சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கடலையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறதா காட்டுப்பள்ளி துறைமுகம்?

அதானி துறைமுகம்
பிரீமியம் ஸ்டோரி
News
அதானி துறைமுகம்

வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நலனை மேம்படுத்த வேண்டும். அவர்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிடக்கூடாது.

யற்கையின் அங்கத்தில் நாம் சிறுபுள்ளி. இயற்கையின் சமநிலையைக் குலைக்கும்போது சுனாமி, பருவம் தப்பும் மழை, தொடர் புயல்கள் என விளைவுகளை எதிர்கொள்வோம். இனியும் இயற்கையின் அரண்களை நாம் அபகரித்தால் விளைவுகள் மோசமாகும் என்று உலகமெங்குமிருந்து எச்சரிக்கைகள் ஒலிக்கின்றன. இந்தச் சூழலில்தான், தமிழகத்தில் காட்டுப்பள்ளியை மையம் கொண்டிருக்கிறது ஒரு சர்ச்சை.
கடலையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறதா காட்டுப்பள்ளி துறைமுகம்?

சென்னையிலிருந்து 35 கி.மீ தொலைவில் பழவேற்காட்டை ஒட்டியிருக்கிறது காட்டுப்பள்ளி. கடல், ஏரி, கால்வாய்களென நான்குபுறமும் நீர்சூழ அமைந்திருக்கும் இந்தத் தீவை ஒட்டி, 330 ஏக்கரில் எல் அண்ட் டி நிறுவனத்தின் துறைமுகம் செயல்பட்டு வந்தது. 2018-ல் இந்தத் துறைமுகத்தின் 97 சதவிகிதப் பங்குகளை, ரூ.1,950 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியது. ஏற்கெனவே இந்தியாவில் 7 துறைமுகங்களை நடத்திவரும் அதானி குழுமம், காட்டுப்பள்ளித் துறைமுகத்தை 6,110 ஏக்கர் பரப்பில் விரிவுபடுத்துவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய துறைமுகம், பிரமாண்ட தொழிற்பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கியது இந்தத் திட்டம். இத்திட்டத்தின் மூலம் நேரடியாக 1,500 பேருக்கும் மறைமுகமாக 4,500 பேருக்கும் வேலை கிடைக்கும் என்கிறார்கள்.

பழவேற்காடு மீன் மார்க்கெட்
பழவேற்காடு மீன் மார்க்கெட்

‘ஏற்கெனவே, அரசு நடத்தும் சென்னைத் துறைமுகமும் எண்ணூர்த் துறைமுகமுமே போதிய வணிக இலக்கை எட்டவில்லை. இந்தச்சூழலில் சென்னையையொட்டி இன்னொரு பிரமாண்டமான துறைமுகத்துக்கான தேவை என்ன’ என்ற கேள்வியை எழுப்பும் சூழலியல் ஆர்வலர்கள், விரிவாக்கத்தால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதானி துறைமுகம்
அதானி துறைமுகம்

பழவேற்காடு ஏரி, இயற்கையின் உன்னதப் படைப்புகளில் ஒன்று. ஸ்வர்ணமுகி ஆறும், காலங்கி ஆறும், ஆரணி ஆறும் கடலோடு இணைந்து, இந்த ஏரியை உருவாக்குகின்றன. வளமிக்க இந்த ஏரியிலும் அதையொட்டிய கடற்பரப்பிலும் விதவிதமான இறால்கள், நண்டுகள், 160க்கும் மேற்பட்ட மீன் வகைகள் கிடைக்கின்றன. 82 கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் இது.

