பிரீமியம் ஸ்டோரி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதன் மூலம் ராகுல் காந்தி, எதைச் சாதிக்க விரும்புகிறார்? ‘காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்?’ என்பது தொடர்பான டெல்லி அரசியல் வட்டார யூகங்கள் பலவும் இந்தக் கேள்வியுடன் தொடர்பு உடையன. மக்கள் செல்வாக்கு இல்லாத யாரோ ஒரு சீனியரைத் தலைவர் பதவியில் உட்கார வைத்துவிட்டு, பின்னணியில் இருந்து ராகுல் இயக்குவாரா, அல்லது ‘வசீகரமான ஒரு தலைவர் வரட்டும்’ என வழிவிட்டு ஒதுங்கிக்கொள்வாரா? ராகுல் காந்தியின் நெருக்கமான வட்டாரத்தில் இருப்பவர்களால்கூட இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியவில்லை.

மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி வகித்த பத்து ஆண்டுகளும் அதிகார நிழலின் மறைவில் இருந்தபடியே ராகுல் காந்தி செயல்பட்டார். சோனியா, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நேரத்திலும், ராகுல் காந்தி திரைமறைவில் இருந்தபடியே செயலாற்றினார். அவரின் இயல்பே அதுவாகத்தான் இருந்தது. அவர் முழு நேர அரசியல்வாதியாகத் தன்னை உணர்ந்த தில்லை. பல நாள்கள் பரபரப்பாக இயங்குவார். பிறகு திடீரென காணாமல் போய்விடுவார். சோனியாவுக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்னை கள்தான், இப்படி இருந்த ராகுலை காங்கிரஸின் தலைமைப் பதவிக்கு வரவழைத்தது. முதல்முறை யாக அவர் தலைமையில் நாடாளுமன்றத் தேர் தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு, மாபெரும் தோல்வியைப் பரிசளித்தார் பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்து கூடிய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில், தான் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ராகுல்.

ஏதோ உணர்ச்சி வேகத்தில் ராகுல் பேசுவ தாகவே சீனியர் தலைவர்கள் பலரும் நினைத் தார்கள். ‘நாங்கள் ராகுலை சமாதானம் செய் வோம்’ என்றார்கள். இடையில் ஒருமுறை தன் ராஜினாமா பற்றி மீண்டும் உறுதியாகப் பேசி னார் ராகுல். ஆனால், சத்தீஸ்கர் மாநிலத் தலை வர் மாற்ற அறிவிப்பு அவர் பெயரில் வெளிவந்தது. ஜூலை 1-ம் தேதி காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து தேர்தல் பற்றி ஆலோ சனை நடத்தினார். ‘எல்லாம் சுமுகமாக இருப்ப தாக’ நம்பிய சீனியர்களுக்குப் பேரிடியாக ஜூலை 3-ம் தேதி ராகுலின் ராஜினாமா அறிக்கை வெளியானது. தன் ட்விட்டர் ஸ்டேட் டஸில் ‘காங்கிரஸ் தலைவர்’ என இருந்ததையும் உடனடியாக மாற்றிவிட்டார் ராகுல்.

ராஜினாமா இளவரசர் ராகுல்!

இந்த இடைப்பட்ட காலத்துக்குள் வட இந் திய மீடியா பலவும், காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரையே எழுதிவிட்டன. ‘காங்கிரஸ் கட்சி யின் இடத்தைப் பிடிக்கப் போகும் கட்சி எது?’ என்று கருத்துக்கணிப்புகளையும் நடத்துகின்றன. இதற்கு முன்பு நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மரணங்களின்போதும் இப்படித்தான் பலர் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதிப் பார்த்தார்கள்.

ஆனால், காங்கிரஸ் ஒவ்வொரு தோல்வி யிலிருந்தும் மீள்வதற்கு அதன் எதிர்க்கட்சிகளே உதவியிருக்கின்றன. இந்திரா காலத்தில், ஜனதா கட்சியின் குழப்பங்களும் ராஜீவ் காலத்தில் ஜனதா தளத்தில் நடந்த குழாயடிச் சண்டைகளும் காங்கிரஸ் மீண்டுவர உதவின. சோனியா, ராகுல் காலத்தில் நிலைமை அப்படி இல்லை. காஷ்மீர் முதல் கர்நாடகம் வரை, குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்திய அளவில் வேரூன்றியிருக்கும் ஒரு தேசியக் கட்சியை முதல்முறையாகக் களத்தில் சந்தித்துத் தோற்றிருக்கிறது காங்கிரஸ். இதுபோன்ற சூழலை காங்கிரஸ் எப்போதும் எதிர்கொண்டதில்லை.

இந்தியாவில் 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரு கட்சிக்கு இம்முறை 52 எம்.பி-க்கள் மட்டுமே கிடைத்திருக்கிறார்கள். கடந்த தேர்தல் அளவுக்கு நிலைமை மோசமில்லை. என்றாலும், பல பெரிய மாநிலங்களில் அதற்கு ஒரு வெற்றிகூட கிடைக்கவில்லை. இருந்த போதிலும் இந்திய அளவில் பி.ஜே.பி-யை எதிர்கொள்ள காங்கிரஸைத் தவிர வேறு சக்தி இல்லை என்பதுதான் அந்தக் கட்சியைத் தவிர்க்க முடியாததாக ஆக்கியுள்ளது. அதுமட்டுமே இந்தத் தோல்விப் பாதையிலிருந்து மீள்வதற்குப் போதுமானதாக இருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘பதவியில் இருப்போர் அந்தப் பதவியைத் துறக்க விரும்புவதில்லை என்பது இந்தியாவில் ஒரு வழக்கமாக இருக்கிறது. மற்றவர்கள்மீது பழியைச் சுமத்திவிட்டு நான் பதவியில் நீடிப்பது அநீதி. இந்தத் தோல்விக்குத் தலைவர் என்ற முறையில் நான் பொறுப்பேற்க வேண்டும். கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு இது முக்கியம். அதனால்தான் ராஜினாமா செய்கிறேன். என்னைப் போல ஏராளமான வர்கள் இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும். கட்சியை மீண்டும் கட்டமைக்க சில கடினமான முடிவுகள் எடுக்க வேண்டியது அவசி யம்’ என்று தன் கடிதத்தில் ராகுல் காந்தி குறிப் பிட்டிருக்கிறார். எனவே, ‘தன் பேச்சைக் கேட்கிற, ஒரு செல்வாக்கில்லாத தலைவரை ராகுல் நியமிப் பார். அவரை வைத்தே எல்லா மாநிலங்களிலும் நிர்வாகிகளை மாற்றுவார். அதன்மூலம் கட்சி புத்துணர்வு பெறும்’ என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள். இது நடக்குமா?

கூட்டுக் குடும்பத்திலிருந்து பிள்ளைகள் வெளி யேறிய பிறகு தனித்து விடப்பட்டிருக்கும் முதிய தம்பதி போன்ற நிலையில்தான் இப்போது காங்கிரஸ் இருக்கிறது. ஒரு காலத்தில் உயர் சாதி யினர், பட்டியல் சமூகத்தினர் மற்றும் முஸ்லிம் களின் ஒரே நம்பிக்கையாக காங்கிரஸ் இருந்தது. இன்று உயர் சாதியினர் பி.ஜே.பி பக்கம் போய் விட்டார்கள். பட்டியல் சமூகத்தினர் மற்றும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியைச் சிறு கட்சிகள் அபகரித்துக்கொண்டன. மொத்தமாக காங்கிரஸின் வாக்கு வங்கி திவாலாகிவிட்டது.

