Published:Updated:

`தனியார் கல்லூரிகளிலும் அரசுக் கட்டணம்!' - குழப்பிய மத்திய அரசு அறிவிப்பு; தமிழக நிலவரம் என்ன?

Doctor
News
Doctor ( (Representational Image) )

`இது ஏழை எளிய மாணவர்களுக்கான வரப்பிரசாதம், உடனே இதுகுறித்து அரசாணை வெளியிட வேண்டும்' என்று சிலர் குரல் கொடுக்கின்றனர். இன்னும் சிலரோ, இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்' என்கின்றனர். இந்தச் சர்ச்சை மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

`தனியார் கல்லூரிகளிலும் அரசுக் கட்டணம்!' - குழப்பிய மத்திய அரசு அறிவிப்பு; தமிழக நிலவரம் என்ன?

`இது ஏழை எளிய மாணவர்களுக்கான வரப்பிரசாதம், உடனே இதுகுறித்து அரசாணை வெளியிட வேண்டும்' என்று சிலர் குரல் கொடுக்கின்றனர். இன்னும் சிலரோ, இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்' என்கின்றனர். இந்தச் சர்ச்சை மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Doctor
News
Doctor ( (Representational Image) )

`தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 50 சதவிகிதத்தினருக்கு அரசுக் கட்டணத்தையே பெற வேண்டும்' என்று தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பியுள்ள (National Medical Commission) அலுவல் ரீதியான குறிப்பாணை தற்போது பெரும் விவாதமாகியிருக்கிறது. `இது ஏழை எளிய மாணவர்களுக்கான வரப்பிரசாதம், உடனே இதுகுறித்து அரசாணை வெளியிட வேண்டும்' என்று சிலர் குரல் கொடுக்கின்றனர். இன்னும் சிலரோ, இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்' என்கின்றனர். இந்தச் சர்ச்சை மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Doctor (Representational Image)
Doctor (Representational Image)
Photo by National Cancer Institute on Unsplash

மருத்துவக் கட்டண விவகாரத்தில் அப்படி என்னதான் பிரச்னை?

கடந்த 3-ம் தேதியன்று, அனைத்து மாநில / யூனியன் பிரதேசங்களின் மருத்துவக் கல்வித்துறைச் செயலாளர்கள், இயக்குநர்கள், கட்டண ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக இயக்குநர்கள் ஆகியோருக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒரு குறிப்பாணை அனுப்பியுள்ளது. அதில், தேசிய மருத்துவ ஆணைய சட்டம், 2019, பிரிவு10 (1) (i)ன் கீழ் கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களைப் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி வைத்திருக்கிறது.

``மருத்துவக் கல்விக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்கு ஏற்ற வரைவுகளைத் தேசிய மருத்துவ ஆணையத்துக்குத் தயாரித்து வழங்கும்படி இந்திய மருத்துவக் குழுவின் (Medical Council of India) ஆட்சிமன்றக் குழுவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து, 23.11.2019 அன்று இந்திய மருத்துவக் குழு, அதற்கான வல்லுநர் குழு (Expert Committee) ஒன்றை அமைத்தது. (பின்னர், அந்தக் குழு தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்பட்டது.) அந்த வல்லுநர் குழு, எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு வழிகாட்டும் வகையில் 25 வழிமுறைகளைத் தேசிய மருத்துவ ஆணையத்துக்குப் பரிந்துரைத்தது.

Medical Studies
Medical Studies
Photo from Pixabay

அந்தப் பரிந்துரைகளைத் தங்கள் இணையதளப் பக்கத்தில் 25.5.2021 அன்று பதிவேற்றம் செய்து, பொதுக்கருத்துகளைக் கோரியது தேசிய மருத்துவ ஆணையம். பொதுமக்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சங்கங்கள் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து 1,800 கருத்துகளை முன்வைத்தனர். இதையடுத்து, 21.10.2021 அன்று முன்பு இருந்த வல்லுநர் குழுவை மாற்றியமைத்து, புதிய குழுவிடம் 1,800 கருத்துகளும் சமர்ப்பிக்கப்பட்டன. அந்தப் புதிய குழு 1,800 கருத்துகளையும் பரிசீலித்து, தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறும் எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவ மேற்படிப்பு மாணவர்களிடம் கட்டணங்களைப் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, தேசிய மருத்துவ ஆணையத்திடம் வழங்கியது.

29.12.2021 அன்று அதை ஏற்றுக்கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ``இந்தியாவிலிருக்கும் மாநில / யூனியன் பிரதேசங்களிலும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மேற்படிப்புகளுக்கான இடங்களில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 50% மாணவர்களிடம், மாநில / யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தையே பெற வேண்டும்" என்றதுடன் கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதற்கான 25 வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.

ராமதாஸ்
ராமதாஸ்

ராமதாஸ் அறிக்கை!

அந்தக் குறிப்பாணையை சுட்டிக்காட்டி, பா.ம.க நிறுவனவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது. கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்தத் திட்டத்தைத் தமிழகத்திலுள்ள தனியார் கல்லூரிகளில் தமிழக அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணமான ரூ.13,610 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். இதற்கான அரசாணையைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கமும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது.

