Published:Updated:

`நீங்கள் தவழ்ந்து பதவியேற்ற வீடியோவை போட்டு காட்டட்டுமா?’ - செந்தில் பாலாஜிக்காக கொதித்த ஸ்டாலின்

சத்யா கோபாலன்

தர்ம யுத்தம் செய்தாலும் நான் பல ஆண்டுகளாக இதே கட்சியில்தான் உள்ளேன். எந்தக் கட்சிக்கும் தாவவில்லை என சட்டசபையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசினார்!

தமிழக சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம்

தமிழக அரசின் சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் கூட்டத்தில் மின்சாரம் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்தக் கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் அதற்கு முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலில் செந்தில்பாலாஜி பேசும்போது, பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிறப்புகளைப் பற்றிப் பேசியுள்ளார். அப்போதே அவரின் பேச்சுக்கு அ.தி.மு.க-வினர் கூச்சலிட்டு வந்துள்ளனர். தொடர்ந்து தமிழகத்தின் வருங்கால தலைமை ஸ்டாலின்தான் எனக் கூறிவிட்டு, `ஸ்டாலின், யாரிடமும் குனிந்து கும்பிட்டு பதவியை வாங்கவில்லை’ எனப் பேசியுள்ளார். செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சு அ.தி.மு.க-வினரை கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.

பின்னர் அவரின் பேச்சுக்குப் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `செந்தில் பாலாஜி குனிந்து, கும்பிட்டுப் பதவியை வாங்கினோம் என எங்களைத் தொடர்புபடுத்திப் பேசுகிறார். அவரின் கருத்து கண்டிக்கத்தக்கது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த சில வருடங்களில் செந்தில் பாலாஜி எத்தனை சின்னங்கள், எத்தனை கட்சிகளில் போட்டியிட்டுள்ளார் என எங்களுக்கும் தெரியும். செந்தில் பாலாஜி மீண்டும் அ.தி.மு.க-வுக்கு வராமல் இருந்தால்போதும். தற்போதுள்ள கட்சிக்காவது விசுவாசமாக இருந்தால் நல்லது’ எனக் கூறினார்.

சட்டமன்றம்
சட்டமன்றம்

தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், `` செந்தில் பாலாஜி பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் அமைச்சர்கள் அதற்கு விளக்கம் தரலாம். அ.தி.மு.க பிளவுபட்டபோது ஓ.பி.எஸ் என்னவெல்லாம் பேசினார் என எங்களுக்குத் தெரியாதா. நீங்கள் யாரிடம் குனிந்து கும்பிட்டீர்கள் என்ற பட்டியல் ஆதாரத்துடன் உள்ளது. அதை போட்டுக் காட்ட வேண்டும் என்றால் இந்த ஒரு நாள் பத்தாது. நீங்கள் தவழ்ந்து வந்து பதவியை வாங்கிய வீடியோக்கள் என்னிடம் உள்ளன. போட்டு காட்டட்டுமா?” எனக் கூறியுள்ளார்.

ஸ்டாலின் பேச்சுக்குப் பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், `` ஜெயலலிதா இருக்கும்போது அவரிடம் செந்தில் பாலாஜி எத்தனை முறை குனிந்து கும்பிட்டார் என்பது எங்களுக்கும் தெரியும். நான் தர்மயுத்தம் நடத்தியது தற்போது வெற்றி பெற்றுவிட்டது. என் தர்மயுத்தத்தில் முதல்வரும் இருந்தார். அவருடன் இணைந்துதான் நான் வெற்றி பெற்றேன். நான் பல ஆண்டுகளாக இதே கட்சியில்தான் உள்ளேன். எந்தக் கட்சிக்கும் தாவவில்லை. ஆனால், செந்தில் பாலாஜி முதலில் ம.தி.மு.க-வில் இருந்தார். பின்னர் அ.தி.மு.க-வுக்கு வந்தார். அங்கிருந்து `அ.ம.மு.முமுகமக...'வுக்குச்(!) சென்றார். அவர் ஜெயலலிதாவைக் குனிந்து கும்பிட்ட புகைப்படங்கள் எங்களிடமும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இப்படி அ.தி.மு.க-வினரும், தி.மு.க-வினரும் மாறி மாறிக் குறை கூறியதால், சட்டமன்றத்தில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. இருந்தும் தொடர்ந்து மின்சாரத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.