“ஸ்டாலின் அணி திரட்டினால் அதை நான் வரவேற்கிறேன்!” - பச்சைக்கொடி காட்டுகிறார் ப.சிதம்பரம்

எந்தக் கட்சியில்தான் உட்கட்சிப் பிரச்னைகள் இல்லை? கடல் போன்ற காங்கிரஸ் கட்சியில் ஆங்காங்கே சில கொந்தளிப்புகள் இருக்கத்தான் செய்யும்
காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழாவில், தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றும்போதே அது அறுந்து அவரது கையில் விழுந்திருக்கிறது. `இந்தியாவின் பாரம்பர்யமான இயக்கம்’ என்று சொல்லப்படும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிரந்தரத் தலைவரை நியமிக்க முடியவில்லை. இப்படி கட்சிக்கு நிரந்தரத் தலைவர் கோரிக்கையில் ஆரம்பித்து தேர்தல் கூட்டணி, மேக்கே தாட்டூ அணை விவகார அரசியல், எழுவர் விடுதலை என காங்கிரஸ் கட்சியிடம் கேட்பதற்குக் கேள்விகள் நிறையவே இருக்கின்றன. இவற்றையெல்லாம் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்துக் கேட்டோம்...
“மேக்கேதாட்டூவில் அணையைக் கட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சி நடைப்பயணம் செல்லவிருக்கிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“ஒரு தேசியக் கட்சி என்பது பல மாநில அமைப்புகளையும் உள்ளடக்கியது. காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற இதே பிரச்னைதான் பா.ஜ.க-வுக்கும் இருக்கிறது; கடந்த காலத்தில் பரவலாக செல்வாக்கு பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இருந்தது. எனவே, இது போன்ற விஷயங்களை மாநில அரசுகள்தான் பேசித் தீர்க்க முடியுமே தவிர, தமிழ்நாடு காங்கிரஸ் செய்வது தவறு அல்லது கர்நாடக காங்கிரஸ் செய்வது தவறு என்று சொல்லிவிட முடியாது.’’

“அப்படியென்றால், தீர்க்கப்படாமல் இருக்கும் காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற தமிழக நீராதாரப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?’’
“இவற்றுக்கு நிரந்தரத் தீர்வெல்லாம் கிடையாது. எல்லா மாநிலங்களிலும் இது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. தேசியக் கட்சி களுக்கும் இதில் சங்கடங்கள் இருக்கின்றன. இந்தச் சங்கடத்தைப் பேசிப் பேசித்தான் தீர்க்க வேண்டும். அரசியலைப் பொறுத்தவரை, மத்திய ஆட்சிப் பொறுப்பில் எந்தக் கட்சி அமர்ந்திருக்கிறதோ அவர்கள்தான் சம்பந்தப்பட்ட மாநிலங்களை அழைத்து நடுநிலையோடு பேச வேண்டும்.’’
“எழுவர் விடுதலை விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?’’
“இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கிறதோ, அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று எங்களது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்து விட்டோம்.’’
“ஆனால், ‘ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கக் கூடாது; தூக்கு தண்டனை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் போராட்டம் நடத்தியுள்ளனரே?’’
“ஒவ்வொரு காங்கிரஸ் காரரின் நிலைப்பாட்டுக்கும் நான் கருத்து சொல்ல முடியாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்பதுதான் எங்கள் கருத்து. சோனியா காந்தி குடும்பத்தினரே, ‘இந்தக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டோம்’ என்று சொல்லிவிட்டார்கள். இதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடும்கூட.’’
“ `எழுவர் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல’ என உச்ச நீதிமன்றமே கண்டிக்கிறது. ஆனாலும், இதுவரை முடிவெடுக்கப்பட வில்லையே?”
“இது அவரது செயலிழந்த தன்மையைத்தான் காட்டுகிறது. ஆளுநர் என்பவர் முடிவெடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்பட்ட அந்த முடிவு, சரியா, தவறா என்று சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்று கருத்து கேட்கலாம்.’’
“2022-ல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களின் தேர்தலை எதிர்கொள்ள உங்கள் கட்சி எந்த அளவுக்குத் தயார் நிலையில் உள்ளது?’’
“பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தயார்நிலையில்தான் இருக்கிறோம். மணிப்பூரில், ஏறத்தாழ தயார்நிலைக்கு வந்துவிட்டோம். உத்தரப்பிரதேசம் என்பது எங்களுக்கு ஏறுமலைதான். ஆனாலும்கூட உ.பி-யிலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் கமிட்டி அமைத்து காங்கிரஸ் கட்சி செயல்படத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் முடிவுகளைப் பற்றியெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது.’’
“பஞ்சாப்பில் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் அமரீந்தர் சிங், உத்தரகாண்ட்டில் அதிருப்தி தெரிவித்துவரும் ஹரிஷ் ராவத் என காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறதுதானே?’’
“அப்படியென்று நீங்கள் நினைக்கிறீர்கள்! பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் பெருமளவு தயார் நிலையில் இருக்கிறது. குறிப்பாக கோவா, உத்தரகாண்ட்டில் பா.ஜ.க-வைவிடவும் காங்கிரஸ்தான் வலுவாக இருக்கிறது.’’
“ஆனால், பஞ்சாப்பில் காங்கிரஸ் வாக்குகளை அமரீந்தர் சிங் பிரிப்பார்தானே?”
“தப்பு. அவருக்கு ஏதாவது செல்வாக்கு எஞ்சியிருந்தால் ஆம் ஆத்மி, அகாலிதளம் என எல்லாக் கட்சிகளின் வாக்கு களையும்தான் பிரிப்பார்.’’
“காங்கிரஸ் கட்சியிலுள்ள உட்கட்சிப் பிரச்னைகளே அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன என்பது உண்மைதானே?’’
“எந்தக் கட்சியில்தான் உட்கட்சிப் பிரச்னைகள் இல்லை? கடல் போன்ற காங்கிரஸ் கட்சியில் ஆங்காங்கே சில கொந்தளிப்புகள் இருக்கத்தான் செய்யும். இந்த உட்கட்சிப் பிரச்னைகளையெல்லாம் தாண்டி, நாங்கள் மக்களைச் சந்தித்துவருகிறோம். மக்கள் என்ன தீர்ப்பளிக்கப்போகிறார்கள் என்பதுதான் முக்கியம். தவிர, உட்கட்சிப் பிரச்னைகளைப் பார்த்து மக்கள் யாரும் வாக்களிக்கப்போவதில்லை!’’
“ஆனால், இன்னும் நிரந்தரத் தலைவர் நியமிக்கப்படாததே உங்கள் கட்சிக்குப் பின்னடைவுதானே?’’
“காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில், இப்போது முழுநேரத் தலைவர் இருக்கிறார். பகுதி நேரத் தலைவர் என்றிருந்தால்தான் அது கட்சிக்குப் பின்னடைவு. எனவே, ‘நிரந்தரத் தலைவர்’ என்று பிரச்னையைத் திசை திருப்பாதீர்கள். நிரந்தரம், தற்காலிகம் என்றெல்லாம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படைச் சட்டத்தில் கிடையாது.’’
“ஆனால், ‘கட்சிக்கு நிரந்தரத் தலைவர் வேண்டும்’ என்பதை மையமாக வைத்துத்தானே கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதி பெரும் சர்ச்சையானது?’’
“கட்சியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தார்கள். ஆனால், கொரோனா தொற்று காரணமாக அந்த நேரத்தில், தேர்தலை நடத்த முடியவில்லை. அதன் பிறகு நடைபெற்ற காரிய கமிட்டியில், தேர்தல் நடத்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. கடிதம் எழுதியிருந்த நபர்களும்கூட இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, ‘ஆமாம்... இந்த நேரத்தில் தேர்தல் நடத்த முடியாது; தள்ளிவைக்கலாம்’ என்ற தீர்மானத்துக்கு உடன்பட்டார்கள். இப்போது தேர்தல் நடத்துகிற தேதியும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.’’

“ `கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் ப.சிதம்பரமும் ஒருவர்’ என்றெல்லாம் செய்திகள் வெளியாகினவே?’’
“நான் எந்தக் கடிதமும் எழுதவில்லை. அப்படி நான் கடிதம் எழுதியதாக எந்தச் செய்தியும் வெளியாகவில்லை.’’
“2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை ஸ்டாலின் அமைக்க வேண்டும் என்று எழுந்திருக்கும் கோரிக்கை பற்றி..?
“பா.ஜ.க-வுடன் முரண்படும் கட்சிகள் அனைத்தையும் அணி திரட்டும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அதை நான் வரவேற்கிறேன். மு.க.ஸ்டாலின் அப்படியொரு முயற்சியைச் செய்வாரா, மாட்டாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அப்படி அவர் முயற்சி எடுத்தால் அதை நான் வரவேற்கிறேன். ஏனெனில் 2024 தேர்தலில், பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.’’
“கார்த்தி சிதம்பரம் தொடர்ச்சியாக, ‘தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு என்னைத் தேர்ந்தெடுத்தால் சிறப்பாகப் பணியாற்றுவேன்’ என்று சொல்லிவருகிறாரே?’’
“அது பற்றி என்னிடம் கருத்துகள் கிடையாது.’’
“இலங்கை இறுதிப்போரின்போது, ‘பிரபாகரன் குடும்பத்தினர் கொன்றொழிக்கப்பட வேண்டும்’ என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை விரும்பியதாக தமிழகத்தில் சிலர் பிரசாரம் செய்கிறார்களே?”
“பொய் பிரசாரம். அதைப் போன்று ஒரு செய்தியோ, கருத்தோ கிடையாது.’’
“மத்திய பா.ஜ.க அரசின் பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்துவரும் நீங்களே, பா.ஜ.க-வில் பாராட்டக்கூடிய ஓர் அம்சம் என்று எதைச் சொல்வீர்கள்?’’
“பா.ஜ.க அரசு எந்தவொரு நல்ல கொள்கையை அமல்படுத்தினாலும் அதை நான் வரவேற்பேன். ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தொடங்கி ஜி.எஸ்.டி வரை அவர்கள் கொண்டுவருகிற அனைத்துமே கோளாறான சட்டங்கள்; தவறான முடிவுகள். இவை அனைத்துமே பொருளா தாரத்துக்கு மிகப்பெரிய கேட்டை விளைவிக்கும். அதேசமயம், காங்கிரஸ் அரசு தொடங்கிய 100 நாள் வேலைத் திட்டத்தை, பா.ஜ.க அரசும் தொடர்வது நல்ல விஷயம். எங்களது ‘உணவுப் பாதுகாப்பு சட்டத்தை’ பா.ஜ.க அரசும் அமல்படுத்திவருவது வரவேற்கத்தக்கது.’’
“அதேசமயம், நீட் தேர்வு ஆரம்பித்து மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவருகிற திட்டங்கள் பலவும், ‘கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டவை’ என்று சொல்லித்தானே அறிமுகப்படுத்தப் படுகின்றன?’’
“தப்பு... நீட் தேர்வைக் காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை. அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஐந்து நீதிபதிகள்கொண்ட அமர்வில்தான், ‘நீட் என்பது பொதுத்தேர்வாக வர வேண்டும்’ என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்.’’