அலசல்
Published:Updated:

“ஜட்டியோட உட்காரவெச்சு அடிச்சாங்க!” - போலீஸ் தாக்கியதால் இறந்தாரா கல்லூரி மாணவர்?

நீர்கோழியேந்தல்
பிரீமியம் ஸ்டோரி
News
நீர்கோழியேந்தல்

போராட்டக் களத்திலிருந்த மணிகண்டனின் தாய் ராமலட்சுமி கதறி அழுதுகொண்டிருந்தார். அவர் பேசும் நிலையில் இல்லை.

காவல்துறையினரால் சாமானியர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக எழும் சர்ச்சைகள் ஓயாதுபோலிருக்கிறது. சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன், வீட்டுக்கு அனுப்பப்பட்ட சில மணி நேரங்களிலேயே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘‘காவல் நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டதாலேயே மாணவர் மரணமடைந்திருக்கிறார்’’ என்று கொந்தளிப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன. அத்துடன், ‘‘சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம்’’ என்று கிராம மக்கள் போராட்டம் நடத்திவருவதால், முதுகுளத்தூரில் பதற்றம் பற்றிக்கொண்டிருக்கிறது.

“ஜட்டியோட உட்காரவெச்சு அடிச்சாங்க!” - போலீஸ் தாக்கியதால் இறந்தாரா கல்லூரி மாணவர்?

முதுகுளத்தூர் அருகேயுள்ள நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் - ராமலட்சுமி தம்பதியின் 22 வயது மகன் மணிகண்டன், கமுதியிலிருக்கும் கல்லூரியில் படித்துவந்தார். டிசம்பர் 4-ம் தேதி மாலை மணிகண்டன், தன் நண்பர்களுடன் டூ வீலரில் சென்றபோது, கீழத்தூவலில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். போலீஸார் வண்டியை நிறுத்தச் சொல்லி கைகாட்டியபோது மணிகண்டன் நிற்காமல் சென்றிருக்கிறார். சந்தேகமடைந்த காவலர்கள் அவரை விரட்டிப் பிடித்து, கீழத்தூவல் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றிருக்கிறார்கள். அதன் பிறகு அவரின் குடும்பத்தினரை வரவழைத்து மணிகண்டனை ஒப்படைத்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பிறகு நள்ளிரவில் மணிகண்டன் மரணமடைந்திருக்கிறார். இதையடுத்து, “காவல் நிலையத்தில் மணிகண்டனை அடித்து சித்ரவதை செய்ததே அவரது சாவுக்குக் காரணம்’’ என்கிறார்கள் மணிகண்டனின் குடும்பத்தினர். தொடர்ந்து, மணிகண்டனின் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், இறந்த மாணவனின் உடலை வாங்காமல் நீர்கோழியேந்தல் கிராம மக்கள் முதுகுளத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

“ஜட்டியோட உட்காரவெச்சு அடிச்சாங்க!” - போலீஸ் தாக்கியதால் இறந்தாரா கல்லூரி மாணவர்?

போராட்டக் களத்திலிருந்த மணிகண்டனின் தாய் ராமலட்சுமி கதறி அழுதுகொண்டிருந்தார். அவர் பேசும் நிலையில் இல்லை. மணிகண்டனின் சகோதரர் அலெக்ஸ் பாண்டியன்தான் நம்மிடம் பேசினார்.. ‘‘அப்பாவுக்குப் பார்வை தெரியாது. அம்மாதான் விவசாயக் கூலி வேலை பார்த்து எங்களை ஆளாக்குனாங்க. அண்ணன் மணிகண்டன் கமுதி காலேஜுல பி.ஏ இங்கிலீஷ் படிச்சுட்டு இருந்தாரு. `படிச்சு முடிச்சதும், நல்ல வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாத்துவேன்’னு சொல்லுவார். எந்த வம்புதும்புக்கும் போகாம ஊருல எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவார்.

அன்னைக்கு ஒரு வேலையா முதுகுளத்தூருக்குப் போறதுக்காக ஃப்ரெண்ட் சஞ்சய்யைக் கூட்டிக்கிட்டு பைக்ல போயிருக்காரு. அப்ப, போலீஸ் செக் பண்றதைப் பார்த்ததும் ஃபைன் போட்டுருவாங்கனு நெனைச்சு, ஃபிரெண்டை தூரமா இறக்கிவிட போயிருக்காப்ல. திரும்புறப்ப வண்டி சேத்துக்குள்ள மாட்ட, அந்த நேரம் போலீஸ் துரத்தி வந்து பிடிச்சுட்டாங்க. அஙகேவெச்சே அண்ணனை அடிச்சிருக்காங்க. காலேஜ் ஸ்டூடன்ட்டுனு சொல்லியும் கேட்கலை. சாயங்காலம் நாலரை மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தை கீழத்தூவல்காரங்க சிலபேரு பார்த்திருக்காங்க.

