உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர், பங்குரி பதக். இவர் பா.ஜ.க-வின் எம்.பியும், நடிகருமான ரவி கிஷன் மீது ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகரும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க எம்பியுமான ரவி கிஷன், இந்தி, தெலுங்கு, மற்றும் போஜ்புரி படங்களில் நடித்துள்ளார். அவர் மீது, பங்குரி பதக் நொய்டா போலீஸாரிடம் செய்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகாரில், ``நொய்டாவில் நடந்த வாக்குப் பதிவுக்கு அடுத்த நாள், எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகளில் இருந்து ஆபாசமான கருத்துகளும், மார்ஃபிங் செய்யப்பட்ட எனது புகைப்படங்களும் வெளியாயின. எனக்கு எதிராக ஆன்லைனில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அதிகரித்ததால், அந்தக் கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுத்தேன். அவற்றுள் ஒன்று, பா.ஜ.க எம்.பி ரவி கிஷன் பெயரில் உள்ள கணக்கு. அதிலிருந்து மார்ஃபிங் செய்யப்பட்ட எனது ஆபாசப் படங்கள் வெளியிடப்பட்டன. மேலும், அந்தப் பதிவை நீக்க வேண்டுமானால் ₹1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டப்பட்டேன்.
ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்களை இதுபோல ஆன்லைன் தாக்குதலுக்கு உள்ளாக்க, பா.ஐ.க போலிக் கணக்குகளை உருவாக்கி ஓர் இயக்கமாகவே செயல்படுகிறது. எனக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பகிரப்பட்ட ஆபாசப் பதிவுகள், புகைப்படங்களை நீக்க வேண்டும், இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு காவல்துறை துணை ஆணையர் விருந்தா சுக்லா இது குறித்து கூறுகையில், ``இதுகுறித்து சைபர் செல் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்’' என்றார்.
- வைஷ்ணவி பாலு