மிஞ்சியிருக்கும் பஜனை கோயிலருகில் துரை.மகேந்திரன்
மிஞ்சியிருக்கும் பஜனை கோயிலருகில் துரை.மகேந்திரன்

காட்டுப்பள்ளித் துறைமுகத்தின் தற்போதைய கையாளும் திறன் ஆண்டுக்கு 24.65 மில்லியன் டன். இதை 320 மில்லியன் டன்னாக மாற்றவிருக்கிறார்கள். இது இந்தியாவில் உள்ள மொத்தத் துறைமுகங்களின் கையாளும் திறனில் மூன்றில் ஒரு பகுதி. இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் துறைமுகங்களின் கையாளும் திறன் 275 மில்லியன் டன்தான். இந்தத் திட்டத்துக்கு அதானி குழுமம் கோரியுள்ள 6,110 ஏக்கரில் சுமார் 2,000 ஏக்கர் கடலுக்குள் வருகிறது. குறிப்பிட்ட தூரத்துக்குக் கடல் ஆழப்படுத்தப்படும். மணலையும் பாறைகளையும் கொட்டி, கடலில் கப்பல் நிற்குமிடங்கள் உட்பட பல கட்டுமானங்கள் உருவாக்கப்படும். அதனால் கடலின் இயல்பு மாறுவதோடு பல கிராமங்கள் இல்லாமல்போய்விடும் என்பதே மீனவர்களின் அச்சம்.

பெண்களின் வாழ்வாதாரமான சிப்பித்தொழில்
பெண்களின் வாழ்வாதாரமான சிப்பித்தொழில்

“கடல்ல இயற்கையான சில சேற்றுப்பகுதிகள் உண்டு. அதுலதான் உயிரினங்கள் உருவாகும். ஆலமரச்சேற்றுல இறால்கள் அதிகமா வளரும். கருங்காளிச் சேற்றுல வஞ்சிரம் மீன்கள் அதிகம் வளரும். லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கொடபாடுச் சேறுன்னு இந்தக் கடலோட சிறப்பே இந்தச் சேற்றுப்பகுதிகள்தான். வேறெங்கும் கிடைக்காத நண்டுகள், இறால்களெல்லாம் இங்கே கிடைக்கும். ஏற்கெனவே சென்னை, எண்ணூர், எல் அண்ட் டி துறைமுக விரிவாக்கங்களால கடலோட சூழல் குலைஞ்சுபோச்சு. கடலுக்குள்ள மணலைத் தோண்டியும் கொட்டியும் இவங்க கட்டுமானங் களை உருவாக்கிட்டா இந்தப்பகுதியோட மீன்வளமே அழிஞ்சிபோயிடும். மீன் கிடைக்கலேன்னா மீனவர்கள் இந்தப்பகுதிகள்ல இருந்து இடம் பெயர்ந்துருவாங்க. மொத்தமா கடலை ஆக்கிரமிச்சுக்கலாம்னு திட்டம் போடுறாங்க... நாங்க அதுக்கு அனுமதிக்க மாட்டோம்” என்கிறார் சாட்டான்குப்பத்தைச் சேர்ந்த துரை.மகேந்திரன்.

காட்டுப்பள்ளி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்
காட்டுப்பள்ளி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்

துறைமுகங்கள், பிற கடல் ஆக்கிரமிப்புகளால் ஏற்கெனவே பழவேற்காட்டை ஒட்டியுள்ள கடலோர கிராமங்கள் பல பாதியளவுக்குத் தண்ணீரில் மூழ்கிவிட்டன. அண்ணா பல்கலைக்கழக ஆய்வுப்படி, 8 மீட்டர் முதல் 20.3 மீட்டர் அளவுக்கு இந்தப் பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. ‘1 மீட்டர் கடல் அரிப்பு ஏற்பட்டாலே, அது அதிக கவனம் செலுத்தவேண்டிய பகுதி’ என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

துரை.மகேந்திரன் பிறந்த சாட்டான்குப்பம் கிராமம் இப்போது இல்லை. அந்தக் கிராமத்தின் பல தெருக்கள் இப்போது கடலுக்குள் மூழ்கிவிட்டன. காட்டுப்பள்ளியை ஒட்டியிருக்கும் கோரைக்குப்பம் கிராமத்தி்லும்் பாதியளவு கடலுக்குள் போய்விட்டது. மக்கள் பின்னகர்ந்து பக்கிம்ஹாம் கால்வாய்க்கு மேல் குடியிருப்புகளை அமைத்திருக்கிறார்கள்.

