Published:Updated:

''ICMR எப்படி கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும்?'' - மோடி அரசை விமர்சிக்கும் வல்லுநர்கள்!

கோவிட்-19 தொற்று
கோவிட்-19 தொற்று

கோவிட் தொற்றை சமாளிப்பதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டது என சர்வதேச அளவில் விமர்சனங்களை சந்தித்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்நிலையில் இந்திய அரசின் கோவிட் சம்பந்தமான மிக முக்கியமான கொள்கை முடிவு விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

கோவிட் -19 தொற்றை சமாளிப்பதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டது எனச் சர்வதேச அளவில் விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆளுமைத் திறன் குறைபாட்டால்தான் இந்தியா மிக மோசமான நிலையில் போராடிக்கொண்டிருக்கிறது என நேரடியாகக் காரமான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்திய அரசின் கோவிட் சம்பந்தமான மிக முக்கியமான கொள்கை முடிவு ஒன்று விவாதிக்கப்படுகின்றது. மத்திய அரசிற்கு கோவிட் தொடர்பான முடிவுகள் எடுக்கப் பரிந்துரை செய்யும் தலைமை அமைப்பாக ஐசிஎம்ஆர் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதே அந்த சர்ச்சைக்குரிய முடிவு. சற்று விரிவாகப் பார்ப்போம்...

COVID-19
COVID-19
AP Illustration/Peter Hamlin

ஐசிஎம்ஆர் (ICMR- Indian Council for Medical Research) இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை. இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சியில் உட்சபட்ச அதிகாரம் கொண்ட நிறுவனம். இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் உயிரியல் மருத்துவ ஆய்விற்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய பணிகளில் ஈடுபடுகிறது.

இந்த அமைப்பைத்தான் இந்தியாவின் கொரோனாவிற்கு எதிரான போரினை முன்னடத்தி செல்ல மத்திய அரசு தேர்வு செய்தது. இதற்காக ஒரு நிபுணர்கள் செயற் குழுவையும் உருவாக்கியது ஐசிஎம்ஆர். இந்த ஓராண்டு காலத்தில் கொரோனா தொற்று பரிசோதனை, நோயின் தன்மை, நோய் பரவல், நோய்க்கான சிகிச்சை, அதற்குத் தேவையான தொழில்நுட்பம் (test, track, trace, treat and technology) என ஐந்து நிலைகளில் தன்னுடைய பணிகளை ஆரம்பித்தது. கூடுதலாக ஐந்து ஆய்வுக் குழுக்களையும் நிர்மாணித்து, கொரோனா பரவலுக்கு எதிரான ஆய்வுகளை முடக்கியது.

டெஸ்ட் கிட் பயன்பாடு தொடங்கி, பிளாஸ்மா சிகிச்சை, தடுப்பூசி என கொரோனா சிகிச்சைக்குத் தேவையான எல்லா ஆய்வுகளையும் செய்து அவ்வப்போது அதன் முடிவுகளை வெளியிட்டது. எல்லாம் சரி, ஆனால் ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒரு பெருந்தொற்று நோயினை கட்டுப்படுத்தும் வேலைகளை எவ்வளவு திறம்படச் செய்ய முடியும் என்பதே இப்போது எழுப்பப்படும் கேள்வி. ஏனெனில் அதற்கென பிரத்தியேகமாக இந்தியாவிலேயே ஒரு அமைப்பு இருக்கிறது.

''ICMR எப்படி கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும்?'' - மோடி அரசை விமர்சிக்கும் வல்லுநர்கள்!

National Centre for Disease Control (NCDC)...1963-ம் ஆண்டு தொற்றுநோயியல் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் இது. பஞ்சாபில் 2002-ம் ஆண்டு ஏற்பட்ட நிமோனியா பிளேக் நோய், 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சார்ஸ் தொற்றுநோய், 2005-ம் ஆண்டு பரவிய மூளைக்காய்ச்சல், 2006-ம் ஆண்டின் பறவை காய்ச்சல் நோய் போன்ற முந்தைய தொற்று நோய் உள்ளிட்ட பல சமயங்களில் அவை குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டு அறிவுரை வழங்கியது இந்த அமைப்புதான். சமீபத்தில் கொரோனா வைரஸின் இரட்டை உருமாற்றம் குறித்துக் கண்டுபிடித்ததும் இந்த அமைப்புதான். தற்போது அமெரிக்காவின் சென்டர் ஃபார் டிசீஸ் கன்ட்ரோல், ஐசிஎம்ஆர் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து கோவிட் 19 குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது.

