சட்டப்பேரவைக்குள் டிஷ்யூம்... டிஷ்யூம்... அத்துமீறினாரா முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி?

தனக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளையும் காவலர்களையும் மிகவும் கீழ்த்தரமாக நடத்தக்கூடியவர்தான் இன்ஸ்பெக்டர் ஜெயராமன்.
புதுச்சேரி முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், சட்டப்பேரவை வளாகத்திலேயே சக காவலரை ரத்தம் வரு மளவுக்குத் தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி யிருக்கிறது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன். முதல்வரின் வாகனத்தின் பின்னால் செல்லும் பாதுகாப்புப்படையில் செந்தில்குமார் என்ற ஐ.ஆர்.பி.என் (Indian Reserve Battalion) ஏட்டு பணியாற்றி வருகிறார். ஆகஸ்ட் 3-ம் தேதி மூக்கில் ரத்தம் வழிய பெரியகடை காவல் நிலையத்துக்குச் சென்ற ஏட்டு செந்தில்குமார், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தன்னைத் தாக்கிவிட்ட தாகப் புகார் கொடுத்தார். அதில், ‘‘முதல்வர் ரங்க சாமி வழக்கம்போல வீட்டிலிருந்து புறப்பட்டு சட்டப் பேரவைக்கு வந்தார். முதல்வருடன் வந்த நான் அவர் அறைக்குள் சென்ற பிறகு பாதுகாப்பு அறை யில் இருந்தேன். அப்போது அங்கு வந்த இன்ஸ் பெக்டர் ஜெயராமன், என்னை ஆபாசமான வார்த்தை களில் திட்டி அடித்தார். அதில் என் மூக்கு உடைந் தது. அத்துடன் `சாகடித்துவிடுவேன்’ என்றும் மிரட்டினார்’’ என்று கூறியிருக்கிறார்.

புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய மூத்த காவல் அதிகாரி ஒருவர், “தனக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளையும் காவலர்களையும் மிகவும் கீழ்த்தரமாக நடத்தக்கூடியவர்தான் இன்ஸ்பெக்டர் ஜெயராமன். அவர் வாயைத் திறந்தாலே அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகள் அருவிபோலக் கொட்டும். அவர் பணிபுரிந்த காவல் நிலையங்களில் விசாரித் தாலே, இதைப்பற்றி கதை கதையாகச் சொல்வார்கள். அன்றும் அப்படித்தான் அந்த ஏட்டை ஆபாசமாகத் திட்டி ஏதோ வேலை ஏவியிருக்கிறார். பதிலுக்கு அந்த ஏட்டு, இன்ஸ்பெக்டரின் குடும்பத்தை அநாகரிகமாக விமர்சித்திருக்கிறார். அதனால்தான் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ரௌடியாக மாறி, ஏட்டை அடித்துத் துவைத்திருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென் றால், தற்போதுவரை ஜெயராமன் முதல்வரின் பாது காப்பு அதிகாரியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. இந்தப் புகாருக்கு எஃப்.ஐ.ஆர்-கூடப் போடமாட்டார்கள். புகாரை வாபஸ் வாங்கிக்கொள்வ தாக அந்த ஏட்டையே சொல்லவைப்பார்கள் பாருங்கள்” என்றார்.

பெரியகடை காவல் நிலைய ஆய்வாளர் கண்ண னிடம் பேசியபோது, “சட்டப்பேரவைக்குள் நடந்த விவகாரம் என்பதால், சபாநாயகரிடம்தான் அவர் முறையிட வேண்டும். மேலும் புகார் கொடுக்க விரும்பவில்லை என்று பாதிக்கப்பட்ட காவலரே கூறிவிட்டதால் எஃப்.ஐ.ஆர் எதுவும் போடவில்லை” என்றார். ஆனால், சபாநாயகர் செல்வம், “ஐ.ஆர்.பி.என் காவலர்கள் எனது கட்டுப்பாட்டில் வரமாட்டார்கள்” என்றார்.
முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஜெயராமனைத் தொடர்புகொண்டபோது, “அப்புறம் பேசுகிறேன்” என்று தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.
சட்டமும் தண்டனையும் சாமானிய மக்களுக்கு மட்டும்தான்போலும்.