Published:Updated:

பொதுத்தேர்வு ரத்து... மதிப்பெண் கணக்கிடுதலில் ஆபத்து! குழப்பத்தில் அரசு; கொதிக்கும் பெற்றோர்!

தேர்வு எழுதும் மாணவிகள்
News
தேர்வு எழுதும் மாணவிகள்

கொரோனா பேரிடரைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்கிறார்கள் கல்வியாளர்கள்.

Published:Updated:

பொதுத்தேர்வு ரத்து... மதிப்பெண் கணக்கிடுதலில் ஆபத்து! குழப்பத்தில் அரசு; கொதிக்கும் பெற்றோர்!

கொரோனா பேரிடரைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்கிறார்கள் கல்வியாளர்கள்.

தேர்வு எழுதும் மாணவிகள்
News
தேர்வு எழுதும் மாணவிகள்

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு ரத்து அறிவிப்பைத் தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்களா, மதிப்பெண்களை எப்படிக் கணக்கிடப்போகின்றனர், மேற்படிப்புகளுக்கான தகுதி நிர்ணயம் மற்றும் நடப்பு கல்வியாண்டின் வரைமுறைகள் என அடுக்கடுக்கான கேள்விகள் அணிவகுக்கின்றன.

இந்திய அரசியல் வரலாற்றில், ஒட்டுமொத்தமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையே ரத்து செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலை இதுவரை ஏற்பட்டிருக்கவில்லை. எனவே, இந்தக் கல்வியாண்டு விதிவிலக்காக மாறிவிட்டது.

பொதுவாக, மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் கல்வியாண்டாக இருக்கிறது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு. இந்நிலையில், பொதுத்தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாகப் பெற்றோர் - மாணவர்களிடையே எழும் பல்வேறு கேள்விகளுக்கும் அரசு எப்படி விடையளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பரவலாக ஏற்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து கல்வியாளரும் 'பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசியபோது,

''10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையுமே பாஸ் செய்து விடுவதாக அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தனித்தேர்வர்களது நிலை என்னவென்று இப்போதுவரை அரசு அறிவிக்கவில்லை. தேர்வுத் தேதியை அரசு அறிவித்ததால்தான் தனித் தேர்வர்களுமே தேர்வெழுத விண்ணப்பித்திருந்தார்கள். கொரோனா பாதிப்பு என்பது, எல்லோருக்கும் பொதுவானதுதான். எனவே, பள்ளி மாணவர்களுக்கு என்ன முடிவை அரசு அறிவித்ததோ அதே முடிவைத்தான் தனித்தேர்வர்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் சமமான வாய்ப்பாக அமையும்.

அடுத்ததாக, காலாண்டு - அரையாண்டுத் தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்களிலிருந்து 80 சதவிகிதம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று அரசு சொல்லியிருக்கிறது. பல்வேறு காரணங்களால் மாணவர்களில் சிலர் இத்தேர்வுகளை எழுதாமல் இருந்திருப்பார்கள். இன்னும் சில அரசுப் பள்ளிகளில் தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர்கள் இருந்தாலும்கூட புதிய பாடநூல் - பாடத்திட்டம் என்கிறபோது, காலாண்டு - அரையாண்டுத் தேர்வுகளுக்குள் சரிவர பாடங்கள் கற்பிக்கப்பட்டனவா என்றெல்லாம் ஆராய வேண்டியிருக்கிறது. கோவை அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில், காலாண்டு - அரையாண்டுத் தேர்வுகளே நடத்தப்படவில்லை என்று இன்றைக்கு செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த கொரோனா பேரிடரினால்தான், 'அனைவரும் தேர்ச்சி' என்றதொரு முடிவை அரசு அறிவித்திருக்கிறது. இது இதுவரையில் நடைமுறையில் இல்லாதது என்பதால், அரசின் இந்த அறிவிப்பு பின்வரும் காலங்களில் பல்வேறு குழப்பங்களை உண்டாக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பிரச்னைகளெல்லாம் வராமல் தடுக்க வேண்டுமானால், இந்தக் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைவருமே 11-ம் வகுப்பு உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும், 18 வயதுக்குப் பிறகு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் தகுதி பெற்றவர்கள் என்பதை அரசாணையாக வெளியிட்டு தெளிவுபடுத்திவிட வேண்டும். இல்லையென்றால், மதிப்பெண்களின் அடிப்படையில்தான் விண்ணப்பிக்கவே தகுதி பெறுவார்கள் என்ற நிலை பின்னாளில் ஏற்படுமேயானால், அது மாணவர்களின் வாய்ப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்தப் பிரச்னைகளையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு நல்லதொரு தீர்வை அரசு அறிவிக்க வேண்டும்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

