அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மதுரையை மிரட்டும் கமிஷன் கலாசாரம்... தி.மு.க-வுக்கு எதிராக வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள்!

மதுரை மாநகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரை மாநகராட்சி

என்னைப் பற்றி வாட்ஸ்அப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் தகவல் அனைத்தும் பொய்யானவை. இந்தத் தகவல் நீண்ட நாள்களாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது

“மதுரை மாநகராட்சியில், 10 வருடங்களுக்கு முன்பு இருந்த ‘கமிஷன் கலாசாரம்’ மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது” என்று குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள்!

மதுரை மாநகராட்சியின் 42-வது வார்டு தி.மு.க கவுன்சிலரான செல்வி என்பவரின் கணவர் கமிஷன் கேட்டு, பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளி ஒருவரை போனில் மிரட்டும் ஆடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சியின் மத்திய மண்டலத் தலைவரான தி.மு.க கவுன்சிலர் பாண்டிச்செல்வியின் கணவரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனைப் பற்றிய வாட்ஸ்அப் பதிவு ஒன்று மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

மிசா பாண்டியன்
மிசா பாண்டியன்

அதில், “மு.க.அழகிரியின் ஆதரவாளரான மிசா பாண்டியன், 20 வருடங்களுக்கு முன்பு துணை மேயராகப் பொறுப்பு வகித்தார். அப்போது புதிதாக வீடு கட்டுபவர்கள், மராமத்து செய்பவர்களிடம் கமிஷன் வாங்கும் நடைமுறையை இவர்தான் ஏற்படுத்தினார். பல கவுன்சிலர்களும் அதைப் பின்பற்றினார்கள். தற்போது மிசா பாண்டியனின் மனைவி பாண்டிச்செல்வி மத்திய மண்டலத் தலைவராக இருக்கிறார். எனவே, மண்டலத்துக்கு உட்பட்ட 19 வார்டுகளிலும் தன் அதிகாரத்தைச் செலுத்தி ஆட்களை வலம்வரச் செய்து, வீடு கட்டுகிறவர்களிடம் வசூல்வேட்டையில் ஈடுபட்டுவருகிறார்...’’ என்பதாக நீள்கிறது அந்தப் பதிவு.

தி.மு.க கவுன்சிலரின் கணவரது மிரட்டல் ஆடியோவுக்கு எதிராக பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட அ.தி.மு.க-வினரோ, ‘‘ராஜன் செல்லப்பா மேயராக இருந்தபோது, மண்டலத் தலைவர் ராஜமாணிக்கம் மெடிக்கல் கடைக்காரர் ஒருவரிடம் கமிஷன் கேட்டு மிரட்டியதாகப் புகார் எழுந்தது. உடனே ராஜமாணிக்கத்தின் பதவியைப் பறித்து கட்சியிலிருந்து நீக்கியதோடு, உரிய சட்ட நடவடிக்கையும் எடுத்தார் ஜெயலலிதா. தி.மு.க-வில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை’’ என்கின்றனர்.

மதுரையை மிரட்டும் கமிஷன் கலாசாரம்... தி.மு.க-வுக்கு எதிராக வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள்!

சுழன்றடிக்கும் சர்ச்சைகளுக்கு விளக்கம் கேட்டு, மிசா பாண்டியனிடம் பேசினோம். ‘‘என்னைப் பற்றி வாட்ஸ்அப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் தகவல் அனைத்தும் பொய்யானவை. இந்தத் தகவல் நீண்ட நாள்களாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. போலீஸில் புகார் கொடுத்தால் யார் அனுப்பினார்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், நான் அதை விரும்பவில்லை. மண்டலத் தலைவரான என் மனைவியை வாகனத்தில் கொண்டுபோய் விடுவது போன்ற சிறு உதவிகளைத்தான் செய்துவருகிறேன். மற்றபடி நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை. எந்த அதிகாரிக்கும் நான் உத்தரவிடவில்லை. மத்திய மண்டலத்தில்தான் மேயர் உள்ளிட்ட எங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெற்றிபெற்ற வார்டுகள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது நான் எப்படி அனைத்து வார்டுகளிலும் அதிகாரம் செலுத்த முடியும்... நான் பணம் கேட்பதாகச் சொல்வது உள்ளிட்ட அனைத்துப் புகார்களும் பொய்யானவை’’ என்று மறுத்தார்.

ஆடியோவும் பதிவும் அரசியலுக்குக் கூற்றாகும்!