
சர்ச்சையில் அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்டத்தில் பணம் படைத்தவர்களுக்கும், மாற்றுக்கட்சியினர்களுக்கும்தான் பதவியும் மரியாதையும் கொடுக்கப்படுவதாக மாவட்டப் பொறுப்பாளரான அனிதா ராதாகிருஷ்ணன்மீது நான்கு ஒன்றியச் செயலாளர்கள் அறிவாலயத்துக்கு அனுப்பிய புகாரால், தூத்துக்குடி வந்து விசாரணை நடத்திச் சென்றிருக்கிறார் கே.என்.நேரு. இதனால், தூத்துக்குடி தி.மு.க `திகுதிகு’க்கிறது.
அனிதா ராதாகிருஷ்ணன்... அ.தி.மு.க-வில் குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ., அமைச்சர், மாவட்டச் செயலாளர் என உச்சத்தை எட்டியவர். அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு மாறினாலும், தனது செல்வாக்கால் தொடர்ந்து ஐந்து முறை திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுவருகிறார். கடந்த 2001-ல் கால்நடைத்துறை மற்றும் வீட்டுவசதி நகர்ப்புறத்துறையின் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 4,90,29,040 ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரின் மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர்மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு, கொரோனா ஊரடங்கால் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் மாடசாமி, கருங்குளம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மகாராஜன், கருங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் நல்லமுத்து, திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் ரமேஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து, ‘தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் காரணமே இல்லாமல் ஒன்றியச் செயலாளர்களை அனிதா ராதா கிருஷ்ணன் மாற்றிவருகிறார்’ என்று அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்து புகார் கடிதம் கொடுத்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் கனிமொழியைச் சந்தித்து இந்தப் புகார் குறித்து மீண்டும் நினைவுபடுத்த, ஆர்.எஸ்.பாரதியைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லியிருக்கிறார் கனிமொழி. அதன் பின்னரே விசாரணை அதிகாரியாக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தூத்துக்குடிக்கு அனுப்பிவைக்கப் பட்டார். இது பற்றி கடந்த இதழ், `மிஸ்டர் கழுகு’ பகுதியில் எழுதியிருந்தோம்.
ஜூலை 3-ம் தேதி... தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடந்த விசாரணைக்கு, புகார் அனுப்பிய நான்கு ஒன்றியச் செயலாளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ-வான சண்முகையாவும் அழைக்கப்பட்டனர். நேருவின் அருகில் அனிதா ராதாகிருஷ்ணனும் அமர வைக்கப்பட்டிருந்தார். அனிதா மீது ஒ.செ-க்கள் ஒவ்வொருவரும் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சென்றுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ’ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தைப் பிரித்தபோது என்னிடம் ஒரு வார்த்தைகூடக் கருத்து கேட்கவில்லை’ என ஆவேசமாகப் பேசியிருக்கிறார் எம்.எல்.ஏ சண்முகையா. அனைத்துக்கும் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் மெளனம் காத்திருக்கிறார் அனிதா.

புகார் வாசித்த நான்கு ஒன்றியச் செயலாளர்களிடமும் பேசினோம். ‘‘நாங்கள் நான்கு பேருமே 25 வருடங்களுக்குமேல் கட்சியில் இருக்கிறோம். மாவட்டத்தில் நடக்கும் தவறுகளை ஒன்றியச் செயலாளர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியதால், எங்களை ஒதுக்கிவிட்டார் அனிதா. அத்துடன், தலைவரைப் பார்த்து புகார் சொன்ன பிறகு, நாங்கள் பதவியில் இருக்கும்போதே ‘ஒன்றியப் பொறுப்பாளர்’ என்ற புதிய பதவியை உருவாக்கி, தனக்கு வேண்டியவர்களை நியமித்தார். இதில், மாற்றுக் கட்சியினர்தான் அதிகம்.
தெற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எல்லாமே பணம்தான். பணம் இருந்தால் மட்டும்தான் பதவி. அனிதா முன்பு அ.தி.மு.க-வில் இருந்ததால், அந்தக் கட்சியினருக்குத்தான் இங்கே முன்னுரிமை கொடுக்கிறார். அடிமட்டத்திலிருந்து வந்தவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. பழைய நட்பில் சில
அ.தி.மு.க அமைச்சர்களுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறார். இது சம்பந்தமாக தொகுதி எம்.பி என்ற முறையில் கனிமொழி மேடத்தைச் சந்தித்துப் பேசினோம். அனைத்தையும் முழுவதுமாகக் கேட்டு அதிர்ந்தே போனார். தலைமையிடம் பேசுவதாகவும் சொன்னார்.
நாங்கள் கனிமொழி மேடத்தைச் சந்தித்த விஷயம் அனிதாவுக்குத் தெரியவரவே, இந்த நான்கு ஒன்றியத்துடன் சாத்தான்குளம் ஒன்றியத்தையும் சேர்த்து, ஒன்றியங்களை இரண்டாகவும் மூன்றாகவும் பிரித்து பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கிக்கொண்டு ஒன்றியச் செயலாளர் பதவிகளைக் கொடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் நேரு அண்ணனிடம் விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம். நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

இது குறித்து அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘அந்த நான்கு ஒன்றியச் செயலாளர்களும் உள்ளாட்சித் தேர்தலில் சரியாக வேலை செய்ய வில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், நிர்வாக வசதிக்காகத்தான் ஒன்றியங்களைப் பிரித்து புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் வெற்றிக்காக வேலை செய்பவர்களை நியமிப்பதுதானே முக்கியம். தலைமைக்குத் தெரியாமல் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு, யாருக்கும் அதிகாரம் இல்லை. தேவையில்லாமல் அவர்கள் என்மீது புகார் சொல்கிறார்கள்’’ என்றார்.
கே.என்.நேருவிடம் பேசியபோது, ‘‘அனிதா ராதாகிருஷ்ணனுடன் ஒன்றியச் செயலாளர் களையும் ஒன்றாக அமரவைத்துத்தான் பேசினோம். அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அதன் விளக்கத்தைத் தலைமைக்கு அனுப்பியிருக்கிறோம்’’ என்றார் சுருக்கமாக.
‘‘ஏற்கெனவே சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற, சில அ.தி.மு.க அமைச்சர்களிடம் கோடிகளில் பேரம் பேசியதாகவும், மீண்டும் அ.தி.மு.க-வில் இணைய காய் நகர்த்தியதாகவும் கசிந்த தகவல்கள் அறிவாலயம் வரை சென்றதால் அனிதா கண்காணிப்பில்தான் இருந்தார். இப்போது ஒன்றியச் செயலாளர்களும் புகார் கொடுத்திருப்பதால் டென்ஷனாகிவிட்டாராம் ஸ்டாலின். அவர்மீது நிச்சயம் நடவடிக்கை பாயும்” என்றே கூறுகின்றனர் தூத்துக்குடி கழக உடன்பிறப்புகள்.