அடுத்ததாக, 11-ம் வகுப்பு என்பது குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிற திருப்புமுனைக் கல்வியாண்டாக இருக்கிறது. அதாவது, 11-ம் வகுப்பில் மாணவர்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்களோ... அதுதான் பின்னாளில் அந்த மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையாகவே மாறிப்போகிறது. இந்தச் சூழ்நிலையில், அந்தந்தப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மேல்நிலைக் கல்வி வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அடுத்ததாகப் பள்ளி அமைவிடத்தின் அருகேயுள்ள ஊர்களில் குடியிருக்கும் மாணவர்கள் மற்றும் சமுதாய ரீதியாக ஒடுக்கப்பட்ட நிலையிலுள்ள மாணவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

இதைவிடுத்து, 'மாணவரின் காலாண்டு - அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்தான் இடம் ஒதுக்கப்படும்' என்று மாணவர்களின் விருப்பங்களையும் சமூக நீதியையும் புறந்தள்ளினால் அது நியாயமான நடைமுறையாக இருக்காது.

ஏனெனில், ஒவ்வொரு கல்வியாண்டிலும் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் நோக்கில், கேள்வித்தாள் அடிப்படையில் இறுதியாகப் பாடங்கள் நடத்தப்படும். இது மிகவும் முக்கியமான காலகட்டம். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் சரிவர மதிப்பெண் பெறாத மாணவர்கள்கூட, தேர்வுக்கு முந்தைய கற்பித்தலில் நன்கு கற்றுத்தேர்ந்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், இப்போது பொதுத்தேர்வே நடத்தப்படவில்லை. எனவே, மாணவர்களின் கடந்தகால மதிப்பெண்களைக் கவனத்தில் கொள்ளாது அவர்களின் விருப்பத்துக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். இதுகுறித்தும் அரசு, தெளிவாக விளக்கி அறிவிக்க வேண்டும்'' என்று விரிவான விளக்கம் தந்தார். இந்த கொரோனா காலகட்டத்திலும் சில தனியார் பள்ளிகள் செயல்படுத்திவரும் முறைகேடுகள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துகொண்ட பிரின்ஸ் கஜேந்திரபாபு,

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

''சில தனியார் பள்ளிகள், ஆன்லைன் வழியாக இப்போதே அப்ளிகேஷன்கள் கொடுத்து அட்மிஷன் செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள். இந்த கொரோனா பாதிப்பு எப்போது முடிவடையும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதெல்லாம் இன்னும் முடிவாகவே இல்லை.

அசாதாரணமான இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர் - மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இடைவெளி, கற்றல் - கற்பித்தல் குறைபாடுகள், பள்ளிகளைத் தாமதமாகத் திறக்கவிருப்பதால் பாடத்திட்டங்களைக் குறைக்கலாமா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் ஆராய்வதற்காகவே பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இப்போதுதான் தனது முதற்கட்ட ஆய்வறிக்கையையே சமர்ப்பித்துள்ளது. எனவே, இவ்விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதெல்லாம் அடுத்தடுத்த காலகட்டத்தில்தான் தெரியவரும். ஆனால், இவை எதையுமே கருத்திற்கொள்ளாது, தனியார் பள்ளிகள் முன்னரே வகுப்புகளைத் தொடங்கி நடத்த ஆரம்பித்தால், அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, இவ்விஷயத்திலும் அரசு, உடனடியாகத் தலையிட்டு தனியார் பள்ளிகளின் அட்மிஷன்களைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.

