அலசல்
அரசியல்
Published:Updated:

சூயஸ் விவகாரத்தில் ஏன் அந்தர்பல்டி அடிக்கிறது தி.மு.க?

கோவை மாநகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை மாநகராட்சி

கேரளாவில் சிறுவாணி அணை இருக்கிறது. அங்கிருந்து கோவை மாநகராட்சி எல்லைவரை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கோவை மாநகராட்சியில் குடிநீருக்காகப் போடப்பட்டிருக்கும் பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவன ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும். மாநகராட்சியே அந்தத் திட்டத்தை நிறைவேற்றும்’’-தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் ஒன்று இது. தி.மு.க ஆட்சிக்கு வந்து 100 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், ‘‘சூயஸ் நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டு, பணிகள் நடந்துவருகின்றன. அதை ரத்துசெய்யும் எண்ணம் இல்லை’’ என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது கடும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின்போது, கோவை மாநகராட்சியில் 24x7 அடிப்படையில் குடிநீர் வழங்க, சுமார் 3,167 கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் 28 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டது. ‘தண்ணீரைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதா?’ என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தியது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இது குறித்துப் பல்வேறு தகவல்களைப் பெற்றிருக்கும் கோவை மூத்த வழக்கறிஞர் லோகநாதனைச் சந்தித்தோம். ‘‘2008-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில்தான் 24x7 குடிநீர் விநியோகத் திட்டம் குறித்துப் பேச்சுகள் தொடங்கின. 2011-ம் ஆண்டு 595 கோடி ரூபாய்க்குத் திட்டத்தை நிறைவேற்ற முடிவுசெய்தார்கள். அடுத்து அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, 2014-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில், ‘தனியார் பங்களிப்புடன் இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம்’ என ஒப்புதல் வழங்கப்பட்டது. 2015-ல் கோவை மாநகராட்சியில், இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள். 2018-ம் ஆண்டு, சுமார் 3,167 கோடி ரூபாய்க்கு சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமானது. 556 கோடி ரூபாயில் தொடங்கிய இந்தத் திட்டம், 3,167 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முடிந்தது. ஆனால், இவ்வளவு பெரிய தொகையில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தவே இல்லை.

சூயஸ் விவகாரத்தில் ஏன் அந்தர்பல்டி அடிக்கிறது தி.மு.க?

கேரளாவில் சிறுவாணி அணை இருக்கிறது. அங்கிருந்து கோவை மாநகராட்சி எல்லைவரை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இதற்கான மேல்நிலைத் தொட்டிகள், பைப் கனெக்‌ஷன்கள், மீட்டர்கள் என்று அனைத்துக் கட்டுமானங்களும் நன்றாகவே இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் சிறுவாணி தண்ணீருக்குக் குடிநீர் வடிகால் வாரியம், கேரள அரசுக்கு ராயல்டி செலுத்திவருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 43 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. இது தவிர, கடந்த ஆறு ஆண்டுகளில் பராமரிப்புக்காக 29 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்திடமிருந்து 1,000 லிட்டர் தண்ணீரை 10.94 ரூபாய்க்கு கோவை மாநகராட்சி வாங்கிவருகிறது. அந்தவகையில், கோவை மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு 218 கோடி ரூபாய் நிலுவைத்தொகை வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தத் திட்டத்துக்காக ஒரு தனியார் நிறுவனத்துக்கு 3,167 கோடி ரூபாய் ஒதுக்குவது மாநகராட்சிக்கு எவ்வளவு பெரிய சுமை?

2021, ஜூலை மாத நிலவரப்படி மத்திய அரசு இதற்காக 1,776 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு இப்போதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என்கிறார்கள். கடந்த ஜூலை மாதம் வரை சூயஸ் நிறுவனத்துக்கு மாநகராட்சியிலிருந்து 165 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே போதிய கட்டுமானங்கள் இருக்கும்போது இந்தத் திட்டத்துக்கு 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஏன் ஒதுக்க வேண்டும்? மேலும் இந்தத் திட்டம் 60 வார்டுகளுக்குத்தான். மீதமுள்ள 40 வார்டுகளுக்கு? போதிய மழை இல்லாவிடில் எப்படித் தண்ணீர் கொடுப்பீர்கள் என்பதற்கு பதில் இல்லை. நிதி நெருக்கடிச் சூழலில் இவ்வளவு பெரிய தொகையில் ஒப்பந்தம் சரியா? தி.மு.க அரசு மறு ஆய்வுசெய்து, தேர்தல் வாக்குறுதிப்படி ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே கடந்த ஓராண்டில், சூயஸ் நிறுவனம் சத்தமே இல்லாமல் பல பணிகளை முடித்துவிட்டது தெலுங்குபாளையம் பகுதியில் சில இணைப்புகளில் சோதனை அடிப்படையில் 24 மணி நேரமும் குடிநீர் வந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மாநகராட்சி பிரதான அலுவலகத்திலேயே சூயஸ் நிறுவனத்துக்கு ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இயங்கிவருகிறது. இது தவிர, நவ இந்தியாவில் ஓர் அலுவலகம், ஒவ்வொரு மேல்நிலைத் தொட்டி அருகேயும் பராமரிப்பு அலுவலகம் என அமைத்திருக்கிறார்கள். சுமார் 300 ஊழியர்கள் இதில் பணியாற்றிவருகிறார்கள்.

லோகநாதன், ராஜகோபால் சுன்கரா
லோகநாதன், ராஜகோபால் சுன்கரா

கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, ‘‘சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தப்படி ஓராண்டு ஆய்வு, அடுத்த நான்கு ஆண்டுக்காலம் 60 வார்டுகளில் வீடுகளுக்கு இணைப்பு தருவது, வாடிக்கையாளர் சேவை மையங்கள் அமைப்பது போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீதிப் பணிகள் நடந்து, அதன் பிறகு பராமரிப்புக் காலகட்டம் தொடங்கும்’’ என்று மட்டும் சொன்னார்.

அமைச்சர் கே.என்.நேருவைத் தொடர்பு கொண்டபோது, ‘‘சூயஸ் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை 80 சதவிகிதப் பணிகள் முடிந்து பல வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பைக் கொடுத்துவிட்டனர். இந்த நேரத்தில் ஏதாவது முடிவெடுத்தால், குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படும். தற்போதுவரை இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அங்கிருக்கும் நிலைமையை முதல்வரிடம் எடுத்துரைத்து கலந்தாலோசித்து முடிவெடுப்போம்’’ என்றார்.

ஏன் இந்த அந்தர்பல்டி? என்னாச்சு தி.மு.க-வின் வாக்குறுதி?