அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

லோடுக்கு ரூ.3,000, கடவுச்சீட்டுக்கு ரூ.1,700! - அமைச்சர் துரைமுருகன் பெயரில் வசூல்வேட்டை...

கல்குவாரி
பிரீமியம் ஸ்டோரி
News
கல்குவாரி

வெடிக்கும் கோவை கல்குவாரி விவகாரம்!

அரசு கொடுக்க வேண்டிய கடவுச்சீட்டைத் தனியார் ஒருவர் விநியோகித்து, தினமும் 75 லட்ச ரூபாய் வரை வசூலிப்பது கோவையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த வசூல்வேட்டை, கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெயரைச் சொல்லியே நடப்பதுதான் அடுத்த அதிர்ச்சி!

லோடுக்கு ரூ.3,000, கடவுச்சீட்டுக்கு ரூ.1,700!

தமிழ்நாட்டில் அதிக கல்குவாரிகள் இயங்கும் மாவட்டங்களில் கோவையும் ஒன்று. தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் கேரளாவுக்கு ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்தத் தொழிலில், கோவை மாவட்டக் கனிம வளத்துறை மற்றும் கல்குவாரி உரிமையாளர்களிடம் புதிதாக, அதிக செல்வாக்கு பெற்றிருக்கும் பெயர் ‘நந்தகுமார்.’ “கேரளாவுக்குச் செல்லும் எந்த லாரியாக இருந்தாலும் லோடுக்கு ரூ.3,000 வீதம் நந்தகுமாருக்குக் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. அரசு கொடுக்க வேண்டிய கடவுச்சீட்டை, நந்தகுமாரின் வி.பி அண்ட் கோ நிறுவனம்தான் பணம் வாங்கிக்கொண்டு விநியோகம் செய்கிறது” என்று புகார்களை அடுக்குகிறார்கள் கல்குவாரி உரிமையாளர்கள்.

லோடுக்கு ரூ.3,000, கடவுச்சீட்டுக்கு ரூ.1,700! - அமைச்சர் துரைமுருகன் பெயரில் வசூல்வேட்டை...

இது குறித்து நம்மிடம் பேசிய கோவையைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் செந்தில்குமார், “நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்குவாரி நடத்திவருகிறேன். ஜல்லிக்கற்களை கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்கிறோம். இங்கிருந்து ஜல்லி உள்ளிட்ட கனிம வளப் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு முன்பு, கனிம வளத்துறையிடம் கடவுச்சீட்டு (Transit Pass) வாங்க வேண்டும். சமீபக்காலமாக கோவை மாவட்டக் கனிம வளத்துறையிடம் கடவுச்சீட்டு கேட்டால், அவர்கள் ‘வி.பி அண்ட் கோ’ என்ற நிறுவனத்திடம் பேசச் சொல்கின்றனர். நந்தகுமார் என்பவர்தான் அந்த நிறுவனத்துக்கு உரிமையாளர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நந்தகுமாரின் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் தொகைக்குச் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே கடவுச்சீட்டு வழங்குகிறார்கள். ஒவ்வொரு குவாரி முன்பும் ஆள் போட்டு, எவ்வளவு லோடு வெளியே செல்கிறது எனக் கண்காணிக்கிறார்கள். லோடுக்கு ரூ.3,000, கடவுச்சீட்டுக்கு ரூ1,700 எனச் சராசரியாக 5,000 ரூபாய் வரை வசூல் செய்கிறார்கள். கேட்டால் அமைச்சர் துரைமுருகன் பெயரைச் சொல்கிறார்கள். இது குறித்து முதல்வர் வரை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்றார்.

லோடுக்கு ரூ.3,000, கடவுச்சீட்டுக்கு ரூ.1,700! - அமைச்சர் துரைமுருகன் பெயரில் வசூல்வேட்டை...

அமைச்சர் துரைமுருகனுடன் நெருக்கம்!