தடுப்பு கட்டப்பட்டுள்ள காட்டுப்பள்ளி கருங்காழி முகத்துவாரம்
தடுப்பு கட்டப்பட்டுள்ள காட்டுப்பள்ளி கருங்காழி முகத்துவாரம்

“முன்னல்லாம் வலையெடுத்துக்கிட்டு கடலுக்குள்ள இறங்கினா, படகு நிறைய பாடு நிறைஞ்சு திரும்புவோம். இப்போ டீசல் வாங்குற காசுக்குக்கூட மீன் அம்புட மாட்டேங்குது. துறைமுகத்தை விரிவாக்கம் செய்றதா சொல்லி எங்க கிராமத்தைப் பறிச்சுக்கிட்டா நாங்கெல்லாம் எங்கேய்யா போவோம்?” - கண்கலங்குகிறார் கோரைக்குப்பத்தைச் சேர்ந்த கஜேந்திரன்.

தற்போது அதானி துறைமுகம் அமைந்திருக்கும் இடத்துக்கு வெகு அருகிலேயே இருக்கிறது காட்டுப்பள்ளி கிராமம். வெளியில் சாலையில் இருக்கும் செழிப்பு ஊருக்குள் இல்லை. துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து ஊர் நிறைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. முகப்பிலேயே நம்மை எதிர்கொள்கிற பெரியவர் ஜெய்சங்கர், “சுத்திலும் சுவரைக்கட்டி எங்க ஊரை ஜெயில் மாதிரி மாத்திப்புட்டாங்க. செத்தாக்கூட நிம்மதியாச் சாக போக்கிடம் இல்லே எங்களுக்கு” என்று வருந்துகிறார்.காட்டுப்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் சேதுராமனிடம் பேசினோம்.

சேதுராமன், பிரபாகரன், ராஜேஷ், கஜேந்திரன்
சேதுராமன், பிரபாகரன், ராஜேஷ், கஜேந்திரன்

“2006ல எல் அண்ட் டி நிறுவனம் துறைமுகத்தைத் தொடங்க கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தினாங்க. 5,000 பேருக்கு நேரடியாவும் 10,000 பேருக்கு மறைமுகமாவும் வேலை தருவோம்னாங்க. எங்க பிள்ளைங்களுக்கு நல்ல வேலை கிடைக்குமேங்கிற நப்பாசையில வீடுகளையெல்லாம்கூட விட்டுக்கொடுத்தோம். கடலுக்கு ரெண்டு கிலோ மீட்டர் அப்பால கொஞ்சம் பேருக்கு வீடு கட்டிக்கொடுத்தாங்க. இதுவரைக்கும் வேலைன்னு பாத்தா 140 பேருக்குக் கொடுத்திருக்காங்க. பத்து வருஷத்துல ஒருத்தரைக்கூட பணிநிரந்தரம் செய்யலே. உள்ளே வேலை செய்ற எல்லாரும் வடஇந்தியர்கள். ஊத்துல தண்ணியெடுத்து விவசாயம் செஞ்சவங்க நாங்க. இப்போ எல்லாமே உப்பாகிப்போச்சு. நிச்சயம், இந்த விரிவாகத்தை அனுமதிக்க மாட்டோம்” - ஆவேசமாகச் சொல்கிறார் சேதுராமன்.

