``நியூசிலாந்தைப் போல் தமிழ்நாடும் விரைவில் மாறும். நியூசிலாந்து பிரதமரைப் போல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மிகவும் மகிழ்ச்சியாக அந்த அறிவிப்பை மக்கள் மத்தியில் வெளியிடுவார்'' எனக் கொரோனா நோயாளிகளே இல்லாத நாடாக மாறியிருக்கிற நியூசிலாந்தைப் போல் தமிழ்நாடும் மாறும் என, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக வருவாய்த் துறை அமைச்சரும், திரு.வி.க நகர் மண்டல கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருபவருமான ஆர்.பி.உதயகுமார் கருத்துத் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், ``அரசின் வழிகாட்டுதலையும் திட்டங்களையும் நியூசிலாந்து மக்கள் தாங்களாகவே முன்வந்து கடைப்பிடித்ததால்தான் கொரோனா ஒழிப்பு சாத்தியாமனது'' என்றும் தெரிவித்திருந்தார்.

நியூசிலாந்தைப் போல, கொரோனா நோயாளிகளே இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாடும் மாற வேண்டும் எனும் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் எதிர்பார்ப்பு போற்றத்தக்கது. ஆனால், தமிழகத்தில் அதற்கான சாத்தியங்கள் எதுவும் நம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல முடியும். இது வெறும் அவநம்பிக்கையிலோ, இல்லை ஆளும் கட்சிக்கு எதிராக ஏதாவது பேசியே தீரவேண்டும் என்கிற வேண்டுதல்களிலோ வெளிப்பட்ட வார்த்தை இல்லை. மிக வேகமாக கொரோனா தாக்குதலுக்கு உள்ளான நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. ஆனால், குறிப்பிட்ட நாள்கள் இடைவெளியில் அதிகரித்த எண்ணிக்கை, பின் எப்படி ஆட்சியாளர்களின் துரித நடவடிக்கையால் சீராகக் குறைந்தது என்பதை அறிந்தவர்கள் எவரும், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் தமிழகத்தை கற்பனையாகக் கூட நியூசிலாந்துடன் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள்.
நியூசிலாந்தைப் போல மாறவேண்டும் என்பதோடு அமைச்சர் நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை. அரசின் வழிகாட்டுதலை மக்கள் தாமாக வந்து பின்பற்றியதால் இது சாத்தியமானது என்றும் முத்தாய்ப்பாக சில வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். சரியான வழிகாட்டுதல்கள் என்றால் தாமதமாகவே பின்பற்றலாம், தவறாக வழிநடத்தியவர்களின் பின்னால் தாமாகச் சென்றாலும் அல்ல வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டாலும் குழப்பம்தானே மிஞ்சும். அதுதான் தமிழகத்திலும் நடந்திருக்கிறது.
`வெறும் 50 லட்சம் மக்கள் தொகைகொண்ட நாட்டை, 8 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தோடு ஒப்பிடுவது சரியா?
ஒரு தேசத்தின் நிர்வாகத்தோடு, ஒரு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் பகுதியளவு அதிகாரம் மட்டுமே கொண்டே மாநிலத்தோடு ஒப்பிடுவது சரியா?'
- என்று கேட்பவர்களுக்கு நிச்சயமாக, இது போன்ற நெருடல் கேள்விகள் எழா எண்ணம் இந்த ஒப்பீடு இருக்கும் என்பதையும், அமைச்சர் தானாகவே முன்வைந்து இப்படியொரு ஒப்பீட்டை முன்வைத்திருப்பதால், இரு அரசுகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாமே!
