தீர்வாக இருக்கும்’’ என்றார்.
இதுதொடர்பாகப் பேசிய பேராசிரியர் முனைவர் பழனித்துரை ‘`கூட்டுறவு அமைப்புகள் எல்லாம் மக்களுக்கான தன்னாட்சி அமைப்புகள். சாமானிய மக்கள் இயல்பாகப் பயன்படுத்தக்கூடியவை கூட்டுறவு வங்கிகள். இந்த அமைப்புகள் தானாக இயங்கியவரை எந்த ஒரு சிக்கலும் இல்லை. என்றைக்கு அரசாங்கத்திடம் பணம் வாங்கப் போனதோ அன்றைக்கு ஆரம்பித்தது கூட்டுறவு வங்கிகளின் வீழ்ச்சி. இன்றைய காலகட்டத்தில் கூட்டுறவு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக மக்கள் அமைப்புகள், தன்னாட்சி அமைப்புகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. ஒரே நாடு என்ற கோஷம் வலுப்பட்டுவருகிறது. அதற்குத் தன்னாட்சி அமைப்புகள் இரையாகிவருகின்றன.
கூட்டுறவு அமைப்புகள் மத்திய அரசின் கீழ் போவதை இன்றைக்கு வலுவாக எதிர்க்க முடியாத நிலையில் மாநில அரசுகள் இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டுறவு அமைப்புகளை, இலவசங்களைக் கொடுக்க அரசுகள் பயன்படுத்திக்கொண்டன. இதை இன்றைக்கு ஒரு அரசியல் சார்ந்த அமைப்பாக மாற்றிவிட்டார்கள். ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள் வரும்போது அதனுடைய விதிகள் மாறும். இப்போது அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப கூட்டுறவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இனி நாடு முழுவதும் ஒரே விதிகளின் கீழ் கூட்டுறவு வங்கிகள் செயல்படும். இது மாநிலங்களில் சில சிக்கலை ஏற்படுத்தும்.
கூட்டுறவு அமைப்புகளில் அரசியல் புகுந்த பிறகு அதன் உண்மையான செயல்பாடு முடக்கப்பட்டுவிட்டது. இதைக் காரணமாகக் காட்டி மைய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகச் சொல்கிறது. அதை இல்லையென்று நம்மால் மறுக்க முடியாத சூழல் தான் இருக்கிறது. இன்றைக்கு மக்கள் அமைப்புகள் ஒவ்வொன்றும் செத்துக் கொண்டிருக்கின்றன.
இன்றைய பொருளாதாரச் சூழலுக்குக் கூட்டுறவு அமைப்புகள் தான் தேவையான ஒன்று.
ஆனால், அதில் முறைகேடுகள் அதிகரித்துவிட்டன. அதற்காகவே ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வருகிறோம் என மத்திய அரசு கூறும் கூற்றை மறுக்க முடியாது. அது நமது பலவீனம்’’ என்றார்.
‘நாட்டில் ஆயிரக்கணக்கான கூட்டுறவுச் சங்கங்கள் சுயநிதிகளை உருவாக்கி வெற்றிகரமாக இயங்கிவரும் சூழலில், அவற்றை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரும் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்பதே விவசாய ஆர்வலர்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது.
‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்கிற வாசகத்துடன் காணப்படும் இணைந்த கரங்கள், ரிசர்வ் வங்கியின் இரும்புக்கரங்களாக மாறாமல் இருந்தால் சரிதான்.
ஒரு கூட்டுறவுச் சங்கம் சிறப்புறச் செயல்பட்டால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? ‘டியூகாஸ்’ எனப்படும், கோவை, துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா சங்கம் ஒரு கண்முன் உதாரணம்.
1955-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கம் இன்று 110 கோடி ரூபாய் வைப்பு நிதி, ஆண்டுக்கு 226 கோடி ரூபாய் வருமானம் என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு நிகராகச் செயல்பட்டுவருகிறது. அந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் மேலாண்மை இயக்குநர் ஏ.விஜய சக்தியிடம் பேசினோம்.
‘`எங்கள் சங்கத்தில், 16,000 விவசாயிகள் முதல் நிலை உறுப்பினராக இருக்கிறார்கள். ஒரு லட்சம் நபர்கள் சாதாரண உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கிராமப்புறத்தில் தொடங்கப்பட்ட சங்கமாக இருந்தாலும் இப்போது சங்கம் இயங்கும் சில பகுதிகள் மாநகராட்சி எல்லைக்குள் வந்து விட்டன. 6 இடங்களில் எங்கள் சங்கத்திற்குக் கிளைகள் உள்ளன. அதில் இரண்டு கோவை மாநகரத்தின் இதயப்பகுதியில் உள்ளன. கிராமப்புற சங்கம் மாநகரத்தில் கிளைகள் அமைத்துச் சேவையாற்றிவருவது எங்கள் வளர்ச்சிக்குச் சான்று.

விவசாயப் பயிர்க்கடன்கள், நகைக்கடன்கள் அல்லாது பல்வேறு வணிகம் சார்ந்த செயல்பாடுகளால் 55 ஆண்டுகளாகத் தொடர்ந்து லாபத்தில் இயங்கிவருகிறது இந்தச் சங்கம். குறிப்பாக, 12 வகையான கலப்பு உரங்களைத் தயாரித்து, ஆண்டுக்கு 10,000 டன் அளவில், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வேளாண் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வருகிறோம். சங்க வளாகத்தில் பெட்ரோல் நிலையம், நீரா பானம் விற்பனையும் நடக்கிறது. சங்கத்தின் சார்பில் அச்சகம் ஒன்றும் இயங்கிவருகிறது. பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் விசைத்தெளிப்புக் கருவிகளைச் சொந்தமாகத் தயாரித்து ‘டியூகாஸ்‘ என்கிற பெயரில் விற்பனை செய்துவருகிறோம். டிராக்டர் உள்ளிட்ட பண்ணை இயந்திரங்களைக் குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்கிவருகிறோம். புதிய வீடு கட்ட கடனுதவியும் உண்டு. ஆண்டுக்கு 1000 மெட்ரிக் டன் விதைநெல் உற்பத்தி செய்து, விற்பனை செய்துவருகிறோம். மாநில அளவில் சிறந்த கூட்டுறவுச் சங்கமாக 11 ஆண்டுகளாக எங்கள் சங்கம் தேர்வு செய்யப்பட்டுவருகிறது. எங்கள் சங்கத்தின் பொதுநல நிதியிலிருந்து 16 அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு வளர்ச்சி நிதி வழங்கிவருகிறோம்.
விவசாயம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் பி.பி.ஓ. அமைத்து அங்குள்ள இளைஞர்களுக்குச் சொந்த ஊரில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளையும் தொடங்கியுள்ளோம். எதிர்காலத்தில் தேசிய அளவில் சிறந்த சங்கமாகத் துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா சங்கம் திகழும்’’ என்று நம்பிக்கையுடன் பேசினார்.