அலசல்
அரசியல்
Published:Updated:

ராகுல் நடைப்பயண எழுச்சியை பா.ஜ.க-வை வீழ்த்தப் பயன்படுத்துவோம்!

- பீட்டர் அல்போன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
- பீட்டர் அல்போன்ஸ்

- பீட்டர் அல்போன்ஸ் நம்பிக்கை

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம், கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா நோக்கிச் சென்றிருக்கிறது. கூடவே, பல்வேறு சர்ச்சைகளும் அவருடன் பயணித்துக்கொண்டிருக்கின்றன. அவை குறித்தும், கட்சி நிலவரங்கள் குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்…

``அரசியல் பரப்புரை வடிவங்கள் எவ்வளவோ மாறிவிட்டன. பழைய நடைமுறையான நடைப்பயணம் இன்றைக்குக் கைகொடுக்கும் என நினைக்கிறீர்களா?”

“அரசியல் பரப்புரை என்பது பொதுமக்களோடு தொடர்பின்றி மேம்போக்காக மாறிவிட்டது. அரசியல் தலைவர்கள் நேரடியாகப் பொது மக்களைச் சென்று சந்திப்பது குறைந்துவிட்டது. அதைப் போக்கும்விதமாகவே ராகுல் காந்தி இந்த நடைப்பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறார். இது பிரதமர் மோடியின் ‘நான் மட்டுமே பேசுவேன். எல்லோரும் வேடிக்கை பார்க்க வேண்டும்’ என்கிற அரசியல் நடைமுறைக்கு நேரெதிரானது. பிரச்னைகளின் வேர்களைத் தேடிச் சென்று மக்களை அரசியலில் நேரடியாகப் பங்கேற்கச் செய்ய எடுத்திருக்கும் முயற்சி. இதைத்தான் காந்தி செய்தார். அதையே ராகுலும் செய்கிறார்.”

“ஆனால், `இது மக்களை ஏமாற்றும் நாடகம்’ என்கிறாரே அமித் ஷா?”

“எது நாடகம், எது உண்மை என்பதை மக்கள் தான் முடிவுசெய்ய வேண்டும். ராட்சசத்தனமாகச் செயல்பட்டுவரும் பா.ஜ.க அரசை அகற்ற முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டார்கள். வழக்குகளுக்கும், உயிருக்கும் பயந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரும் பா.ஜ.க எதிர்ப்பைக் கைவிட்டு அமைதியாகிவிட்டார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு இருக்கும் அச்சம், தலித் மக்களுக்கு இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வு, பெண்களுக்கு இருக்கும் நெருக்கடிகளை மக்கள் ராகுலிடம் வந்து சொல்கிறார்கள். இப்படி மக்கள் எழுச்சி ஏற்படுவதை பா.ஜ.க-வினர் கண்கூடாகப் பார்க்கிறார்கள். அந்த அச்சத்தில்தான் இந்த மாதிரியான விமர்சனங்களை வைக்கிறார்.”

ராகுல் நடைப்பயண எழுச்சியை பா.ஜ.க-வை வீழ்த்தப் பயன்படுத்துவோம்!

“அப்படி யாரும் தாமாக வந்து ராகுலைப் பார்க்கவில்லையே... கட்சிக்காரர்களால் அழைத்து வரப்பட்டுத்தானே பார்க்க வைக்கப்படுகிறார்கள்?”

“பா.ஜ.க-வினர்தான் அப்படியான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். மக்கள்தான் அவர்களாகவே ராகுலைச் சந்தித்து தங்கள் பிரச்னைகளைச் சொல்ல வேண்டும் என நேரம் கேட்கிறார்கள். அதை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். என்னிடமும் ராகுலைச் சந்திக்க சிலர் நேரம் கேட்டார்கள். ஆனால், அவர்களுக்கு நேரம் கொடுக்க முடியவில்லை.”

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை முன்னோட்டம்தானே இந்தப் பயணம்?”

“நிச்சயம் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. ‘ஆட்சியைப் பிடிப்பதோ, அதிகாரத்தைப் பிடிப்பதோ நோக்கமில்லை’ என ராகுலும் தெளிவாகச் சொல்லிவிட்ட பிறகு, இந்தக் கேள்வி தேவையற்றது. கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டில் அனைத்து விஷயங்களிலும், துறைகளிலும் நெருக்கடியைப் பார்க்க முடிகிறது. நாடாளுமன்றத்தில் பேச முடியவில்லை. நீதிமன்றங்கள் எடுக்கும் நிலைப்பாட்டைப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. மக்கள் எங்கே செல்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் போக்கத்தான் இந்த நடைப்பயணம்.”

“ஆட்சி அதிகாரம் வேண்டாம் என்றால், மக்களுக்கு எப்படி நீங்கள் நினைப்பதைச் செய்ய முடியும்?”

“இப்போதைக்கு மக்கள் இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டுக் கொண்டுவருவதுதான் முதல் நோக்கம் என்கிறோம். எதிர்காலத்தில் இந்த நடைப்பயண எழுச்சியை பா.ஜ.க-வை வீழ்த்தவும் பயன்படுத்துவோம்.”

“ ‘சந்திக்கும் மக்கள், தங்கும் இடம் என அனைத்திலும் இந்து மதத்தை ராகுல் தவிர்க்கிறார்’ என்கிற குற்றச்சாட்டு எழுகிறதே?”

“இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மதத் தலைவர்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லாத் தரப்பினரையும் ராகுல் சந்திக்கிறார், உரையாடுகிறார். அரசியலை மக்களின் அன்றாட யதார்த்த வாழ்க்கைப் பிரச்னைகளின் வழியே சென்று வழிநடத்த நினைப்பதில்லை பா.ஜ.க. மதம் சார்ந்த உரையாடல்கள் மட்டும்தான் அவர்களின் அரசியலில் பிரதானமாக நிறைந்திருக்கிறது. இந்தியாவில் நடந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆட்சியில் இந்து மதத்துக்கு வராத இடையூறு, மோடியின் ஆட்சியில் வந்திருக்கிறது என்று சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது.”

“காங்கிரஸும் தி.மு.க-வும் என்ன அரசியலை முன்னெடுக்க வேண்டும் என பா.ஜ.க தீர்மானிப்பதுபோல இருக்கிறதே?”

“அவர்கள் நினைப்பதைத்தான் பேச வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்கள். அதற்குள் ராகுல் சிக்க மாட்டார். அதுமட்டுமல்ல, மக்களையும் பா.ஜ.க-வினரின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றி, எது தேவையோ அதைப் பற்றிப் பேசவைக்கிறார். இந்த நடைப்பயணம் முடியும்போது, இந்திய அரசியலில் மாற்றத்துக்கான முடிவுகள் எட்டப்பட்டிருக்கும். இந்த நடைப்பயணமே எல்லாவற்றுக்கும் இறுதி என்று நான் சொல்லவில்லை. ஆனால், இந்த நடைப்பயணம் சரியான முன்னுரை. இதிலிருந்து கட்டியெழுப்பப்படும் தத்துவார்த்த ஏற்பாடு வெற்றிபெறும் என்கிறேன். அப்படி நடந்தால் இந்தியா தப்பிக்கும், ஜனநாயகம் பிழைக்கும்.”

“ராகுலின் பயணத்தில் மக்கள் காட்டும் ஆர்வத்தைக் கட்சிக்காரர்களிடம் பார்க்க முடியவில்லையே ஏன்?”

“கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே இப்படியான விமர்சனங்கள், கேள்விகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் மீறித்தான் கட்சி இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. போகப் போகச் சில விஷயங்கள் சரியாகிவிடும். காங்கிரஸ் கட்சியில் சோர்ந்து கிடப்பவர்களை, சமூகப் பணியில் ஆர்வமுள்ளவர்களை, அரசின் தாக்குதலுக்கு பயந்து ஒதுங்கியிருப்பவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். பல மதங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை நீக்கி அவர்களை இந்தியர்களாக இணைக்க வேண்டும். அதைத்தான் ராகுல் செய்துகொண்டிருக்கிறார். அதில் வெற்றியும் காண்பார்.”