(தமிழகம் பகுதி அளவே அதிகாரம் கொண்ட, இந்திய ஒன்றியத்தின் பகுதியாகவும், பல முக்கியமான அதிகாரங்கள் மத்திய அரசின் வசமே இருப்பதாலும், இந்திய அளவில் சில ஒப்பீடுகள் தவிர்க்க முடியாததாகிறது)

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிக முதன்மையானது ஊரடங்கு. கொரோனா வைரஸ் பரவல் நிகழ்ந்த பல நாடுகளிலும் அது கடைப்பிடிக்கப்பட்டது. நம் நாட்டிலும் மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்காகவும், 24 முதல் கட்டாய ஊரடங்காவும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு நியூசிலாந்தும் விதிவிலக்கல்ல. ஆனால், மார்ச் 23-ம் தேதி இரவு எட்டு மணிக்கு மைக்கப் பிடித்துப் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, வெறும் நான்கு மணி நேர இடைவெளியில் நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவிப்பு செய்தார். நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சொந்த மாநிலங்களுக்கும் மற்ற மாநிலங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்களாக வேலை செய்துவரும் நாட்டில் ஊரடங்குக்காகப் பிரதமர் கொடுத்த கால அவகாசம் வெறும் நான்கு மணி நேரம்.
அதேவேளை, பெருமளவில் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டிராத தேசமான, நியூசிலாந்தில் அந்த நாட்டுப் பிரதமர், ஜெசிந்தா ஆர்டர்ன் (Jacinda Ardern) கொடுத்த கால அவகாசம் 48 மணி நேரம். நான்கு மணி நேரத்துக்கும் நாற்பத்தியெட்டு மணி நேரத்துக்குமான வித்தியாசம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மத்திய அரசு 21 நாள்கள், ஊரடங்கு அறிவிப்பிதற்கு முன்பே, மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் 30-ம் தேதி காலை ஆறு மணி வரை, தமிழக அரசின் சார்பில் அறிவித்திருந்த ஊரடங்கின் தகவல்கள் மக்களிடம் வந்து சேரவே 23-ம் தேதி இரவாகிவிட்டது. அன்று இரவே, மக்கள் பெரும் கூட்டமாக சொந்த ஊர்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிய ஆரம்பித்துவிட்டனர். அன்றைய தினம் மட்டுமே இரண்டு லட்சம் மக்கள் சென்னையிலிருந்து பயணப்பட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இடம் பெயர்ந்து வாழும் மக்களைக் கணக்கில் கொண்டிருந்தால் இப்படி ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை அறிவிக்க எப்படி மனம் வரும்... இல்லை உடனடியாக ஊரடங்கை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அப்போது உருவாகியிருந்தது என்றால் அந்தக் கட்டாயம் உருவாகும் வரை மிகப் பொறுமையாக இருந்தது ஏன்?
வெறும் ஆறு பேர் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தபோது ஊரடங்கை அறிவித்தது நியூசிலாந்து. ஆனால், பிரதமர் மோடி ஊரடங்கை அறிவிக்கும் போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-க்கும் மேல். தமிழகத்தில் எண்ணிக்கை இரண்டிலக்கத்தில் அப்போது இருந்தாலும் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்துவிட்டது. ஜனவரி மாதம் கேரளாவில் முதல் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், ஊரடங்கை அறிவிக்க மத்திய அரசு எடுத்துக்கொண்ட கால அவகாசம் கிட்டத்தட்ட 50 நாள்கள். ஈரான் நாட்டிலிருந்து வந்த முதியவர் மூலம்தான், நியூசிலாந்தில் முதல் கொரோனா தொற்று உருவானது. உடனே, நியூசிலாந்து அரசு அந்நாட்டின் மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், இந்தியாவில், தமிழகத்தில் அது போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்பட்டனவா?
வெறும், 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவருக்கு சமூகப் பரவல் மூலம் வைரஸ் தொற்று பரவியிருப்பதைப் பயண வரலாறுகள் மூலம் அறிந்து கொண்ட அந்த தேசம், வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தை அடைந்துவிட்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. தொடர்ச்சியாக, 500 நோயாளிகளை நெருங்குவதற்கு முன்பாகவே, நன்காம் கட்டத்தை அடைந்துவிட்டதாக அறிவித்தும், கடுமையான விதிமுறைகளுடன், தேசிய நெருக்கடி நிலையை அறிவித்து, பல துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. ஆனால், ஒட்டு மொத்தமாக மூன்று லட்சம் பேரையும், தமிழகத்தில் மட்டும் 35,000 பேரையும் நோய்த் தொற்றிக்கொண்ட பின்பும் சமூகப் பரவல் குறித்து இந்த அரசுகள் ஒரு உறுதியான தகவலை இன்னும் தெரிவிக்கவில்லை.

