Published:Updated:

செருப்பைச் சுமக்கச் சொன்னாரா தி.மு.க எம்.எல்.ஏ?

ஆம்பூர் வில்லங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆம்பூர் வில்லங்கம்

ஆம்பூர் வில்லங்கம்

பகுத்தறிவு பேசுவதில் தி.மு.க-வினரை அடித்துக்கொள்ள முடியாது. ஆனால், அப்படிப் பேசுபவர்களின் மறுபக்கம் தலைகீழாக இருக்கும். அப்படித்தான் பட்டியல் சமூக நிர்வாகியைச் செருப்பைத் தூக்கிவரச் சொன்னதாகச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் தி.மு.க-வைச் சேர்ந்த ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வான வில்வநாதன்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பொன்னப்பள்ளி கிராமத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி சேதம் அடைந்த தடுப்பணையைப் பார்வையிடுவதற்காக எம்.எல்.ஏ வில்வநாதன் சென்றார். பாதை சேறும் சகதியுமாக இருந்ததால், செருப்பைக் கழற்றிவைத்துவிட்டு நடந்ததாகத் தெரிகிறது. அப்போது வெங்கடசமுத்திரம் ஊராட்சியின் தி.மு.க செயலாளர் சங்கர் என்பவர், எம்.எல்.ஏ-வின் செருப்பைக் கைகளால் தூக்கிக்கொண்டு சென்றார்.

செருப்பைச் சுமக்கச் சொன்னாரா தி.மு.க எம்.எல்.ஏ?

இதை தி.மு.க-வினரே செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்து, வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தனர். இதுதான் நெருப்பாகப் பற்றிக்கொண்டிருக்கிறது. ‘சுய மரியாதை இயக்கம், சமூகநீதி பேசும் கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க-வின் உண்மை முகம் இதுதான்’ என்று தி.மு.க-வை வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதையடுத்து, ஜூலை 6-ம் தேதி சங்கரை அருகில் அமரவைத்துக்கொண்டு பேட்டி கொடுத்தார் எம்.எல்.ஏ வில்வநாதன். ஆனாலும் சர்ச்சை ஓயவில்லை. தலித் அமைப்புகள் கொந்தளிக்கத் தொடங்கின. இந்திய குடியரசுக் கட்சி சார்பில் வேலூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

வில்வநாதன் - சங்கர்
வில்வநாதன் - சங்கர்

இந்திய குடியரசுக் கட்சியின் வேலூர் மாவட்டத் தலைவர் தலித்குமார், ‘‘எம்.எல்.ஏ வில்வநாதன் அணிந்திருந்த செருப்பின் மதிப்பு 6,500 ரூபாய் என்று அறிகிறோம். அதனால், செருப்பு சேற்றில் படாமலிருக்க பட்டியல் சமூக நிர்வாகியைச் சுமக்கச் செய்திருக்கிறார். அவரது இந்த அநாகரிகச் செயலை கூட்டணியிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் கண்டிக்கவில்லை’’ என்று கொந்தளித்தார்.

தி.மு.க-வைச் சேர்ந்த பட்டியல் சமூக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘வில்வநாதனுக்கு சாதிப்பற்று அதிகம். இந்த விவகாரத்திலிருந்து அவரைத் தப்பவைக்க பட்டியல் சமூக நிர்வாகிகளை அழைத்து ‘எம்.எல்.ஏ நல்லவர், சமூகநீதி பேசக்கூடியவர்’ என்று கட்டாயப்படுத்தி பதிவுபோட வைக்கிறார்கள்’’ என்றனர் குமுறலாக.

சங்கரிடம் பேசினோம். ‘‘செருப்பை எம்.எல்.ஏ தூக்கி வரச் சொல்லவில்லை. என் கையில் வைத்திருந்ததையும் அவர் பார்க்கவில்லை. சிறிது தூரம் சென்ற பிறகே என் கையில் இருந்த செருப்பைப் பார்த்து திட்டி, கீழே போடச் சொன்னார். நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், என்னைப் பகடையாகவைத்து எம்.எல்.ஏ-வின் வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள்’’ என்றார்.

சங்கர்
சங்கர்

வில்வநாதனிடம் பேசினோம். ‘‘நான் யாரிடமும் சாதி பார்த்துப் பழகியது கிடையாது. இப்படிப் பொய்யான தகவலைப் பரப்புவதால், மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் பிரச்னையைப் பெரிதுபடுத்துகிறார்கள்’’ என்றார்.

அடிமைப்படுத்த நினைப்பது தவறு; அதனினும் தவறு, அடிமையாக இருக்க விழைவது!