இந்தத் துறைமுகத்துக்கு ஏற்கெனவே நிலம் கொடுத்தவர்கள் காட்டுப்பள்ளிக் குப்பம் என்ற இடத்தில் வசிக்கிறார்கள். இங்கு 110 வீடுகள் இருக்கின்றன. அங்கே நம்மைச்் சந்தித்த முன்்னாள் ராணுவவீரர்் ராஜேஷ், “விரிவாக்கத்துக்காக 2,291 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை எடுக்கப்போறதா சொல்றாங்க. இதுல பெரும்பகுதி, மக்கள் பயன்பாட்டுல உள்ள இடங்கள். இதுபத்தி அதானி குழுமம் கொடுத்த சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில குறிப்பிடவேயில்லை. இந்தப்பகுதியிலதான் நெல் விவசாயம் அதிகம் நடக்குது. பெரும்பகுதி விவசாய நிலங்கள் இந்தத்திட்டத்துக்குப் போகும்னு சொல்றாங்க. சுத்திலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பிட்டதால கடலுக்குப் போறவங்க உபகரணங்களைத் தூக்கிக்கிட்டு ரெண்டு கிலோ மீட்டர் நடக்கவேண்டியிருக்கு. இன்னும் விரிவுபடுத்திட்டா நாங்கெல்லாம் எங்கே போறதுன்னு தெரியலே” என்று வருந்துகிறார்.

கடலையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறதா காட்டுப்பள்ளி துறைமுகம்?
கடலையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறதா காட்டுப்பள்ளி துறைமுகம்?

“கொற்றலை ஆற்றோட வடிகால், கோரைக்குப்பத்தை ஒட்டி கடலோட கலக்கும். இந்த வடிகால்தான் மழை வெள்ளத்தைக் கடலுக்குக் கொண்டு வர்றது. இதையும் பக்கிங்ஹாம் கால்வாயையும் மறிச்சுதான் இந்த விரிவாக்கத் திட்டம் வரப்போகுது. வெள்ளமில்லாத காலங்கள்ல இந்த வடிகால்கள் கடலை விட்டு விலகியிருக்கும். வெள்ளம் வந்தா கடலோட இணையும். காட்டுப்பள்ளி சிந்தாமணீஸ்வரர் கோயில் பக்கத்துல உள்ள கருங்காழி முகத்துவாரத்்்தை தடுப்பு கட்டி அடைச்சுட்டாங்க. இது ரொம்பவே அபாயம். இந்தப்பகுதி சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியா அறிவிக்கப் பட்டிருக்கு. அதுபத்தி கவலையே இல்லாம இந்த விரிவாக்கத்திட்டத்தைக் கொண்டு வருது அதானி குழுமம். பழவேற்காடு ஏரியில ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை கடல்நீர் ஏரிக்கும் ஏரிநீர் கடலுக்கும் போய்வரும். கடல்வாழ் உயிரினங்கள் ஏரிக்குள் வந்து இனப்பெருக்கம் செஞ்சுட்டு கடலுக்குள்ள போகும். இந்த விரிவாக்கத் திட்டத்தால கடலோட தன்மை மாறி இந்த இயற்கை நிகழ்வு குலைஞ்சு போகும். சரணாலயங்கள் இருக்கிற இடத்துல இருந்து 10 கி.மீ சுற்றளவுல சூழலைக் கெடுக்கிற எந்தத்திட்டங்களும் வரக்கூடாதுன்னு அரசே சொல்லுது. விரிவாக்கம் நடக்கப்போற இடத்துல இருந்து பழவேற்காடு பறவைகள் சரணாலயம் 2.1 கி.மீ தூரத்துலதான் இருக்கு. இதைச் சுற்றுச்சூழல் அறிக்்கையில மறைச்சிருக்காங்க. இந்தப்பகுதியில இருந்து கிணறுகள் மூலமா 100 மில்லியன் லிட்டர், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலமா 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்குப் போகுது. இதுவும் தடைப்படும். குறிப்பா, கடல் நீரைக் குடிநீராக்கும் நிறுவனம் இருக்கிற இடம், அதானி குழுமத்தோட திட்ட வரையறைக்குள்ள வருது” என்கிறார் சூழலியல் பொறியாளரும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்தவருமான பிரபாகரன்.

