மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை குறு, சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான போசியா சார்பில் இன்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை அரசு முழுமையாக நீக்க வேண்டும்,

எல்.டி, சி.டி மின்சாரத்தை பயன்படுத்தும் குறு, சிறு நிறுவனங்களுக்கு முன்பிருந்த நிலைக்கட்டணத்தை தொடர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கோவை டாடாபாத் பகுதியில் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட்கள், பாஜக உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதன்படி பாஜகவைச் சேர்ந்த மாநிலத் துணை தலைவர் கனகசபாபதி, தொழில்துறை பிரிவு மாநில துணைத் தலைவர் செல்வகுமார், கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது கனகசபாபதி அரசியல் ரீதியான கருத்துகளை பேசவரும்போது, தொழில் அமைப்பினர் ‘இங்கு அரசியல் பேச வேண்டாம்’ என கூறிவிட்டனர். பிறகு செல்வகுமார் பேசும்போது, தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு குஜராத் மாநிலத்தை புகழ்ந்தார். ‘முதலில் மாநில அரசிடம் உங்கள் கோரிக்கைகளை கேளுங்கள். அதன் பிறகு மத்திய அரசை கேளுங்கள்.’ என்று கூறினார்.

இதனால் கோபமடைந்த தொழில் அமைப்பினர், ‘அரசியல் வேண்டாம்’ என கூறி பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு பாஜகவினர், ‘நாங்கள் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. தொழில்துறையினர் பிரச்னையை பேசத்தான் வந்துள்ளோம்.’ என கூறி சென்றனர்.