அலெக்ஸ் பாண்டியன்
அலெக்ஸ் பாண்டியன்

அப்புறம் அண்ணனை கீழத்தூவல் ஸ்டேஷனுக்கு அடிச்சே கூட்டிட்டுப் போய் ஜட்டியோட உக்காரவெச்சுருக்காங்க. அங்கேயும் இரும்புக்கம்பியவெச்சு கடுமையா தாக்கியிருக்காங்க. அதுக்குப் பிறகுதான் ராத்திரி ஏழு மணி வாக்குல எங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன்லருந்து போன் போட்டு, ‘உடனே வந்து கூட்டிட்டுப் போங்க’னு சொன்னாங்க. நாங்க ஆட்டோ பிடிச்சு, ஸ்டேஷனுக்கு எட்டு மணிக்குப் போனோம். எங்ககிட்ட கையெழுத்து வாங்கி, போட்டோவெல்லாம் எடுத்த பிறகே அண்ணனை எங்களோட அனுப்பிவெச்சாங்க. அப்பவே அண்ணன் ரொம்ப துவண்டுபோயிருந்தார். வீட்டுக்குக் கூட்டி வந்த பிறகுதான், போலீஸ் கடுமையா தாக்கின விஷயத்தைச் சொல்லி அழுதாரு. ரோட்டுல அடிச்சே இழுத்துட்டுப் போனதையும், ஃபைபர் கம்பு, இரும்புக்கம்பியால முதுகு, வயிறு, மர்ம உறுப்புல அடிச்சதையும் அவர் சொன்னதைக் கேட்டு நாங்க அழுதோம். நைட்டுங்கிறதால உடனே ஆஸ்பத்திரிக்குப் போக முடியலை. ஆறுதல் சொல்லிப் படுக்கவெச்சப்ப வலியால தூங்க முடியாம முனகிக்கிட்டே இருந்தவரு, நைட்டு ஒரு மணிக்கு திடீர்னு இறந்துட்டாரு. இதுக்கு கீழத்தூவல் போலீஸ்தான் காரணம். இன்ஸ்பெக்டர் லட்சுமி, போலீஸ்காரங்க லெட்சுமணன், பிரேம்குமார் மூணு பேர் மேலயும் நடவடிக்கை எடுக்கணும்’’ என்றவர், அடக்க முடியாமல் அழத் தொடங்கினார்.

கார்த்திக்
கார்த்திக்

கீழத்தூவல் காவல் நிலையம் சென்று இன்ஸ்பெக்டர் லட்சுமியிடம் பேச முயன்றபோது, அவர் பேச மறுத்துவிட்டார். இந்தக் குற்றச்சாட்டு பற்றி ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக்கிடம் கேட்டோம். ‘‘வழக்கமான வாகன சோதனையின்போது, ஒரு வழக்குல சம்பந்தப்பட்ட சஞ்சய் உள்ளிட்டவர்கள் பைக்ல ட்ரிபிள்ஸ் போயிருக்காங்க. இந்த மாதிரி குற்றப்பின்னணி உள்ள நபருடன் செல்பவர்களைக் காவல்துறை விசாரிப்பது நடைமுறையில் இருப்பதுதான். அப்படி விசாரிக்க நிறுத்தியபோது நிற்காமல் சென்றிருக்கிறார்கள். வண்டி சேற்றில் மாட்டி, மற்ற இருவரும் தப்பிச் செல்ல, மணிகண்டன் மாட்டிக்கொண்டார். அவரை அழைத்து வந்து சாதாரண என்கொயரி மட்டுமே நடத்தியிருக்கிறார்கள். யாரும் அவரை அடிக்கவில்லை. மணிகண்டனின் மொபைலை செக் செய்தபோது அவர் அரிவாளுடன் இருப்பது போன்ற படங்கள் இருந்துள்ளன. ‘படிக்கிற வயதில் இதெல்லாம் எதற்கு?’ என்று விசாரித்து, அவரின் குடும்பத்தினரை அழைத்து எச்சரித்து ஒப்படைத்திருக்கிறார்கள். இதுதான் நடந்தது... மற்றபடி வேறெந்த அத்துமீறலும் நடக்கவில்லை. இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு அனுப்பப்பட்டவர், அதன் பிறகு எங்கு சென்றார், என்ன நடந்தது என்று தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்துவருகிறோம்’’ என்றார்.

“ஜட்டியோட உட்காரவெச்சு அடிச்சாங்க!” - போலீஸ் தாக்கியதால் இறந்தாரா கல்லூரி மாணவர்?

ஆரோக்கியமாக இருந்த மாணவர் ஒருவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணைக்குப் பிறகு விடுவித்த சில மணி நேரங்களிலேயே மரணம் அடைந்திருக்கிறார் என்பது சந்தேகத்துக்குரிய மரணமே. இதில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!