அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

சாட்சி சொன்னால் உங்களையும் கொல்வோம்... நெல்லையை மிரட்டும் சாதியப் படுகொலைகள்!

சாதியப் படுகொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சாதியப் படுகொலைகள்

எங்க குடும்பத்துக்குச் சொந்தமான கோயிலை இன்னொரு சமுதாயத்தினர் அபகரிக்க நினைக்கிறார்கள். எங்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி அடுத்தடுத்து கொலைகளைச் செய்கிறார்கள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சாதிவெறி அரிவாளுக்குப் பலியான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது!

சாட்சி சொன்னால் உங்களையும் கொல்வோம்... நெல்லையை மிரட்டும் சாதியப் படுகொலைகள்!

அடுத்தடுத்து கொலை!

நெல்லை அருகேயுள்ள சீவலப்பேரி கிராமத்தில் இருக்கும் சுடலை மாடசாமி கோயில் அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்றது. சிறுதெய்வக் கோயிலாக இருந்தாலும் எப்போதும் கூட்டம் அலைமோதும் என்பதால், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமான இந்தக் கோயிலை ஊரிலுள்ள பெரும்பான்மைச் சமூகத்தினரும் உரிமை கொண்டாட ஆரம்பித்தனர். இதனால் திருவிழா, முதல் மரியாதை, கோயிலையொட்டி கடை போடுவது என இரு சமூகத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுவந்தது.

இந்தத் தகராறில், கோயிலில் தலைமைப் பூசாரியாக இருந்த சிதம்பரம் என்ற துரை கடந்த ஆண்டு, ஏப்ரல் 18-ம் தேதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். சாதி மோதலுக்குப் பெயர்பெற்ற வட்டாரம் இது என்பதால், அந்தக் கொலை மாவட்டம் முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாட்சி சொன்னால் உங்களையும் கொல்வோம்... நெல்லையை மிரட்டும் சாதியப் படுகொலைகள்!

இதையடுத்து சிதம்பரம் கொலை வழக்கில் கைதானவர்களின் தரப்பைச் சேர்ந்த சிலர், சாட்சிகளை மிரட்டியுள்ளனர். சிதம்பரத்தின் உறவினரான மாயாண்டி என்பவர், இந்த மிரட்டல்களையெல்லாம் பொருட்படுத்தாமல் சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று சாட்சியம் அளிக்க வைத்திருக்கிறார். அதனால் மாயாண்டிமீது கோபமடைந்த எதிர்த்தரப்பு கடந்த 10-ம் தேதி அவரையும் துள்ளத்துடிக்க வெட்டிக் கொன்றிருக்கிறது.

ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால் பதற்றத்தில் இருக்கும் சீவலப்பேரி கிராமத்துக்குச் சென்றோம். இறந்த மாயாண்டியின் மனைவி நம்பி நாச்சியார் நம்மிடம், ‘‘அவர் எந்த வம்புக்கும் போக மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டுனு இருப்பார். அன்னிக்கு சாயங்காலம் காபி குடிச்சுட்டு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போனார். மேய்ச்சல் காட்டுலேயே 10 பேர் சேர்ந்து அவரைக் கண்டந்துண்டமா வெட்டிக் கொன்னுட்டாங்க...” என்றவர் தொடர்ந்து பேச முடியாமல் விம்மினார்.

சாட்சி சொன்னால் உங்களையும் கொல்வோம்... நெல்லையை மிரட்டும் சாதியப் படுகொலைகள்!

கடந்த ஆண்டு கொலையான பூசாரி சிதம்பரத்தின் சகோதரர் சுப்பிரமணியன் நம்மிடம் பேசுகையில், “எங்க குடும்பத்துக்குச் சொந்தமான கோயிலை இன்னொரு சமுதாயத்தினர் அபகரிக்க நினைக்கிறார்கள். எங்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி அடுத்தடுத்து கொலைகளைச் செய்கிறார்கள். எங்களை ஊரைவிட்டே ஓடவைப்பதுதான் அவர்களது திட்டம். இதை அரசு வேடிக்கை பார்க்கப்போகிறதா?” என்று குமுறினார்.

அடுத்தடுத்து நடந்த கொலைகளால் கோபமடைந்த மக்கள் மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக சாதிரீதியான பல அமைப்புகளும் களமிறங்கியதால், நெல்லை மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்தபடியே இருந்தது.

சாட்சி சொன்னால் உங்களையும் கொல்வோம்... நெல்லையை மிரட்டும் சாதியப் படுகொலைகள்!

இது தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில இளைஞரணி பொதுச்செயலாளரான பொட்டல் துரை, “அரசின் அலட்சியம் காரணமாகவே மாயாண்டி கொலை நடந்திருக்கிறது. ஏற்கெனவே சிதம்பரம் கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதான 14 பேர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள். இதற்காக எதிர்த்தரப்பினர் கிடா வெட்டி, கறி விருந்து வைத்ததுடன், கொலையாளிகளுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை கொடுத்திருக்கிறார்கள். சிதம்பரம் கொலை வழக்கின் சாட்சிகள் வீட்டுக்கே சென்ற சிலர், ‘சாட்சி சொன்னால் உங்களையும் வெட்டிக் கொல்வோம்’ என்று மிரட்டியிருக்கிறார்கள். அதை கிராம மக்களும் போலீஸாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் போலீஸார் அஜாக்கிரதையாக இருந்ததால், இப்போது மாயாண்டி கொலையும் நடந்துவிட்டது. கோயில் நிலம் எங்கள் சமுதாயத்துக்குச் சொந்தமானது. அதற்கான முறையான ஆவணங்கள் அனைத்தும் இருப்பதால் வருவாய்த்துறையினர் அந்த இடத்தை அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும்” என்றார்.

காவல்துறையினரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, “மாயாண்டி கொலை நடந்த சில மணி நேரத்தில் 13 கொலையாளிகளைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் மேலும் இருவரைக் கைதுசெய்திருக்கிறோம். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாலேயே அனைவரும் கோர்ட்டுக்குச் சென்று சாட்சியம் அளித்திருக்கிறார்கள். கிராமத்தில் இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்கள்.

சாட்சி சொன்னால் உங்களையும் கொல்வோம்... நெல்லையை மிரட்டும் சாதியப் படுகொலைகள்!

கொலையானவரின் உடலை வாங்க மறுத்து ஆறு நாள்களாகப் போராட்டம் நீடித்த நிலையில், அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, கொலையான மாயாண்டி குடும்பத்தினரையும், சமுதாய அமைப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி மாயாண்டி உடலை வாங்கப் போராட்டக்காரர்கள் சம்மதித்தனர்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “கொலையான சிதம்பரம், மாயாண்டி ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். கோயில் நிலத்தை அளவீடு செய்து பட்டா கொடுக்கப்படும். கோயில் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்படுவதோடு, அந்தப் பகுதி முழுவதும் சிசிடிவி அமைத்து, இனியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படும்” என்றார்.

சாட்சி சொன்னால் உங்களையும் கொல்வோம்... நெல்லையை மிரட்டும் சாதியப் படுகொலைகள்!

வழிபாட்டுத் தலங்களின் நோக்கமே மன அமைதிதான். அதன் பெயரிலேயே மோதிக்கொள்கிற, கொலை செய்கிற மனித வக்கிரங்களை என்னவென்று சொல்வது?