(Source: Ministry of Shipping -  2020)
(Source: Ministry of Shipping - 2020)

ஏற்கெனவே 25க்கும் மேற்பட்ட சூழலியல் பாதிப்பை உருவாக்கும் ரெட் பிரிவு நிறுவனங்கள் பழவேற்காட்டை ஒட்டிச் செயல்படுகின்றன. அவற்றின் தாக்கமே பழவேற்காட்டுப் பகுதியை வெம்மையாக்கிவிட்டது. துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டால் அம்மோனியா, நைட்ரேட் போன்ற 50க்கும் மேற்பட்ட ஆபத்தான ரசாயனங்கள் கையாளப்படும். எரிவாயு, எண்ணெய்களுக்கு பிரமாண்ட குழாய்கள் அமைக்கப்படும். இவற்றில் ஏதேனும் பிரச்னை வந்தால் அந்தப்பகுதியில் பெரும் சூழலியல் பாதிப்பு ஏற்படும். அதுகுறித்து விரிவான செயல்திட்டங்கள் ஏதும் சூழலியல் தாக்க மதிப்பீட்டில் இல்லை என்பதும் சூழலியலாளர்களின் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டின் இப்போதிருக்கும் அனைத்து முக்கியத் துறைமுகங்களும் மொத்தமாக 253.9 மில்லியன் டன் கையாளுதல் திறன் கொண்டவை. 2019-2020ல் (கோவிட் -19க்கு முன்பு) இந்தத் துறைமுகங்களில் கையாளப்பட்ட மொத்த சரக்கு 114.9 மில்லியன் டன். கிட்டத்தட்ட 45% அளவுக்கே சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. பிறகு எதற்கு இவ்வளவு பிரமாண்டமான இன்னொரு துறைமுகம் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

“சென்னைத் துறைமுகத்தையும் எண்ணூர்த் துறைமுகத்தையும் படிப்படியாக அழித்து, அதானி கையில் தருவதற்காகத்தான்” என்கிறார் அகில இந்திய துறைமுகத் தொழிலாளர் சம்மேளத்தின் தலைவர் நரேந்திரன்.

“ஏற்கெனவே எண்ணூர்த் துறைமுகத்தை மொத்தமாக அதானிக்கு விற்கத் திட்டமிட்டார்கள். ஆனால் சென்னைத் துறைமுக நிர்வாகம், நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்று அந்தத் துறைமுகத்தின் பங்குகள் அனைத்தையும் வாங்கிவிட்டது. இப்போது காட்டுப்பள்ளித் துறைமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம், சென்னை, எண்ணூர்த் துறைமுகங்களின் வணிகத்தை முடக்கி நஷ்டத்தில் தள்ளுவதே இவர்களின் நோக்கம். இது பழவேற்காட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள ஒரு லட்சம் மீனவர்களின் பிரச்னை மட்டுமல்ல... சென்னை, எண்ணூர்த் துறைமுகத்தைச் சார்ந்திருக்கும் 5,000 ஊழியர்கள். 25,000 பென்ஷனர்களையும் பாதிக்கும் பிரச்னை. விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடுவோம்” என்கிறார் அவர்.

சூழலியலாளர்கள், மீனவர்கள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளோடும் அதானி குழுமத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக்கைத் தொடர்புகொண்டோம். “கேள்விகளை மெயில் செய்யுங்கள், விளக்கம் தருகிறோம்” என்றார். இதழ் அச்சேறும்வரை விளக்கம் கிடைக்கவில்லை. தரும்பட்சத்தில் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

துறைமுக விரிவாக்கத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், கடந்த 22-ம் தேதி மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மீஞ்சூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘திட்டம் செயல்படுத்தவுள்ள இடத்திலிருந்து 15 கிலோ மீட்டருக்கு அப்பால் கூட்டம் நடத்தக்கூடாது’ என்று எதிர்ப்பு கிளம்பியதால் கொரோனாவைக் காரணம் காட்டிக் கூட்டத்தைத் தள்ளி வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம். மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடந்தபிறகே விரிவாக்கத்திட்டத்துக்கான விண்ணப்பம் இறுதிநிலையடையும் என்பதே இப்போதைய நிலை.

வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நலனை மேம்படுத்த வேண்டும். அவர்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிடக்கூடாது.