Published:Updated:

"சுபஶ்ரீ குடும்பத்தின் வலி எங்களுக்குத்தான் புரியும்!" - கோவை ரகு குடும்பத்தினர்

Ragu
News
Ragu

வீடு, திருமணம், தாயகம் திரும்புதல் என்று ஏராளமான கனவுகளுடனும் இருந்தார் அந்த இளைஞர். அந்தக் கனவையே, தங்களது மகிழ்வாக எண்ணிக் காத்துக்கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.

Published:Updated:

"சுபஶ்ரீ குடும்பத்தின் வலி எங்களுக்குத்தான் புரியும்!" - கோவை ரகு குடும்பத்தினர்

வீடு, திருமணம், தாயகம் திரும்புதல் என்று ஏராளமான கனவுகளுடனும் இருந்தார் அந்த இளைஞர். அந்தக் கனவையே, தங்களது மகிழ்வாக எண்ணிக் காத்துக்கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.

Ragu
News
Ragu

அமெரிக்காவில் பணியாற்றி வந்த ஓர் இளைஞர் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, விடுமுறைக்காகத் தாயகம் திரும்புகிறார். சக்கரம் போலச் சுழலும் அப்பா, குடும்பத்தின் நலனையே தனது நலனாக எண்ணும் அம்மா, அனைத்து விஷயங்களையும் நிதானத்துடன் அணுகுகிற தங்கை, சுட்டித்தனம் கலந்த தங்கையின் குழந்தை. இந்தக் குடும்பம்தான் அந்த இளைஞரின் உலகம்.

Ragu
Ragu

வீடு, திருமணம், தாயகம் திரும்புதல் என்று ஏராளமான கனவுகளுடனும் இருந்தார் அந்த இளைஞர். அந்தக் கனவையே, தங்களது மகிழ்வாக எண்ணிக் காத்துக்கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.

ஆனால், தாயகம் கிளம்புவதற்கு ஒரு நாளுக்கு முன்பு நடந்த சம்பவம், அந்தக் குடும்பத்தின் இதயத்தை நொறுங்கிப் போக வைத்துவிட்டது. அமெரிக்காவில் பணியாற்றி வந்த கோவை மென்பொறியாளர் ரகுதான் அந்த இளைஞர். அ.தி.மு.க அரசால் கொண்டாடப்பட்ட, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட அலங்கார வளைவும், ராங் ரூட்டில் வந்த லாரியும் ரகுவின் உயிரைப் பறித்துவிட்டன.

Ragu accident
Ragu accident

#WhoKilledRagu (ரகுவைக் கொன்றது யார்?) என்ற கேள்வி காட்டுத் தீயாகப் பரவ, இதை ஏதோ தி.மு.க-அ.தி.மு.க சண்டையைப் போலவே கையாண்டது அ.தி.மு.க அரசு. கடைசியில், ரகுவின் இறப்புக்கு ராங் ரூட்டில் வந்த லாரியே காரணம் என்று சொல்லி, அதன் டிரைவரை அவசர அவசரமாக கைது செய்தது போலீஸ். ரகுவின் குடும்பம் துக்கத்தில் மூழ்க, அந்த மரண ஓலத்துக்கு நடுவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்து முடிந்தது.

ரகுவின் குடும்பத்தை நேரில் கூட சந்தித்து ஆறுதல் சொல்லாத அ.தி.மு.க அரசு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மேடையில், செம்மொழி மாநாட்டின் போது வைக்கப்பட்ட பேனர்களை காண்பித்து, தி.மு.க-வைச் சாடியது. இப்போது வரை ரகு விபத்து தொடர்பான சி.சி.டி.வி வீடியோ வெளியிடப்படவில்லை. இதோ, அதே அ.தி.மு.க-வால் வைக்கப்பட்ட பேனர், இன்னோர் உயிரையும் பறித்துவிட்டது. இந்த முறை சி.சி.டி.வி வீடியோ தெளிவாக வந்துவிட்டது. இந்நிலையில், கோவை, அவிநாசி சாலையில் உள்ள ரகுவின் வீட்டுக்குச் சென்று, அவரின் குடும்பத்தினரைச் சந்தித்தோம்.