அடுத்ததாக, தன் ஒருவரால் மட்டுமே முடியும் என்றில்லாமல், சுகாதார வல்லுநர்கள், பொது சேவகர்கள், பரந்த அரசியலமைப்பு பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாட்டின் 5 மில்லியன் மக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா. ஆனால், பலமுறை வலியுறுத்தியும் இதுவரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக்கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனம் வரவில்லை. எதிர்க்கட்சிகளை அழைத்து ஆலோசிக்க வேண்டும் என்ற ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் கோரிக்கைக்கு, `ஸ்டாலின் என்ன டாக்டரா, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது' என அறிவுப்பூர்வமான பதில் கேள்விகளை எழுப்பி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
கொரோனா விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் ஆலோசனை வழங்க என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஆனாலும் எதிர்க்கட்சிகள், தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே செயல்படுகின்றனர். அவர்கள் மக்கள் மீதான அக்கறையிலோ கொரோனாவிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்திலோ அரசை விமர்சிக்கவில்லை. இதுவரை ஒரு ஆரோக்கியமான ஆலோசனையைக் கூட எதிர்க்கட்சிகள் வழங்கவில்லை. இக்கட்டான சூழலில் எதிர்க்கட்சிகள், இந்த நோயை வைத்து அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. நல்ல ஆலோசனைகளை வழங்கினால் அதை ஏற்றுச் செயல்பட அரசு தயாராக இருக்கிறது. ஆனால் கொரோனா விவகாரத்தில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள நினைக்கும் எதிர்க்கட்சிகளின் நோக்கம் ஒருபோதும் நடக்காது.எடப்பாடி பழனிசாமி
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பிரிட்ஜட்ஸ் தலைமையில், பெரும்பான்மையான எதிர்க்கட்சித் தலைவர்களை இணைத்து, சிறப்புத் தேர்வுக் குழு ஒன்றை அமைத்து,பொதுமக்கள் அளிக்கும் ஆன்லைன் புகார்களை விசாரிக்கச் செய்தது நியூசிலாந்து அரசாங்கம். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமான போக்குகளைக் கண்டிக்குமளவுக்கு, அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால், இங்கோ, எங்கே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால், தங்களின் இமேஜ் பறிபோய்விடும் என்கிற அச்சத்தில் இதுவரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் இழுத்தடித்து வருகிறார் எடப்பாடி. எதிர்க்கட்சியினர் மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களைக் கூட முறையாகக் கவனிக்கத் தவறிவிட்டது மட்டுமல்லாமல் அது போலியான புகார்கள் என சத்தியம் அடித்து சாதித்து வருகின்றனர்.

கொரோனா பரவல் அடுத்தடுத்த நிலையை எட்ட எட்ட கடுமையான தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்து வந்தது நியூசிலாந்து அரசாங்கம். அதேவேளை, ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்வதற்கு முன்பாக முறையான கால அவகாசம் அளித்தது. இங்கே வெறும் ஒருநாள் மட்டுமே அது போன்ற அவகாசம் தரப்பட்டது. அந்த ஒருநாளில் மக்கள் பெரும் கூட்டமாக வீதிகளில் இறங்க அது மேலும் பல சிக்கலைத்தான் உருவாக்கியது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரை, சில ஹோட்டல்களைக் கையகப்படுத்தி அதில் அவர்களைத் தங்க வைத்தது நியூசிலாந்து அரசாங்கம். இங்கேயோ, தனியார் மருத்துவமனைகளைக் கூட தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தயங்குறது அரசாங்கம். கொரோனா தொற்று லேசாகப் பரவ ஆரம்பித்த உடனே ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தனியார் மருத்துவமனைகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உத்தரவைப் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, கொரோனா தற்காப்பு நடவடிக்கையில் மிக முக்கியமானது பரிசோதனை. ஆரம்பம் முதலே இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டது தமிழக அரசு. பத்து லட்சம் பேருக்கு, 60,000 பேரை பரிசோதனை செய்யும் நியூசிலாந்து அரசாங்கத்துடன் வெறும் 7,000 பரிசோதனைகளை மட்டுமே (சென்னையில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேல்) மேற்கொள்ளும் தமிழக அரசை, ஒப்பிடுவதற்கு முன்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சற்று யோசித்திருக்கலாம். அதிகமான பரிசோதனைகளைச் செய்வதன் வாயிலாக, கொரோனா தொற்று இருப்பவர்களைத் தனிமைப்படுத்தி, அடுத்தடுத்து பரவுவதிலிருந்து தடுக்க முடியும். அதைக் கூட இந்த அரசு செய்ய முன்வராதபோது எப்படி நியூசிலாந்தைப் போல் மாறும்.

