நடிகையும், பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர், ``கோவை – சென்னை ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தேன். கோவை விமான நிலையத்தில் ஒரு வருத்தமான விஷயம் நடந்தது. செக்யூரிட்டி என்ற பெயரில் விமானம் ஏறுவதற்கு முன்பு என்னுடைய பேக், இரண்டு இஸ்லாமியர்களின் பேக்கை மட்டும் சோதனை நடத்தினர்.

அந்த விமானத்தில் 190 பயணிகள் பயணித்தனர். என்னுடைய பெயர், அந்த முஸ்லிம்களின் தோற்றத்தைப் பார்த்து எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதனை நடத்தினர்.
‘முஸ்லிம் என்பதற்காக சோதனை செய்கிறார்களா?’ என அவர்கள் கேட்டனர். எனக்கும் கோபமாக இருந்தது. அங்கு ஸ்கேனர் எல்லாம் இல்லை. இவர்களாகப் பார்த்துதான் தனியாக சோதனை நடத்துகின்றனர். அங்கு பயணித்த மற்ற பயணிகளிடம் பேக் இல்லையா.. அவர்கள் எதுவும் கொண்டுவர வாய்ப்பில்லையா... கேட்டால், ‘குடியரசு தின விழாவுக்காகப் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறோம்’ என்கின்றனர்.

அது நல்ல விஷயம்தான். சோதனை செய்வது என்றால் எல்லோரையும் தானே பரிசோதிக்க வேண்டும். எதற்காக தோற்றத்தையும், மதத்தையும் பார்த்து எங்கள் மூன்று பேரிடம் மட்டும் சோதனை செய்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய கேவலம். இனியும் பாகுபாடு பார்க்க வேண்டாம்” என்றார்.
இவரின் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இது குறித்து கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவனிடம் விளக்கம் கேட்டபோது, “குடியரசு தினவிழாவை முன்னிட்டு உச்சகட்ட எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது. போர்டிங்குக்கு முன்பாக பயணிகளை இரண்டு முறை சோதனை செய்ய உத்தரவிட்டிருக்கின்றனர். சென்னை விமான நிலையம் உட்பட எல்லா விமான நிலையத்துக்கும் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

எல்லோரையும் சோதனை செய்வது கடமை. அமைச்சர்கள், எம்.பி உள்ளிட்ட குறிப்பிட்ட சிலருக்குதான் இதில் விலக்கு. நானே சென்றால்கூட சோதனை நடத்த ஒத்துழைப்பு வழங்கி ஆக வேண்டும். குறிப்பிட்ட தினத்தில் அவர்களை மட்டும் சோதனை செய்தார்களா, மற்றவர்களை சோதனை செய்யவில்லையா என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.