பா.ஜ.க சிறுபான்மையினர் அணி மாநிலத் துணைத் தலைவர் ஷாஜி, “வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மீது ஏற்கெனவே கள்ளச்சாராயம், லாரிக் கடத்தல், கனிம வளக் கடத்தல் என்று பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர் என்று சொல்லிக்கொண்டு வலம்வந்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கவிஞர் வைரமுத்து, அமைச்சர் துரைமுருகன் ஆகியோரிடம் நெருக்கமாக இருக்கிறார். இவரின் ‘வி.பி அண்ட் கோ’ நிறுவனத்தின் சார்பாகக் கோவையிலிருந்து கேரளாவுக்குக் கனிம வளங்களை எடுத்துச்செல்லும் லாரிகளிடம் பணம் வசூலித்துக்கொண்டு பாஸ் கொடுக்கிறார். இவர் கொடுக்கும் பாஸைக் காட்டினால் எந்த அதிகாரியும் லாரிகளைத் தடுத்து நிறுத்த மாட்டார்கள். இது குறித்து நான் புகாரளித்தபோது நந்தகுமார் என்னை ஆட்களைவைத்து அடித்தார். மேலிடத்துச் செல்வாக்கு இருப்பதால் நந்தகுமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய குவாரி உரிமையாளர்கள் சிலர், “கோவை மாவட்டத்தில் சுமார் 150 குவாரிகள் இருக்கின்றன. இங்கிருந்து வெளியேறும் கனிமங்களுக்கு யூனிட்டுக்கு 300 ரூபாய் வீதம் நந்தகுமார் தரப்பு கமிஷன் வசூலிக்கிறது. இது தவிர பாஸ் வழங்குவதற்காக ஒரு லோடுக்கு ரூ.3,000 – 5,000 வரை வாங்குகிறார்கள். சராசரியாக கோவையிலிருந்து கேரளாவுக்கு ஒரு நாளைக்கு 1,500 லாரிகள் செல்கின்றன. ஒரு லாரிக்கு தினசரி ரூ.5,000 என்ற அடிப்படையில் ரூ.75 லட்சம் வசூல்வேட்டை நடக்கிறது. கட்டுமான சீஸன் நேரங்களில் இது அப்படியே இரண்டு மடங்காக அதிகரிக்கும். இவர்களின் வசூல் பணிகளுக்காக கோவை ஒக்கிலிபாளையம் பகுதியில் ஓர் அலுவலகமே நடத்துகின்றனர். அதைக் கடந்துதான் லாரிகள் கேரளாவுக்குள் செல்லும். ஒவ்வொரு லாரியும் அவர்களுக்குப் படியளந்துவிட்டுத்தான் வெளியேறும் நிலை இருக்கிறது” என்றனர்.

அமைச்சர் துரைமுருகனுடன் நந்தகுமார்
அமைச்சர் துரைமுருகனுடன் நந்தகுமார்

தனி அலுவலகமும் வசூலும்!

உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள ஒக்கிலிபாளையம் பகுதிக்குச் சென்றோம். பெட்ரோல் பங்க் அருகே எந்த போர்டும் இல்லாத ஓர் அறையில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அதுதான் குவாரி உரிமையாளர்கள் குறிப்பிட்ட ‘வி.பி அண்ட் கோ’ அலுவலகம். சிறிது நேரத்தில் ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு அடுத்தடுத்து வந்த இரண்டு லாரிகள் அந்த அலுவலகத்துக்கு எதிரே நிறுத்தப்பட்டன. உடனே அந்த அறையிலிருந்து வெளியே வந்த இளைஞர், லாரியைத் தன் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு டிரைவரிடம் பணம் வாங்கினார். இதுதான் சரியான தருணம் என நாம் உள்ளே சென்று, “இது என்ன அலுவலகம், எதற்காக லாரிகளிடம் பணம் வாங்குகிறீர்கள்?” எனக் கேட்டதற்கு. “இது வி.பி அண்ட் கோ நிறுவனம். பாஸ் கொடுப்பதற்காகப் பணம் வாங்குகிறோம்” என்றனர்.

அந்தப் பகுதியில் நின்ற ஒரு லாரி டிரைவர், ‘தன்னிடம் 7 யூனிட்டுக்கு 2,100 ரூபாய் பணம் வாங்கப்பட்டதாக’ நம்மிடம் கூறினார். உடனே அங்கிருந்த இளைஞர்களில் ஒருவர் செல்போனில் யாருக்கோ அழைத்து, நம்மைப் பற்றிய தகவலைத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் மற்றொரு நபர் அங்கு வந்து, ‘`எல்லாத்தையும் உள்ள எடுத்து வெச்சுட்டீங்களா?’’ என்று கேட்டார். பிறகு, ஓர் அலைபேசி எண்ணைக் கொடுத்து, “மேனேஜர் வஞ்சிக்குமாரிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்றார். வஞ்சிக்குமாரைத் தொடர்புகொண்டு ``இங்கே என்ன நடக்கிறது?’’ என்று கேட்டோம். “எங்களுக்குச் சொந்தமாக கிரஷர் இருக்கிறது. அங்கிருந்து லோடு ஏற்றி வரும் லாரிக்கு மட்டுமே பாஸ் கொடுக்கிறோம்” என்றவரிடம், ``அதை அரசாங்கம்தானே கொடுக்க முடியும்... பாஸ் வழங்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?’’ என்று நாம் மேற்கொண்டு கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவர் நம் அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