நோய்த் தடுப்பில் அனுபவம் வாய்ந்த பொது சுகாதார நிபுணர்கள் (Public Health Experts), தொற்றுநோயியல் நிபுணர்கள் கொண்ட இந்த அமைப்பே இந்தியாவின் கொரோனா நோய்த் தடுப்பில் முன்னிலை வகித்திருக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் வாதம். அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இந்தியாவின் சிடிசி க்கு இணையான அமைப்புகள் தான் இந்த பணியை முன்னின்று நடத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் டெலிகிராப் பத்திரிகையின் சார்பில் நடந்த ஒரு விவாத நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குனால் சர்க்கார் இதுகுறித்து பேசுகையில், " இந்தியாவில் சிடிசி என ஒரு அமைப்பு இருக்கிறது. அதை விரோதத்திற்குரிய பிரதேசமாக இந்திய அரசு பார்க்கிறது போலும். அதனால்தான் கொரோனா போரின் அதிகாரத்தை ஐசிஎம்ஆர் இடம் கொடுத்திருக்கிறது. ஆராய்ச்சியை பணியாகக் கொண்ட மிகவும் அமைதியை விரும்பும் கனவான்கள் உள்ள அமைப்பு ICMR. அங்குச் சரியானவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக மத்திய அரசு இதை செய்யவில்லை. மாறாக அங்கு எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் யாருமில்லை என்பதனால் எடுத்த முடிவு" எனக் கூறியிருக்கிறார்.

டாக்டர். குனால் சர்க்கார்
டாக்டர். குனால் சர்க்கார்
telegraphindia.com

முடிவெடுக்க முடியாத எல்லா விஷயங்களுக்கும் ஒரு கமிட்டி அமைப்பது இந்தியாவின் தொன்றுதொட்ட வழக்கம். அந்த கமிட்டி சில கூட்டங்களை நடத்தும். பின்னர் அவ்விஷயம் அப்படியே கிடப்பில் போடப்படும். அப்படித்தான் மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட கோவிட் பிரச்னையைக் கையாள்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த ஆண்டு அப்படி உருவாக்கப்பட்ட மாநில கமிட்டிகளில் தமிழகத்திலும், கேரளாவிலும் மட்டும்தான் சரியான நிபுணர்கள் குழு இடம்பெற்றிருந்ததாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது.

கொரோனா ஆய்வுக்குழுவிலிருந்து விலகிய மூத்த விஞ்ஞானி ஷாஹித் ஜமீல்! - அரசின் அழுத்தம் காரணமா?!

இந்நிலையில், இந்தியாவின் SARS-COV-2 மரபியல் ஆய்வு கூட்டமைப்பு (INSACOG) ஆலோசனைக்குழுவின் தலைவராக, கொரோனா தொற்று குறித்த ஆய்வில் செயலாற்றிவந்த மூத்த விஞ்ஞானி ஷாஹித் ஜமீல், தற்போது அந்த பதவியிலிருந்து விலகியிருக்கிறார். அரசின் தெளிவற்ற செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாகச் சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில் விமர்சித்திருந்தார் ஷாஹித் ஜமீல். இந்நிலையில் அவர் பதவி விலகியிருப்பதற்கு அரசியல் அழுத்தம் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

அரசு தன் அரசியல் நோக்கங்களைத் தவிர்த்துவிட்டு, தகுதியான நிபுணர் குழுவின் உதவியோடு செயல்படுவது மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றும். ஆனால் இன்றோ, பறிபோகும் உயிர்களும், மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் ஆம்புலன்சுகளும் தான் மத்திய அரசின் ஆளுமைக்கான சாட்சியாகிறது.

அடுத்த கட்டுரைக்கு