
ஸொமோட்டோ, அப்கிரேடு, போன்ற நிறுவனங்களும் குறைக்கப்பட்ட சம்பளத்தை அதிகரித்துத் தரத் தொடங்கியுள்ளன!
பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியிருப்பதால், கொரோனா காலத்தில் குறைத்துக் கொடுத்த சம்பளத்தை, பல நிறுவனங்கள் அதிகரித்துத் தரத் தொடங்கியுள்ளன.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) குழுமம், அதன் ஹைட்ரோகார்பன் பிரிவில் பணிபுரிபவர்களுக்குக் குறைக்கப்பட்ட சம்பளத்தை மீண்டும் தர ஆரம்பித்திருக்கிறது. சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு போனஸும் கொடுத்திருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தில் ஹைட்ரோகார்பன் பிரிவில்தான் ஊரடங்கு காலத்திலும் புதிதாக 30,000 பேர் வேலைக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பணியாளர்களுக்கு ஏற்கெனவே குறைக்கப்பட்ட சம்பளம் 100% அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம், ஆண்டு சம்பளம் ரூ. 15 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு சம்பளத்தில் 10 சதவிகிதத்தை 2020 ஏப்ரலில் குறைத்தது. இந்தக் குறைக்கப்பட்ட சம்பளத்தை ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொடுக்கிறது.

ஸொமோட்டோ, அப்கிரேடு, க்ரோஃபெர்ஸ் போன்ற நிறுவனங்களும் குறைக்கப்பட்ட சம்பளத்தை அதிகரித்துத் தரத் தொடங்கியுள்ளன. இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைக்கவில்லை என்பதுடன், பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்தன. தற்போது சம்பள உயர்வையும் அளிக்கத் தொடங்கியுள்ளன. இனி எல்லா நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என நம்புவோம்!