அதுமட்டுமல்ல, நியூசிலாந்து அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த காலகட்டம் அது. உணவகங்களுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா, தன் வருங்காலக் கணவருடன் ஒரு உணவகத்துக்குச் செல்கிறார். உள்ளே, அனுமதிக்கப்பட்ட இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. பிரதமரை உள்ளே அனுமதிக்க முடியாது என அந்த கஃபே நிர்வாகம் தெரிவித்துவிட்டது. எந்த விதிமுறைகளையும் மீறாமல், எதையும் மாற்றாமல், சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து பின் இருக்கை கிடைத்ததும் உணவருந்தி விட்டுச் சென்றுள்ளார் ஜெசிந்தா. ஆனால், இங்கே நிலைமை அப்படியே தலைகீழ், ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் மக்கள் கூடக்கூடாது, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என அரசே ஒரு அரசாணையை வெளியிட்டுவிட்டு, தன் சொந்தக் கட்சிக்காரர்களையே எதிர்க்கட்சியை எதிர்த்து , பொது இடங்களில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டு பேரவலமும் கடந்த சில நாள்களுக்கு முன்னாள் நடந்தேறியது.
அதுமட்டுமா, தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வசூலிக்கக் கூடாது, வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்கக்கூடாது என்பன போன்ற அரசின் எந்த அறிவிப்புகளும் கிஞ்சித்தும் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் மேற்கொள்ளக்கூடாது என்பது வரை உத்தரவிட்டு அதை நடைமுறைக்கும் கொண்டு வந்திருக்கிறது நியூசிலாந்து அரசாங்கம்.
நியூசிலாந்தின் எல்லைகளுக்குள் மற்ற நாட்டவர்களுக்குத் தற்போது வரை முற்றிலும் அனுமதியில்லை. இங்கே என்ன நிலைமை என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தினசரி மாலையில் ஃபேஸ்புக் நேரலையில் வந்து, மக்களின் சந்தேகங்கள் அனைத்துக்கும் பதிலளித்து அவர்களைக் குழம்ப விடாமல், வெளியில் தேவையில்லாமல் வரவிடாமல் தடுத்தார். இங்கே நிலவிய குழப்பம்தான் பலரைத் தேவையில்லாமல் வீதியில் கூட நிர்பந்தித்தது. அதன் காரணமாகவே நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக்கொண்டே சென்றது.
சென்னையில் வாழும் லட்சக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு முறையாக வழிவகை செய்யாததன் விளைவே இன்று சென்னையில் இவ்வளவு பேருக்குத் தொற்று ஏற்படக் காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். நிலைமை இப்படியிருக்க, நியூசிலாந்தைப் போல சென்னை மாறும் என எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களே!
மேலும் அங்கு ஜீரோ கொரோனா சாத்தியமானதற்கு மக்களின் ஒத்துழைப்பு மட்டுமல்ல; ஆட்சியாளர்களின் சாமர்த்தியமும் துணிச்சலான நடவடிக்கையும்தான் காரணம். ஆனால், தடுப்பு நடவடிக்கையிலும் கூட எந்தவழியில் ஊழல் செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் சகாக்களை உடன் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது அமைச்சர் அவர்களே?