மேயர் பதவி இல்லாவிட்டால் கலெக்டர் பதவி... படிக்கச் சென்ற கவுன்சிலர்... பரிதவிக்கும் வாக்காளர்கள்!

என் மகளை மேயராக்கத்தான் படிப்பிலிருந்து அரசியலுக்குக் கொண்டு வந்தேன்.
“சட்டமுறைப்படி நிறுவப்பெற்றுள்ள இந்திய அரசியலமைப்பின்பால், நான் மேற்கொள்ளவிருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்!” உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிப் பிரமாணத்தின்போது ஏற்கும் உறுதிமொழி இது. இதே உறுதியை ஏற்று, கோவை மாநகராட்சி கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி படிக்கப் போய்விட, பரிதவிக்கிறது அவரது வார்டு!

மேயர் ஆசை!
கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக இருந்தவர் மருதமலை சேனாதிபதி. 2021 சட்டசபைத் தேர்தலில் தனக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்காததால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 22 வயதே ஆகும் தன் மகள் நிவேதாவை மேயராக்கக் காய்நகர்த்தினார் இவர். பிரசாரத்தின்போதே, ‘கேரளா திருவனந்தபுரம் மாநகராட்சியைப் போலவே கோவைக்கும் ஓர் இளம் பெண் மேயர்’ என புரொமோஷன் வேலைகள் நடந்தன. சமூக வலைதளங்களில் நிவேதா வைரலானார். அவர் போட்டியிட்ட 97-வது வார்டில் பரிசு மழை கொட்டியது. கடைசியில், கோவை மாநகராட்சியிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் (7,786) வெற்றிபெற்றார் நிவேதா.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி மேயர் பதவி கிடைக்கவில்லை. இதனால் மருதமலை சேனாதிபதி தன் மகளை மீண்டும் படிப்பதற்கு அனுப்பிவிட்டார். இதன் காரணமாக வார்டுக்குள்ளும், மாமன்றக் கூட்டங்களிலும் நிவேதா சேனாதிபதி தொடர்ந்து ஆப்சென்ட் ஆகிவருகிறார். வார்டில் அவரது பணிகளை மேற்கொள்ள தி.மு.க வார்டு செயலாளர் மகாலிங்கத்திடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து அடிப்படை பிரச்னைகளுக்குக்கூட, தாங்கள் வாக்களித்த மக்கள் பிரதிநிதியைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர் வார்டு மக்கள்.

கவுன்சிலருக்கு பதில் வட்டச் செயலாளர்...
இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவரும், மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைமை நிலையச் செயலாளருமான ராஜ், “இந்த வார்டில் சுமார் 22,000 வாக்காளர்கள் இருக்கின்றனர். நிவேதா சேனாதிபதி வெற்றிபெற்ற பிறகு சில இடங்களில் மட்டும் நன்றி தெரிவிக்க வந்தார். அதன் பிறகு அவரை நாங்கள் பார்க்கவில்லை. எதுவாக இருந்தாலும் தி.மு.க வார்டு செயலாளர் மகாலிங்கத்திடம் பேசச் சொல்கிறார். நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரால் எப்படி எங்கள் பிரச்னையைத் தீர்க்க முடியும்... வார்டில் எம்.ஜி.ஆர் நகர், பாப்பம்மாள் லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்னை இருக்கிறது. சாலைகளும் சரியாக இல்லை. சாக்கடையையும் சரியாகச் சுத்தம் செய்வதில்லை. இப்போது சேனாதிபதியை மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் தூக்கிவிட்டனர். இதனால் வார்டுக்குள் எந்தப் பணியும் நடப்பதில்லை. தி.மு.க-வுக்குள் எக்கச்சக்க உட்கட்சிப்பூசல் நிலவுகிறது. எங்கு சென்றாலும் மாறி மாறிக் கைகாட்டுகிறார்கள். எங்கள் பிரச்னையை யாரிடமும் சென்று முறையிடுவது எனத் தெரியாமல் தவிக்கிறோம்” என்றார்.
“எம்.எல்.ஏ., மேயர் என எதிர்பார்த்த எதுவும் கிடைக்காததால் சேனாபதி அப்செட் ஆகிவிட்டார். மண்டலத் தலைவர் ஆகும் வாய்ப்பு கிடைத்தபோதுகூட, ‘என் மகளை மேயராக்கத்தான் படிப்பிலிருந்து அரசியலுக்குக் கொண்டு வந்தேன். இப்படி நடக்கும் எனத் தெரிந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன்’ என மண்டலத் தலைவர் பதவியையும் மறுத்துவிட்டார். ‘மேயர் பதவி இல்லாவிட்டால் என்ன... மகளை கலெக்டராக்கிக் காட்டுகிறேன்’ என்று சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சிக்காக நிவேதாவை சென்னைக்கு அனுப்பியிருக்கிறார். தொடர்ந்து மூன்று மாமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டால் பிரச்னையாகும் என்பதால், இரண்டு கூட்டங்களுக்கு ஒரு முறை மட்டும் வந்து கையெழுத்திட்டுவிட்டுச் செல்கிறார். இவர்களின் அரசியலுக்கு அந்தப் பகுதி மக்கள் பலிகடா ஆகிக் கொண்டிருக்கிறார்கள்” என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

என்ன சொல்கிறார் கவுன்சிலரின் அப்பா?!
இது குறித்து தி.மு.க வார்டு செயலாளர் மகாலிங்கத்திடம் கேட்டபோது, “நிவேதா சென்னையில் படிப்பதால் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த சேனாதிபதி, என்னிடம் வார்டைக் கவனிக்கச் சொன்னார். நான் அதிகார தோரணையிலெல்லாம் நடந்து கொள்வதில்லை. மக்கள் ஏதாவது கேட்டால், அதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மண்டலத் தலைவர் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு கொடுக்க முயல்கிறேன். அவ்வளவுதான்” என்றார்.

கோவை மாநகராட்சி இணையதளத்தில் கவுன்சிலர்கள் பட்டியலில் குறிப்பிட்டிருந்த, நிவேதா சேனாதிபதியின் எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். அது உபயோகத்தில் இல்லை என்று வந்தது. இது குறித்து தி.மு.க கோவை முன்னாள் மாவட்டப் பொறுப்பாளரும், நிவேதாவின் தந்தையுமான மருதமலை சேனாதிபதியைத் தொடர்புகொண்டோம். “மேயர் பதவி கிடைக்கவில்லை என்றெல்லாம் ஒதுங்கவில்லை. சூழ்நிலை காரணமாக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகள் மாமன்றக் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். வார்டில் உள்ள பல பிரச்னைகளுக்கு நானே நேரடியாகச் சென்று தீர்வு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். எல்லா வேலைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மகள் குறித்த புகாரில் உண்மையில்லை. கவுன்சிலர், சொந்தக் கைக்காசைப் போட்டு வேலை செய்யும் ஒரே வார்டு இதுதான்” என்றார்.
ஜனநாயகம்.. பணநாயகம் ஆனதன் விளைவை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்!