ரகு
ரகு

"ரகு எந்த விஷயம் செய்தாலும், பல முறை யோசித்துதான் செய்வான். 32 வயதுக்குள் வீடு, கார் என்று செட்டிலாகி இருந்தான். எங்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்திருக்கிறான். அமெரிக்காவில் இருந்தாலும், அவனேதான் சமைத்துச் சாப்பிடுவான். இங்கே வரும்போது எங்களுக்கும் சமைத்துக் கொடுப்பான். முப்பது ஆண்டுகளில் முடிக்க வேண்டிய கடனை, மூன்றே ஆண்டுகளில் முடித்தான். பள்ளிக்குச் செல்லும்போது, பேருந்துக் கட்டணத்துக்காக கொடுத்த காசில், இன்ஷூரன்ஸ் கட்டியுள்ளான். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸ் கட்டியிருக்கிறான்.

அவன் இறந்த பிறகு, இரண்டரை லட்ச ரூபாய் வந்தது. அப்போதுதான், எங்களுக்கு அந்த விஷயம் தெரிந்தது. அமெரிக்காவிலிருந்து, இங்கு வந்து பிசினெஸ் செய்ய இடமெல்லாம் பார்த்துவிட்டான். என் மனைவியின் அருகில்தான் தூங்குவான். கால் அமுக்கி, சொடக்கு எடுத்துவிட்டு, `கவலைப்படாதீங்க.. ஒன்றரை மாதத்தில் திரும்பிவந்து உங்களை நன்கு பார்த்துக் கொள்வேன்' என்று கூறினான்.

நாங்கள் விமானத்தில் சென்றதில்லை என்பதால், கடைசியாக அமெரிக்காவிலிருந்து வந்தபோது, அவனை வரவேற்பதற்காக எங்களுக்கு, கோவையிலிருந்து சென்னைக்கும், மீண்டும் சென்னையிலிருந்து கோவைக்கும் விமான டிக்கெட் போட்டான். நாங்கள் வேண்டாமென்று சொல்லியும், `சூழ்நிலை எப்படி இருக்குமென்று சொல்ல முடியாது.. வாங்க' என்று சொல்லி விமானத்தில் அழைத்து வந்தான்.

பேத்திக்குச் சோறு ஊட்டும்போது, அவனுக்கும் சோறு ஊட்டுவோம். அறிவைக் கொடுத்த ஆண்டவன், ஆயுளை மட்டும் கொடுக்கவில்லை" என்று கலங்கியவர்...

"'கடவுளுக்கு உதவிக்கு ஆளில்லாததால், ரகு மாமாவை அழைத்துக் கொண்டார். அங்கு அவர் பத்திரமாக இருக்கிறார். நீங்க, என்னை ரகுனு கூப்பிடுங்க' என்று சொல்லும் எங்கள் பேத்திதான், இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். சுபஶ்ரீயின் மரணம் எங்களுக்கு மேலும் வேதனையைக் கொடுத்துள்ளது. என் பிள்ளைகளை நான் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தேன். கடின உழைப்பின் மூலம்தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். அதனால், கஷ்டத்தின் வலியை என்னால் நன்கு உணர முடியும்.

ரகுவின் அப்பா மற்றும் தங்கை
ரகுவின் அப்பா மற்றும் தங்கை

அந்தக் குடும்பத்தின் நிலையை நினைத்து நான்கு நாள்களாக தூங்கவே இல்லை. ஆட்சியாளர்களின் அஜாக்கிரதைக்கு, எளிய மக்கள் பலியாவதா? இந்த அரசியல்வாதிகள் மாற மாட்டார்கள். நீதிமன்றம் சொல்லியும், கேட்கவில்லை என்றால், யாருக்கு இத்தனை சட்டங்கள்? இழப்பு எங்களுக்குத்தான். அந்தந்த வீட்டில் நடக்கும்போதுதான் இழப்பின் வலி புரியும்" என்றார் வேதனையுடன்.

ரகுவின் தங்கை ரேவதி, "என் அண்ணன் அனைத்து விஷயத்திலும் பர்ஃபெக்டாக இருப்பார். கடின உழைப்பாளி. அமெரிக்காவில் பணியாற்றினாலும் மிகவும் எளிமையாகத்தான் இருப்பார். உடல்ரீதியாக மட்டும்தான் அமெரிக்காவில் இருப்பார். உள்ளம் முழுவதும் குடும்பத்தைச் சுற்றியே இருக்கும். இங்கே இருந்தால் எங்களை எப்படிப் பார்த்துக் கொள்வாரோ, அப்படித்தான் அங்கே இருந்தும் எங்களைப் பார்த்துக் கொண்டார். பெரிதாக அறிமுகம் இல்லாத நபராக இருந்தால்கூட வெளியில் போகும்போது, `பத்திரமாகச் செல்லுங்கள். பாதுகாப்பாக ஓட்டுங்கள்' என்று அட்வைஸ் செய்வார். சுய உழைப்பில் வாழ வேண்டும் என்று நினைப்பார்.

