கோவை பூலுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருள்மொழி என்ற மாணவி, ஆணி மீது நின்று ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் பறை இசைத்து சாதனை படைத்துள்ளார்.
கோவை மாவட்டம், ஆலாந்துறையை அடுத்த பூலுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மொழி. பேரூர் தமிழ்க் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பறை இசை மீது ஆர்வம்கொண்ட அருள்மொழி, அதில் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற கனவுடன் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து, இரண்டரை இன்ச் ஆணிகள் மீது ஏறி நின்று, 1.45 மணி நேரம் (10 -11.45 மணி) இடைவிடாமல் தொடர்ந்து பறை இசைத்து சாதனை படைத்துள்ளார் அருள்மொழி. தன்னுடைய இந்தச் சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து அருள்மொழி கூறுகையில், ``அப்பா ஜமாப் இசை வாசிப்பதில் வல்லவர். சுற்றுவட்டார கிராமங்களில் அவரைப்போல ஜமாப் வாசிக்க யாரும் இல்லை எனச் சொல்வார்கள். ஆனால், என்னுடைய சிறிய வயதிலேயே அப்பா உயிரிழந்துவிட்டார். எங்களது கிராமத்தைப் பொறுத்தவரை, பெண்கள் என்றால் வீட்டு வேலைகளைத்தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இங்கு பெண்கள் பள்ளிப் படிப்பை முடிப்பதே பெரிய விஷயம். சிலர் மட்டுமே கல்லூரிப் படிப்பை தொடர்கின்றனர்.

எனவே, ஏதாவது சாதனை மூலம் அந்த எண்ணத்தை மாற்றி, பெண்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்த வேண்டும் என நினைத்தேன். 'கிராமியப் புதல்வன்' இசைக்குழுவில் சேர்ந்து பறை இசை பயிற்சி கற்கத் தொடங்கினேன். ஓராண்டுக்கு மேல் பயிற்சி எடுத்தேன்.
பறை மட்டுமல்ல, ஒயிலாட்டம், கரகாட்டம், புலியாட்டம் எனப் பல்வேறு நாட்டுப்புறக் கலைகளைக் கற்று வருகிறேன். ஒரு சாதனையாக, ஆணி மீது நின்று பறை வாசிக்க முடிவு செய்தேன். தொடர்ந்து, ஆணி மீது நின்று பயிற்சி எடுத்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. நடக்கக்கூட முடியாது. ஆனால், என் பயிற்சியாளர் கலையரசன் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருந்தார்.
சொல்லப்போனால், ஆணி மீது நின்று ஒரு மணி நேரம் பறை இசைக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். என்னுடைய சாதனை வெறி, 45 நிமிடங்கள் கூடுதலாக இசைக்க வைத்தது.

இந்தச் சாதனையை முடித்துவிட்டு என் கிராமத்துக்குத் திரும்பியபோது, மேளதாளங்கள் வைத்து, தடபுடலாக வரவேற்பு கொடுத்தனர். அந்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. என்னை மாதிரி, ஏராளமான பெண்கள் கிராமங்களில் இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் தடைகளை உடைத்து சாதனை செய்ய வேண்டும்” என்றார் உற்சாகக் குரலில்.