அடுத்ததாக, கொரோனா பாதிப்பால் சம்பளக் குறைப்பு மற்றும் வேலையிழப்பு எனப் பெரும்பான்மையான பெற்றோர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், சில தனியார் பள்ளிகளோ, 'கல்விக் கட்டணத்தை செலுத்த வசதியாக நிதிநிறுவனங்களோடு தொடர்பு ஏற்படுத்தித் தருகிறோம்' என்று பெற்றோருக்குத் தூண்டில் போடுகின்றன. இது இன்னும் கூடுதல் ஆபத்தையே விளைவிக்கும்.

அதாவது, நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கல்விக் கட்டணத்தை செலுத்திவிடுகிற பெற்றோர், பின்னாளில் வருமானமின்றி தவிக்கும்போது நிதிநிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய மாதாந்தர தொகையைக் கட்ட முடியாமல் போகலாம். அப்போது கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழைப் பெற்றோரிடம் கொடுக்காமல் பல்வேறு மன அழுத்தங்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இது குழந்தைகளிடையேயும் கடுமையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள்
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள்

'கல்வி கற்பதற்கு கடனுதவி கொடுக்கக் கூடாது; உதவித் தொகைதான் கொடுக்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன்னிறுத்தி எல்லோரும் போராடிக்கொண்டிருக்கும்போது, தனியார் பள்ளிகளின் இதுபோன்ற செயல்கள் மிகமிகத் தவறானவை'' என்று கொதித்து முடித்தார்.

இதற்கிடையே, மாணவர் - பெற்றோர் தரப்பில் ஒரு பிரிவினர், பொதுத்தேர்வு ரத்து குறித்தான அரசு அறிவிப்புக்கு எதிராகத் தங்களது ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அதாவது, 'அரசு அறிவித்தபடி, உரிய தேதியில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டிருந்தால், தங்களது பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க முடியும். இதன் தொடர்ச்சியாக அவர்களது விருப்பம் சார்ந்த மேற்படிப்பும் சாத்தியமாகியிருக்கும். ஆனால், திடீரென தமிழக அரசு, தன் முடிவிலிருந்து பின்வாங்கியதால், தேர்வுக்காகக் கண் விழித்துப் படித்த தங்கள் பிள்ளைகளின் உழைப்பெல்லாம் வீணாகிவிட்டது' எனப் பொருமுகின்றனர் இவர்கள்.

இதையடுத்து, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் தற்போதைய தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசுவிடம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு, பெற்றோர் - மாணவர்களின் ஆதங்கம் மற்றும் எதிர்காலத்தில் மாணவர்களின் நலன் கருதி அரசு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கருத்து கேட்டோம்.

''உயிர்க்கொல்லி நோய்த் தொற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும்பான்மையான பெற்றோர்களின் கோரிக்கைகளைத்தான் நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இன்றைக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதுதான் சரி. இதன்படி, இந்தக் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றுவிட்டனர்.

இனி, இந்த மாணவர்கள் மேற்படிப்புகளுக்குச் செல்லும்போது மதிப்பெண் விகிதாச்சாரம் தேவைப்படுகிறது. கடந்த காலாண்டு - அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் உள்ளிட்ட புள்ளிவிவர தகவல்கள் முதன்மைக் கல்வி அலுவரிடம் இருக்கும். அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மாணவரின் தர நிர்ணயத்தையும் அரசால் எளிதாகக் கணக்கிட முடியும்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

இதில், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் விருப்பப் பாடப் பிரிவுகளில் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய முன்னுரிமைகள் ஆகியவற்றையெல்லாம் ஆராய்ந்து நடைமுறைப்படுத்திட அரசுதான் ஒரு புதிய வழிமுறையை ஏற்படுத்திட வேண்டும். முந்தைய தேர்வுகளிலிருந்தும், வருகைப் பதிவேட்டின் கணக்கிலிருந்தும் மாணவர்களின் மதிப்பெண்களைக் கணக்கிடவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, வேறு ஏதேனும் வழிமுறைகள் இருக்கிறதா என்பதையும்கூட அரசு ஆலோசிக்கலாம்.