அமைப்பு ரீதியாகவும் அது பலமாக இல்லை. பூத் கமிட்டி வரை நிர்வாகிகளை நியமிப்பது அமித் ஷாவின் அரசியலாக இருக்கிறது. காங்கிரஸில் மாவட்டத் தலைவர்களுக்குக் கீழே கட்சி அமைப்பு உதிர்ந்து போய் கிடக்கிறது. இதனால் பல மாநிலங்களில் காங்கிரஸ் காரர்களே நம்பிக்கை இழந்து வேறு கட்சிகளுக்குத் தாவுகிறார்கள். தெலங்கானா வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியே உடைந்து ஆளுங்கட்சியுடன் சேர்ந்துவிட்டது. மேற்கு வங்காளத்தில் தினம் ஒருவராக பி.ஜே.பி-க்குப் போகிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் இப்படிப் போன ரீட்டா பகுகுணா ஜோஷி போன்ற பலர் அமைச்சர்களாகவே ஆகிவிட்டார்கள்.

சமீப ஆண்டுகளில் காங்கிரஸ் பெற்ற சில வெற்றிகள்கூட, மாற்றுக்கட்சிகள்மீது இருந்த அதிருப்தியால் கிடைத்தவை என்றே கருத வேண்டியுள்ளது. நேரடி அரசியல் அனுபவம் இல்லாத முன்னாள் அதிகாரிகள் பட்டாளத்தை வைத்துக்கொண்டு தேர்தல் வியூகங்களை வகுத்தார் ராகுல் காந்தி. அதிகாரத் தரகர்களாகவே இருந்து பழகிய மக்கள் செல்வாக்கில்லாத சில தலைவர்கள் அவரை நிர்பந்தம்செய்து, சில கூட்டணிகளை உருவாகவிடாமல் தடுத்தார்கள். யார் யாரையோ வேட்பாளர் ஆக்கினார்கள். பிரசாரக் களத்திலும் அவருக்கு உதவி செய்ய யாருமில்லை. ‘ஒரு கட்டத்தில் நான் தனித்துவிடப் பட்டேன்’ என ராகுலே தன் கடிதத்தில் பொங்கியதன் அர்த்தம் இதுதான்.

கடந்த 20 ஆண்டுகளில் அரசியல் சூழ்நிலை எவ்வளவோ மாறிவிட்டது. முன்பெல்லாம் தேர்தல் என்பது ஒரு மாத காலத்து வேலை. அது முடிந்ததும் அரசியல்வாதிகள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மோடி ஐந்து ஆண்டுகளிலும் பிரசார மனநிலையிலேயே இருக்கிறார். ஜெயித்தபிறகும் அவர் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் பேசுவதுபோலவே பேசு கிறார். ஜெயித்தவரே இப்படிப் பேசுகிறார் என்றால், தோற்றவர்கள் எப்படிப் பேச வேண்டும்! பகுதிநேர அரசியல்வாதியாக இருந்துகொண்டு மோடியையும் அமித் ஷாவையும் ராகுல் ஒருபோதும் எதிர்கொள்ள முடியாது.

‘நான் காங்கிரஸ்காரனாகவே பிறந்தேன். என் உயிரோட்டம் இந்தக் கட்சிதான். தொடர்ந்து பி.ஜே.பி-யை எதிர்த்துப் போராடுவேன். என்னுடைய போராட்டம் ஒருபோதும் வெறும் அரசியல் அதிகாரத்துக்கானது அல்ல’ என்று தன் கடிதத்தில் கூறுகிறார் ராகுல். காங்கிரஸ் கட்சியை இந்தக் குடும்பத்திலிருந்து தனித்துப் பார்க்க முடியாது. தன் ராஜினாமா மூலம், மக்கள் செல்வாக்கில்லாத பழைய முகங்களை ஓரங்கட்டி விட்டு கட்சியை மறுகட்டமைப்பு செய்ய ராகுல் நினைக்கிறார் என்றால், இந்த ராஜினாமா காங்கிரஸ் கட்சிக்கு நல்லது. இல்லையென்றால், கட்சியில் எஞ்சியிருக்கும் சிலரையும் ஓட வைத்துவிடும்.

சில இளவரசர்களுக்குக் கடைசிவரை மன்ன ராக முடிசூட்டிக்கொள்ள வாய்க்காமலேயே போய்விடுவதுண்டு. காங்கிரஸின் இளவரசருக்கு, தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வாய்ப்பைக் காலம் மீண்டும் ஒருமுறை கொடுத்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு