சமூகம்
Published:Updated:

“என்.எல்.சி-யின் அலட்சியம்தான் காரணம்!”

என்.எல்.சி
பிரீமியம் ஸ்டோரி
News
என்.எல்.சி

வெடித்த பாய்லர்... கருகிய தொழிலாளர்கள்... கொதிக்கும் தொழிற்சங்கங்கள்

‘‘சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் நெய்வேலி அனல்மின் நிலைய நிர்வாகம் காட்டும் அலட்சியப் போக்குதான் தொடர்ச்சியாக விபத்துகள் நிகழ்வதற்கும் அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழப்பதற்கும் காரணம்’’ என்று கொந்தளிக்கின்றன தொழிற்சங்கங்கள்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 1956-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப் பட்டது நெய்வேலி நிலக்கரி நிறுவனம். இங்கு அனல்மின் நிலையம் 1 மற்றும் விரிவாக்கம், அனல்மின் நிலையம் 2 மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி (Neyveli New Thermal Power Project) என ஐந்து அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. பொதுத் துறை நிறுவனமான இதில், நிரந்தர தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என 10,000-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிகின்றனர். விபத்துகள், தொழி லாளர்கள் பிரச்னை, வேலை நிறுத்தம் போன்றவை இங்கு அன்றாட நிகழ்வாகி விட்டன.

சுமார் 3,000 தொழிலா ளர்கள் பணிபுரியும் 2-வது அனல்மின் நிலையத்தில் மே 7-ம் தேதி பாய்லருக்குள் நிலக்கரியை அனுப்பும்போது பாய்லர் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில், நிரந்தர தொழிலாளிகளான சர்புதீன் மற்றும் பாவாடை, ஒப்பந்தத் தொழிலாளிகளான சண்முகம், பாலமுருகன், அன்புராஜ், ஜெயசங்கர், மணிகண்டன், ரஞ்சித்குமார் ஆகிய எட்டு தொழிலாளர்கள் படுகாய மடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சர்புதீன், சண்முகம், பாலமுருகன், பாவாடை ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சர்புதீன் - சண்முகம் - பாலமுருகன் - பாவாடை
சர்புதீன் - சண்முகம் - பாலமுருகன் - பாவாடை

இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத் தலைவர் வேல்முருகன், ‘‘விபத்துக்குள்ளான அனல்மின் நிலையம் 30 ஆண்டுகள் பழைமையானது என்பது விபத்துக்கான முக்கியமான காரணம். வருடத்துக்கு ஒருமுறை மேற்கொள்ளவேண்டிய பழுதுபார்க்கும் பணியை ஒழுங்காகச் செய்வதில்லை. தெர்மலில் நிலக்கரியைச் சுத்தம் செய்யும் பணியையும் முறையாக மேற்கொள்வதில்லை. உற்பத்தியை மட்டுமே கருத்தில்கொண்டு நிர்வாகம் செயல்படுவதால்தான் இப்படியான விபத்துகள் துயரமான தொடர்கதை யாகிவிட்டன. கடந்த ஆண்டும் இதேபோன்று தீ விபத்து ஏற்பட்டு, ஒருவர் உயிரிழந்தார்.

அதற்குப் பிறகாவது ‘பெல்’ போன்ற பெரிய நிறுவனத்தினரை வரவழைத்து அந்தப் பழுதை சரி செய்திருக்கலாம். ஆனால், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு பழுதுபார்த்ததுதான் தற்போது நான்கு தொழிலாளர்களை பலி கொண்டிருக்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய என்.எல்.சி நிர்வாகம் அமைத்திருக்கும் குழுவில், தொழிற்சங்க நிர்வாகிகளையும் இணைக்க வேண்டும்’’ என்றார்.

 வேல்முருகன் - சுகுமார்
வேல்முருகன் - சுகுமார்

அகில இந்திய தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் இணைப் பொதுச்செயலாளரான சுகுமார், ‘‘தெர்மலை சுத்தம் செய்வதற்கான டெண்டரை, நிர்வாகம் ரத்து செய்துவிட்டது. அதனால், அந்தப் பணி மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், பாய்லருக்குள் நிலக்கரியைச் சுமந்து செல்லும் இழுவையில் படிந்திருந்த கரியை சுத்தம் செய்யாமலேயே இயக்கியிருக்கின்றனர். கொள்திறனைவிட நிலக்கரியின் அளவு அதிகமானதால் பாய்லர் வெடித்திருக்கிறது. இத்தனைக்கும், பாய்லரில் நீராவியின் அழுத்தம் அதிகமானால் எச்சரிக்கும் பாதுகாப்பு வால்வு, மூன்று முறை திறந்திருக்கிறது. போதுமான அனுபவம் இல்லாத வடமாநிலத் தொழிலாளர்களை அங்கு பணியமர்த்தியிருந்ததால், ஆபத்து ஏற்படப்போவதைக் கண்டுணர்ந்தும் தடுத்து நிறுத்த முடியாமல்போய்விட்டது.

என்.எல்.சி
என்.எல்.சி

கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற விபத்தில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டனர். வேல்முருகன் என்கிற தொழிலாளி உயிரிழந்தார். பாவாடை (இப்பொது விபத்தில் இறந்த பாவாடை வேறொருவர்) என்கிற மற்றொரு தொழிலாளி இன்றுவரை வேலைக்கு வர முடியாத அளவுக்கு முடங்கிக் கிடக்கிறார். ஒரு விபத்து ஏற்பட்டால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை சரிசெய்ய வேண்டும். என்.எல்.சி நிர்வாகம் அப்படிச் செய்திருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம்” என்றார்.

இதுகுறித்து என்.எல்.சி-யின் மக்கள் தொடர்புத் துறை தலைமைப் பொது மேலாளர் குருசாமிநாதனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு, குறைபாடுகளை சரிசெய்துவிட்டோம். திருச்சியிலிருந்து பாய்லர் இன்ஸ்பெக்டர் வந்து ஆய்வு செய்து ஒப்புதல் கொடுத்தார். பாதுகாப்பு இல்லையென்றால், யாரும் ஒப்புதல் கொடுக்க மாட்டார்கள். நன்றாக இயங்கிக்கொண்டிருந்த யூனிட்டில் எப்படி விபத்து ஏற்பட்டது என ஆய்வு செய்யத்தான் இரு குழுக்களை அமைத்துள்ளோம். பழுதை சரிசெய்யும் விவகாரத்தில் டெண்டர் அடிப்படை யிலேயே நிறுவனங்களை தேர்வு செய்கிறோம்’’ என்றார்.

இனி எந்த உயிரும் விபத்தால் பலியாகி விடக்கூடாது. என்.எல்.சி நிர்வாகம் விழிப்புடன் செயல்பட வேண்டும்!