ஏற்கெனவே, பஞ்சாப், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் இதுபோல் 'ஆல் பாஸ்' முடிவு எடுக்கப்பட்டிருப்பதால், அடுத்தகட்டமாக மாணவர்களின் மதிப்பெண் விஷயத்தில் இம்மாநிலங்கள் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்பதைக் கூர்ந்து கவனித்து, நாமும் அதில் ஏற்புடையவற்றைத் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தலாம்.

ஒவ்வொரு முறையும் அவசரம் அவசரமாகத் தவறான முடிவெடுத்து அறிவித்துவிட்டு, பின்னர் பின்வாங்குவதென்பது தமிழக பள்ளிக் கல்வித்துறையின் வழக்கமாகவே மாறிவிட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒன்பதரை லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இந்த முறையாவது இதையெல்லாம் கருத்திற்கொண்டு நிதானமாக நல்லதொரு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை இவ்விஷயத்தில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலோடு பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆணையர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். அதிகாரிகள் இருவரும் நமது அழைப்பை ஏற்கவில்லை. நாம் அனுப்பியிருந்த குறுஞ்செய்திக்குப் பதிலும் கொடுக்கவில்லை. நமது அழைப்பை ஏற்ற அமைச்சரது உதவியாளர், ''அமைச்சர் அலுவல் விஷயமாக வெளியில் சென்றிருக்கிறார். வந்ததும் தங்களிடம் பேசச் சொல்கிறேன்'' என்றார். ஆனால், நமக்கு அழைப்பு ஏதும் வராததையடுத்து, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான வைகைச் செல்வனிடம் பேசினோம்...

''அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என அனைத்துப் பள்ளிகளிலுமே காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் அந்தந்தக் காலகட்டத்துக்குள் முழுமையாக நடைபெற்று முடிந்திருக்கின்றன. எனவே, அதில் எந்தக் குழப்பமும் இல்லை. இந்தத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் மாணவரின் வருகைப் பதிவேட்டு கணக்கையும் அடிப்படையாகக் கொண்டுதான் பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களைக் கணக்கிடவிருக்கிறோம். இது தவிர மாணவர்களின் மதிப்பெண்ணைத் தீர்மானிக்க வேறு என்ன அளவுகோல்கள் இருக்கின்றன?

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்

அடுத்ததாக, தனித்தேர்வர்களின் கோரிக்கை என்பது தற்போது முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரது பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் நல்லதொரு அறிவிப்பு வெளியாகும்.

பொதுத் தேர்வு ரத்து என்ற இந்த நடைமுறையை மற்ற மாநிலங்களும் நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. அது அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலைகளைப் பொறுத்து எடுக்கப்பட்ட முடிவுகள். நமது மாநில நிலையைக் கருத்திற்கொண்டு நாமும் இப்போது தேர்வு ரத்து முடிவை எடுத்திருக்கிறோம். அடுத்தகட்டமாக இதில் என்னென்ன கோரிக்கைகள் வருகின்றன, அதை எப்படியெல்லாம் பாதிப்பில்லாமல் சரிசெய்வது என்பதையெல்லாம் நமது மாநில சூழ்நிலைகளுக்கு ஏற்பதான் நம் அரசு முடிவெடுக்கும். எனவே, இதில் மற்ற மாநிலங்களைப் பின்பற்ற வேண்டிய தேவையிருக்காது.

தனியார் பள்ளிகளின் நடவடிக்கைகளை அரசு, தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. எந்தவொரு பள்ளியிலும் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை; ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. பேரிடர் காலத்தில், அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறும் பள்ளிகளின் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டே வருகிறது'' என்றார்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில், பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்ணைக் கணக்கிடும்போது, வேறு பல விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சில பள்ளிகளில் இந்தத் தேர்வுகளே நடத்தப்படவில்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வில் தங்களுடைய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காகவே காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மிகவும் கடுமையான முறையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, குறைவான மதிப்பெண்களே வழங்கப்பட்டிருக்கிறது.

இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும் இப்போது இதனால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையிலும், அதேநேரத்தில் அந்தந்த மாணவரின் அறிவுத்திறன் மற்றும் முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் மதிப்பெண்களை வழங்க வேண்டுமென்பதே பெற்றோர் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பு.