அரசுக் கட்டணம் என்று எதைக் குறிப்பிடுகின்றனர்?

இதில் என்ன பிரச்னை என்கிறீர்களா? ``அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதே கட்டணத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் 50 சதவிகித மாணவர்களுக்கு வசூலிக்கச் சொல்கிறார்கள் என்ற புரிந்துணர்வில் இப்படியான கருத்துகளைச் சொல்கிறார்கள். ஆனால், அரசுக் கட்டணம் என்று அவர்கள் குறிப்பிடுவது ஒவ்வொரு தனியார் கல்லூரிக்கும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைத்தான்" என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர்கள், ``உதாரணத்துக்குத் தமிழகத்தைப் பொறுத்தளவில் அரசு கல்லூரிகளில் 13,610 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், தனியார் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஏற்றாற்போல் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்தக் கட்டணம் சில லட்சங்களில் இருக்கிறது. இங்கு தனியார் கல்லூரிகளில் மருத்துவ கட்டண நிர்ணயம் என்பது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது. சிறுபான்மையினர் அல்லாத தனியார் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 65 சதவிகித இடங்கள், சிறுபான்மையினர் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 50 சதவிகித இடங்களுக்கு மட்டுமல்லாது மீதமுள்ள மேனேஜ்மென்ட் கோட்டாக்களுக்குமான கட்டணத்தையும் அந்தக் குழுதான் தீர்மானிக்கிறது.

Doctor (Representational Image)
Doctor (Representational Image)
Pixabay

நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களில் மட்டும்தான் அந்தந்த நிர்வாகங்களே நிர்ணயித்துக்கொள்கின்றன. இப்போதைய அறிவிப்பு அமலுக்கு வந்தால் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் சேர்த்து அரசு கட்டணம் நிர்ணயிக்கும். இத்தனை நாள்களாக வரம்பில்லாமல் தங்கள் இஷ்டத்துக்குக் கட்டணம் வசூலித்துக்கொண்டிருந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஒரு வரம்புக்குள் வருவார்கள். அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கும் தற்போது கொடுக்கப்பட்டுள்ள 25 வழிகாட்டுதல்களை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு கல்லூரிக்கும் கட்டணத்தை நிர்ணயிப்பார்கள். இதை அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணம் என்று தவறாகப் புரிந்துகொண்டு சிலர் பேசுகின்றனர்" என்கிறனர்.

இதனால் தமிழகத்துக்கு என்ன சிக்கல்?

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசியபோது, ``அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணம் தனியார் கல்லூரிகளிலும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களிலும் சேரும் மாணவர்களில் 50 சதவிகிதம் பேருக்கும் வசூலிக்கப்படும் என்றால் அதை வரவேற்கலாம். ஆனால், அரசு நிர்ணயிக்கும் கட்டணம் 50 சதவிகிதம் பேருக்கு என்றால் தமிழகத்தைப் பொறுத்தவரை அது ஆபத்துதான். ஏனெனில், தமிழகத்தில் சிறுபான்மையினர் அல்லாத தனியார் கல்லூரிகளில் 65 சதவிகிதம் அரசு இட ஒதுக்கீடு உள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த 65 சதவிகிதம் பேரும் ஏற்கெனவே அரசு நிர்ணயிக்கும் தொகையைத்தான் செலுத்திக்கொண்டிருக்கின்றனர். இப்போது சொல்லப்படுவதுபோல 50 சதவிகிதத்தினருக்குத்தான் அரசு நிர்ணயிக்கும் கட்டணம் என்றால் மீதமுள்ள 15 சதவிகிதத்தினரின் நிலை என்ன? அவர்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பது யார்? இதன்மூலம் மறைமுகமாக வணிகமயத்தை ஊக்கப்படுத்தப் பார்க்கின்றனர். மக்களைக் குழப்பாமல் இதுதொடர்பான விரிவான தகவல்களை அரசு வெளியிட வேண்டும்" என்கிறார்.

அரசுக்கே தெளிவில்லையா?

தேசிய மருத்துவ ஆணையம் என்ன சொல்வது என்ன, அரசு நிர்ணயிக்கும் கட்டணமா அல்லது அரசுக் கல்லூரிகளில் உள்ள அதே கட்டணமா... என்ற குழப்பத்துக்கு விடைகேட்டு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம், நாம் விவரித்ததைத் தெளிவாகக் கேட்டுக்கொண்ட அவர், ``அரசுக் கல்லூரிகளில் உள்ள அதே கட்டணமாக இருக்க வாய்ப்பில்லை. அரசு நிர்ணயிக்கும் கட்டணமாகத்தான் இருக்கும். நான் விசாரிக்கிறேன். நீங்கள் எதற்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டோம், ``பொதுவான அறிவிப்பாகத்தான் வந்திருக்கிறது. இதுகுறித்து கட்டண நிர்ணய குழுவுடன் பரிசீலனை செய்வதுடன் மத்திய அரசிடமும் கலந்தாலோசித்துதான் பதில் சொல்ல முடியும். இதையெல்லாம் தேசிய மருத்துவ ஆணையத்திடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்" என்று முடித்துக்கொண்டார்.