Published:Updated:

தாக்குதல் குற்றச்சாட்டு நாடகமா..? - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் மம்தாவின் வீடியோ பதிவும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மருத்துவமனையில் மம்தா பானர்ஜி
மருத்துவமனையில் மம்தா பானர்ஜி

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் பதற்றம் நிறைந்த மாநிலமாக மாறியிருக்கும் மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதிவரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படவிருக்கும் நிலையில், மேற்கு வங்கத்துக்கு மட்டும் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவே, அங்கு அசாதாரணமான சூழல் நிலவுவதை உணர்த்துகிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

2011-ம் ஆண்டிலிருந்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது. அந்த ஆட்சியை அகற்றிவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பா.ஜ.க கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைமை மேற்கு வங்கத்தின் மீது தனி கவனம் செலுத்திவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் அடிக்கடி அந்த மாநிலத்துக்கு விசிட் அடித்துவருகிறார்கள். இதனால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மட்டுமன்றி, பதற்றம் நிறைந்த மாநிலமாகவும் மேற்கு வங்கம் இருந்துவருகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜெ.பி.நட்டா மேற்கு வங்கம் சென்றபோது அவரது கார் தாக்கப்பட்டதாகவும், அவரது காருக்குப் பின்னால் அணிவகுத்துச் சென்ற பா.ஜ.க-வினர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பதற்றம் நிறைந்த மாநிலமாக மேற்கு வங்கம் மாறியிருக்கிறது.

கொல்கத்தாவில் அமைந்துள்ள பவானிபூர் தொகுதியில்தான் கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் மம்தா போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த முறை நந்திகிராம் தொகுதிக்கு அவர் மாறியிருக்கிறார். மம்தாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவரும், மம்தாவின் வலதுகரமாகச் செயல்பட்டவருமான சுவேந்து அதிகாரிதான் தற்போது மம்தாவை எதிர்த்து நந்திகிராமில் போட்டியிடுகிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் அதிக செல்வாக்குமிக்க நபர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், `முடிந்தால் நந்திகிராமில் ஜெயித்துப் பாருங்கள்’ என்று மம்தாவுக்கு பா.ஜ.க-வினர் சவால் விடுத்திருக்கிறார்கள். இத்தகைய சூழலில்தான், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மார்ச் 10-ம் தேதி மம்தா தாக்கல் செய்தார். அதன் பிறகு, அங்கிருந்த கோயில் ஒன்றில் பிரார்த்தனை செய்துவிட்டு காரில் புறப்படவிருந்த சமயத்தில்தான் அவர் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

காரில் ஏறி முன் சீட்டில் அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நான்கைந்து பேர் வந்து தம்மைத் தாக்கியதாக மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ள மம்தாவின் இடதுகாலில் மாவுக்கட்டு போடப்பட்டிருக்கிறது.

விலகிய வீர முத்தரையர் சங்கம்; சமாதானம் பேசிய பா.ஜ.க - ஒரு சீட் கொடுக்கிறதா அ.தி.மு.க?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நான் காருக்குள் அமர்ந்திருந்தேன். காரின் கதவை அவர்கள் ஓங்கிச் சாத்தினார்கள். என் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையாக வலிக்கிறது. எனக்கு எதிரான சதி இது...” என்று கூறும் மம்தா பானர்ஜி, ``தாக்குதல் சம்பவம் நடைபெற்றபோது அந்த இடத்தில் போலீஸார் இல்லை” என்கிறார்

ஆனால், தாம் தாக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறுவதை, பா.ஜ.க மறுத்திருக்கிறது. `மம்தா பானர்ஜி நாடகம் ஆடுகிறார்’ என்று பா.ஜ.க-வினர் கூறுகிறார்கள். `200-300 போலீஸார் இருக்கும்போது அவரை எப்படித் தாக்க முடியும்...’ என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். காரின் பின்சீட்டில் மம்தாவுக்கு பாதுகாப்பு வழங்கும் போலீஸார் அமர்ந்திருந்ததாகவும், தாக்குதல் நடந்ததற்கான வீடியோ பதிவுகள் எதுவும் இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

``தாம் தாக்கப்பட்டதாக மக்களை அவர் தவறாக வழிநடத்துகிறார். மம்தாவுக்கு துணிச்சல் இருந்தால், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு தயாரா...” என்று பா.ஜ.க-வின் தேசியப் பொதுச்செயலாளரும் மேற்கு வங்க பா.ஜ.க பொறுப்பாளருமான கைலாஷ் விஜயவர்கியா கூறியிருக்கிறார்.

கொல்கத்தாவிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மம்தா பானர்ஜி, இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை ரத்துசெய்திருக்கிறார். மருத்துவமனைக்கு வெளியே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் திரண்டு, மம்தாவுக்கு ஆதரவாக முழக்கமிட்டுவருகிறார்கள். திரிணாமுல் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி. `சட்டமன்றத் தேர்தலில் சக்கர நாற்காலியில்தான் நான் பிரசாரத்துக்கு வர வேண்டியிருக்கும்’ என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து தற்சமயம் எந்தக் கருத்தும் கூற முடியாது என்றும், சம்பவம் குறித்து விசாரித்துவருகிறோம் என்றும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மம்தாவின் குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க கோரியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு