அரசியல்
அலசல்
Published:Updated:

உருட்டல், மிரட்டல், சுருட்டல் - அடுத்தடுத்த சர்ச்சையில் கோவை மேயர்!

கல்பனா
பிரீமியம் ஸ்டோரி
News
கல்பனா

மேயர் கல்பனா யாரையும் மதிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் அசோக் குமார் பெயரைச் சொல்லியே மிரட்டுகிறார்.

அதிகாரிகளுடன் உரசல், சொந்தக் கட்சி கவுன்சிலர்களுடன் மோதல், முறைகேடு என மேயர் மீதான அடுக்கடுக்கான சர்ச்சைகளால் திணறிக்கொண்டிருக்கிறது கோவை மாநகராட்சி!

அண்மையில், “எனக்கே தெரியாமல் டெண்டர் விடுகின்றனர்” என்று மாமன்றக் கூட்டத்திலேயே மேயர் கல்பனா கொதித்தது அவருக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான கசப்பை வெளிக்காட்டியது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஆய்வுசெய்த மேயர், சிலர் அங்கிருந்து காயலான் பொருள்களை அனுமதி இல்லாமல் அள்ளிச்செல்வது குறித்து அதிகாரியிடம் சரமாரிக் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ வெளியானதையடுத்து, ‘துணை மேயர் மற்றும் சொந்தக் கட்சி கவுன்சிலர்களுக்கு எதிராக அரசியல் செய்கிறார் கல்பனா’ என தி.மு.க-விலிருந்தே புகைச்சல்கள் கிளம்பின.

இதைத் தொடர்ந்து, ‘தி.மு.க கவுன்சிலர்கள், ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராகப் பொதுமக்களைப் புகார் சொல்லவைத்து செய்தி வெளியிடும்படி’ மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார், யூடியூப் செய்தியாளர் ஒருவரிடம் பேசுவதாக ஆடியோ ஒன்றும் வெளியாகி, பரபரப்பைப் பற்றவைத்தது.

கல்பனா
கல்பனா

இது குறித்துப் பேசும் தி.மு.க கவுன்சிலர்கள், “மேயர் கல்பனா யாரையும் மதிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் அசோக் குமார் பெயரைச் சொல்லியே மிரட்டுகிறார். மாநகராட்சி நிர்வாகத்தில், மேயரின் கணவர் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதற்கு, சமீபத்தில் வெளியான ஆடியோவே சாட்சி” என்றனர்.

கோவை மாமன்ற அ.தி.மு.க தலைவர் பிரபாகர், “வெள்ளலூர் பிரச்னையில், ‘தனக்கு வராமல் துணை மேயர் உள்ளிட்ட சில தி.மு.க கவுன்சிலர்களுக்கு மட்டும் கமிஷன் பணம் செல்கிறதே’ என்ற கோபத்தில்தான் மேயர் ஆய்வுசெய்தார். ரோடு, குப்பைப் பிரச்னைகளையெல்லாம் விட்டுவிட்டு, எப்படியெல்லாம் பணத்தைச் சுருட்டலாம் என்பதில்தான் தி.மு.க-வினரின் கவனம் இருக்கிறது” என்றார் கொதிப்பாக.

நம்மிடம் பேசிய மாநகராட்சி அதிகாரிகள், “கோவை மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதைப் பற்றியெல்லாம் மேயர் ஒருநாளும் அதிகாரிகளிடம் ஆலோசித்தது இல்லை. ஆனால், மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் அமைச்சர் நேரு படத்துடன், செந்தில் பாலாஜி படம் போட வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்கிறார். அவரின் கணவரும் அதிகாரிகளை அழைத்து உத்தரவு போடுகிறார்” என்றனர்.

பிரபாகர்
பிரபாகர்

இதையடுத்து மேயர் கல்பனாவிடம் விளக்கம் கேட்டுப் பேசியபோது, “அனைத்துக் குற்றச்சாட்டுகளும் 100% பொய். என்னைவிட வயது குறைந்த அதிகாரியைக்கூட மரியாதையாகத்தான் பேசுகிறேன். செந்தில் பாலாஜி கோவைக்குப் பொறுப்பு அமைச்சராக வந்திருக்கிறார், அவ்வளவுதான். மற்றபடி அவர் சொல்லியோ, அசோக் அண்ணன் சொல்லியோ இங்கே எதுவும் நடக்கவில்லை. கடந்த மூன்று மாதங்களாக என் கணவரும்கூட என்னுடன் எங்கும் வருவதில்லை. இந்த நிலையில், யாரோ அவரைப்போல மிமிக்ரி ஆடியோ தயார்செய்து, அதை மக்களிடையே பரப்பியும்வருகின்றனர். இது குறித்து விரைவில் போலீஸில் புகாரளிக்கவிருக்கிறேன்” என்றார்.