ரகு
ரகு

வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் கார் ஓட்டிப் பழகினார்.

6-ம் வகுப்பிலிருந்து பழனி கோயிலுக்குச் சென்று வருகிறார். அப்படித்தான், அன்றைய தினமும் வீட்டிலிருந்து கிளம்பினார். வீட்டிலிருந்து கிளம்புவதற்குச் சில மணி நேரம் முன்பு, வெளியில் சென்று வந்தவர், 'இப்படி பொறுப்பே இல்லாமல், சாலையில் குழி தோண்டி பேனர் வைக்கின்றனர். மக்களோட உயிருக்கே ஆபத்து' என்று ஆதங்கப்பட்டார்.

கடைசியில், அது அவருக்கே எமனாகிவிட்டது. எதிரிக்குக் கூட இப்படி ஒரு சாவு வரக்கூடாது. அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது. துக்கம் மட்டும் உறைந்து நிற்கிறது" என்றவர் சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்.

ரகு
ரகு

இந்த இழப்பை எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாது. ஆனால், இத்தனை பேரின் உள்ளங்களில் அவர் வாழ்ந்து வருகிறார் என்று நினைக்கும்போது, மனதுக்குச் சற்று ஆறுதலாக இருக்கிறது. என் அண்ணனின் மரணம், இந்தச் சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். உயிர் போயே திருந்தாத மனிதர்கள், எவ்வளவு சட்டம் வந்தாலும் திருந்த மாட்டார்கள். மனசாட்சியைவிட மிகச்சிறந்த கோர்ட் எங்குமில்லை.

அரசியல்வாதிகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த பேனர் விஷயம் பெரிதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள், அறுந்து தொங்கும் மின் கம்பிகள் போன்ற பல்வேறு விதி மீறல்களால் தினசரி எத்தனையோ உயிர்களை பறிகொடுத்து வருகிறோம்.
ரகுவின் தங்கை ரேவதி

இங்கு எத்தனை பேர் விதிகளைச் சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள்? துணிச்சலாக தவறு செய்பவர்களில் எத்தனை பேருக்கு, அந்தத் தவற்றை ஏற்றுக் கொள்ளும் துணிச்சல் இருக்கிறது? சுற்றுச்சூழலையும் கெடுத்துவிட்டோம். உயிரின் மதிப்பையும் புரிந்து கொள்வதில்லை. அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம் என்று நினைத்தால், மிகவும் பயமாக இருக்கிறது.

சமூகப் பொறுப்புணர்வு எல்லோருக்கும் வேண்டும். வீட்டில் இருந்தும், கல்வியிலும் சமூகப் பொறுப்புணர்வைச் சொல்லி வளர்க்க வேண்டும். மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்க வேண்டும்.

இறந்த சில நாள்களில் ரகு என் கனவில் வந்து, 'நான் வாழ நினைத்த வாழ்க்கையை நீ வாழ வேண்டும்' என்று வாக்கு கேட்டார். சிறிது காலத்துக்குப் பிறகு, ரகு பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார். வாழ்வில் உள்ள மீதி நாள்களை நான் அப்படித்தான் வாழப் போகிறேன். 'நேற்று ரகு, இன்று சுபஶ்ரீ, நாளை யாரோ?' என்ற கேள்வி மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ரகு
ரகு

அந்த யாரோ நாமாகக் கூட இருக்கலாம். எனவே, இனி யாருக்கும் இந்த நிலை வரக் கூடாது என்ற எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும். அப்போதுதான், தீர்வு கிடைக்கும்" என்றார் உறுதியான குரலில்.

ரகுவும், சுபஶ்ரீயும் பயணித்த சாலைகளில், அந்தச் சம்பவங்களுக்கு, முன்பும், பின்பும் எத்தனையோ பேர் பயணித்திருப்பார்கள். இந்தச் சம்பவத்தைத் தட்டிக் கேட்காமல், வேடிக்கை மட்டும் பார்த்துச் சென்ற அனைவருமே குற்றவாளிகள்தாம். சினிமா ஹீரோக்களோ, சமூகப் போராளிகளோ எல்லா இடங்களிலும் வந்து தவறுகளைத் தட்டிக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்க வேண்டிய நேரம் இது.