
கொரோனா சிகிச்சை தரும் மருத்துவமனைகளுக்கு வெளியே, பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றனர்.
எத்தனையோ இழப்புகள், வலிகளை கொரோனா கொடுத்திருந்தாலும், பல நம்பிக்கைகளையும் விதைத்துள்ளது. அதில் ஒரு நம்பிக்கை மனிதர்தான் கோவையைச் சேர்ந்த, நடனப்பள்ளி நடத்திவரும் எட்வின்.
கொரோனா சிகிச்சை தரும் மருத்துவமனைகளுக்கு வெளியே, பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றனர். ஆனால், எட்வின் அரசு மருத்துவமனைக்குள்ளேயே நுழைந்துவிட்டார். இரண்டாம் அலையின் தொடக்கத்தில் சென்னை முதல் இடத்தில் இருந்தபோது உள்ளே சென்றவர், கோவை முதல் இடம் வந்த பிறகும் ஓய்வெடுக்கவில்லை. 50 நாள்களைக் கடந்து அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் தேவையான விஷயங்களைச் செய்து, சின்ன உதவிகளால் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவருகிறார்.

எட்வினைச் சந்தித்தோம். “2019-ம் வருஷம் சீனா போயிருந்தேன். கொரோனாவோட பாதிப்பை நேரடியா பார்த்தேன். நான் சமூக ஆர்வலர் எல்லாம் இல்லைங்க. நெருக்கடியான சூழ்நிலைல யாரையும் குறைசொல்ல எனக்குப் பிடிக்காது. அதனால, என்னால முடிஞ்ச விஷயங்களைச் செய்வேன். போன வருஷம் முதல் அலை வந்தப்ப, இ.எஸ்.ஐ மருத்துவமனைல என்னால முடிஞ்சதைச் செஞ்சேன். இரண்டாவது அலை தொடங்கிய உடனேயே அரசு மருத்துவமனைக்குப் போயிட்டேன்.
ஆக்சிஜன் பிரச்னை வந்தப்ப, நண்பர்கள் மூலமா ஆக்சிஜன் பேருந்து தயார் பண்ணினோம். சிகிச்சைக்குக் காத்திருக்கறவங்களுக்கு அங்க ஆக்சிஜன் கிடைக்கும். அதே மாதிரி ஸ்ட்ரெச்சர்லயே ஆக்சிஜன் சப்போர்ட் இருந்தா நல்லாருக்கும்னு, வெளிய இருந்து கிடைச்ச உதவி மூலமா 18 ஸ்ட்ரெச்சர்களுக்கு ஆக்சிஜன் சப்போர்ட் பண்ணிக் கொடுத்தோம். என் கைவசமும் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் வெச்சிருப்பேன். யாருக்காவது தேவைன்னா உடனே கொடுப்பேன்.

தாக்கம் அதிகரிச்சப்ப, அட்டண்டர்களோட எண்ணிக்கையும் அதிகரிச்சது. நோயாளிகளோட தொடர்புல இருந்து, மற்ற தேவைகளுக்காக வெளிய போறப்போ, அவங்ககிட்ட இருந்து மத்தவங்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருந்துச்சு. அதனால, அட்டண்டர்களுக்கும் உணவுக்கு ஏற்பாடு பண்ணுனோம். எல்லார்கிட்ட பேச முடியாட்டியும், என்கிட்ட பேசறவங்க சொல்ற பிரச்னைகளுக்கு முடிஞ்சவரை ஏதாவது வகைல தீர்வு கொடுக்க முயய்சி செய்வேன்” என்றவரிடம் போனிலும் சுற்றியும், ‘எட்வின் சார், அங்க இந்தப் பிரச்னை... இங்க அது பிரச்னை” என்று ஒரு கூட்டமே மொய்த்தது. அவர்களிடம் பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“50 நாளுக்கு மேல, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொடிசியா சிகிச்சை மையம்னு எல்லா இடத்துலயும் ரவுண்டிங்ல இருப்பேன். சிகிச்சை மையத்துல இருந்து, பிணவறை வரை எல்லா இடத்துலயும் சுத்தியிருக்கேன். பலருக்கு இறந்த உடல்களை அடையாளம் பார்க்கத் தெரியாது. அதுக்கு உதவுவேன். ஆரம்பத்துல மருத்துவர்களுக்கு என்னைப் பிடிக்காது. ஒருமுறை, அவங்களுக்குத் தனிமைப்படுத்துதல் காலகட்டத்துல தங்க ரூம் கிடைக்கலை. நண்பர்கள் உதவியோட அதுக்கும் ஏற்பாடு செய்தோம். அதுக்கப்புறம் அவங்களும் என்கூட நெருக்கமாகிட்டாங்க.
இந்தக் காலகட்டத்துல நிறைய வேதனையான விஷயங்களும் நடந்திருக்கு. ஒருநாள் நடுத்தர வயது ஆண் ஒருவர், வயசான தன்னோட அம்மாவை என்கிட்ட விட்டுட்டு, ‘இதோ வந்துடறேன்’னு சொல்லி நகர்ந்தார். ரொம்ப நேரமாகியும் அவர் வரலை. போன் பண்ணியும் அவர் எடுக்கலை. அப்பதான் கூட இருந்தவங்க, ‘சார் அவர் எஸ்கேப் ஆகிட்டார்’னு சொன்னாங்க. இது சம்பந்தமா சோஷியல் மீடியால போஸ்ட் பண்ணினேன். அதே நேரத்துல மருத்துவமனைல பேசி, பாட்டிய அட்மிட் பண்ணிட்டேன். அப்புறம் பதறியடிச்சுக் கூப்பிட்ட அவர் மகன், ‘போஸ்ட் போட்டு மிரட்டறீங்களா... அவங்க வாழ்ந்து முடிஞ்சுட்டாங்க சார். எங்களுக்குக் குழந்தைங்க இருக்கு. எங்க பாதுகாப்பு முக்கியம்ல?’ என்று பொறுப்பே இல்லாமல் பதில் பேசினார்.

ஒரு வெளியூர்க்காரருக்கு உடன் பிறந்த சகோதரர் இறந்துட்டார். இறுதிக் காரியங்களுக்குக்கூட நிற்காமல், ‘நீங்களே பார்த்துக்கோங்க’ன்னு சொல்லிட்டு ஊருக்குக் கிளம்பிட்டார். அப்புறம் என்னோட ஆதார் கார்டைக் கொடுத்துதான், அவரை அடையாளம் தெரியாத நபர்னு சொல்லி இறுதிக் காரியங்கள் பண்ணினோம்.
உயிருக்குப் போராடிப் பிழைச்சவங்களையும் பார்த்திருக்கேன்; நிறைய உயிர் போறதையும் கண்ணு முன்னாடி பார்த்திருக்கேன். இந்த அலை யாரையும் விட்டுவைக்கலை.
இப்போ பாதிப்பு குறைஞ்சதால, கொரோனா நோயாளிகளுக்கு மனரீதியா ஆலோசனை கொடுக்கற பணிகள்தான் பிரதானம். நான் தடுப்பூசி முதல் தவணை போட்டிருக்கேன். கடவுள் புண்ணியத்துல எனக்கு உயிர் இருக்கு. அது இருக்கறவரை என்னோட சின்னச் சின்னப் பணிகள் எப்பவும் தொடரும்” என்றார் மெல்லிய புன்னகையோடு.
தடுப்பூசிகளுடனும், எட்வின்களின் உதவியுடனும் கொரோனாவைக் கடப்போம்.