“நான் மிகவும் சின்ன ஆள்!”

மொத்தப் புகார்கள் குறித்தும் ‘வி.பி அண்ட் கோ’ நிறுவன உரிமையாளர் நந்தகுமாரிடம் விளக்கம் கேட்டோம். “கனிம வளத்துறையின் கடவுச்சீட்டைக் கொடுப்பதற்கான லைசென்ஸை கோவை மாவட்டக் கனிம வளத்துறை உதவி இயக்குநரிடம் பெற்றிருக்கிறோம். நான் மிகவும் சின்ன ஆள். எங்களுக்கு முன்பு, ‘எஸ்.ஆர் குரூப்’ கரிகாலன்தான் இதைச் செய்துகொண்டிருந்தார். அவரை மீறி இப்போது இந்தப் பணியை நாங்கள் செய்வதால், கரிகாலனின் தூண்டுதலின் பேரில், தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர். அமைச்சர் துரைமுருகன், வைரமுத்து ஆகியோருக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார்.

அவரிடம், ``நீங்கள் கோவை மாவட்டம் முழுவதும் கடவுச்சீட்டு கொடுப்பதற்காக உரிமம் வாங்கியிருப்பதாகச் சொல்கிறீர்கள். உங்கள் மேலாளர், உங்கள் நிறுவனத்திலிருந்து வரும் லாரிகளுக்கு மட்டுமே பாஸ் கொடுக்கிறோம் என்கிறாரே... எது உண்மை?’’ என்று கேட்டதற்கு, “நீங்கள் பத்திரிகையாளர் என்றதும், பயத்தில் அப்படிச் சொல்லிவிட்டார்” என்றார்.

செந்தில்குமார், ஷாஜி
செந்தில்குமார், ஷாஜி

இது குறித்து கோவை மாவட்டப் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சசிக்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, “கடவுச்சீட்டை எங்கள் துறையில்தான் வழங்குகிறோம். தனியார் யாரும் அதை வழங்க முடியாது. இது குறித்து விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார் சமாளிப்பாக.

விளக்கம் தருவாரா அமைச்சர்... நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

இந்தத் துறைக்குப் பொறுப்பானவர் என்பதுடன், புகாருக்கு விளக்கம் சொல்ல வேண்டியவர் என்ற முறையில், அமைச்சர் துரைமுருகனைத் தொடர்புகொண்டோம். இணைப்பு கிடைக்கவில்லை. அவரின் உதவியாளர் அஸ்கர் அலியைத் தொடர்புகொண்டு விவரங்களைச் சொன்னோம். “அது தவறான தகவல். அப்படியெல்லாம் யாரும் செய்ய முடியாது. விசாரித்துவிட்டுச் சொல்கிறோம்” என்றார் சுருக்கமாக.

“அமைச்சர் தரப்பிலும், உதவி இயக்குநரும் கடவுச்சீட்டைக் கொடுக்கும் அதிகாரத்தை யாருக்கும் கொடுக்கவில்லை. அரசாங்கம்தான் கொடுக்கும் என்று சொல்கிறார்களே?” என நந்தகுமாரிடம் மீண்டும் கேட்டோம். “என்னிடம் லைசென்ஸ் இருக்கிறது. உங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புகிறேன்” என்றார். ஆனால் தற்போது வரை அனுப்பவில்லை.

கரிகாலனோ, நந்தகுமாரோ... மற்றவர்களோ யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் காரியத்தின் பின்னணியில் முக்கியமாக அமைச்சர் துரைமுருகனின் பெயர் அடிபடுவதால், உரிய விளக்கம் அளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அமைச்சருக்கு உண்டு. முதல்வரும் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்வார்களா?