காந்தி தற்கொலை தொடங்கி பெண்ணடிமை வரை... சி.பி.எஸ்.இ-யில் தொடரும் சர்ச்சை கேள்விகள்!

இந்தியாவில் எந்த இடத்தில் மக்கள் மதம் சார்பான குறியீடுகளை வெளிப்படுத்துவார்கள்
சமீபத்தில், சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வில் ‘குடும்ப ஒழுக்கம்’ என்ற தலைப்பில் ‘முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில் தற்போது அவ்வாறு இல்லை’ என்கிறரீதியில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று, தேசிய அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்தக் கேள்வி நீக்கப்பட்டுவிட்டது என்று சி.பி.எஸ்.இ அறிவித்த நிலையில், “சமீபகாலமாக இப்படியான சர்ச்சைக் கேள்விகள் அரசுத் தேர்வுகளில் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல. பாடத்திட்டம் மற்றும் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிப்புக்குழுவில் சிறந்த கல்வியாளர்கள் இடம்பெற்ற நிலை மாறி, ஆளும் அரசின் சார்பானவர்களும், ஒற்றை மதத்துக்கு ஆதரவானவர்களும் இடம்பெற்றதாலேயே இந்த அவலம் நீடிக்கிறது” என்று கவலை தெரிவிக்கிறார்கள் கல்வியாளர்கள். சமீபகாலமாக அப்படி இடம்பெற்ற சர்ச்சைக் கேள்விகள் என்னென்னவென்று தேடியபோது கிடைத்தவற்றில் சில...
1. காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?
2. டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் எந்தச் சமூக வகுப்பைச் சேர்ந்தவர்?
3. விராட் கோலியின் காதலி யார்?
4. பட்டியலின மக்கள் எந்த வகைப் பொருள்களால் வீடு கட்டுவார்கள்?
5. வர்ணாசிரம முறைப்படி மிகவும் தாழ்ந்த சாதி எது?
6. தலித் என்பவர்கள் யார்?
ஏ) வெளிநாட்டவர் பி) தீண்டத்தகாதவர்கள் சி) நடுத்தர வகுப்பினர் டி) உயர் வகுப்பினர்
7. முஸ்லிம்களின் பொதுப்பண்புகள் என்ன?
ஏ) பெண்களைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்
பி) சைவ உணவை மட்டும் உண்பவர்கள்
சி) நோன்பு காலத்தில் உறங்காதவர்கள்
டி) இவையனைத்தும்
8. பர்தா எந்த மதத்தினருக்கு உரியது?
9. ஒருவேளை உன் நண்பர்கள் இஸ்லாமியராக மதம் மாறினால், அவர்களுக்கு என்ன அறிவுரை கூறுவாய்?
10. பாரதிய ஜன சங்கம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, அதன் சின்னம் என்ன?

11. இந்தியாவில் எந்த இடத்தில் மக்கள் மதம் சார்பான குறியீடுகளை வெளிப்படுத்துவார்கள்?
ஏ) நீதிமன்றம், பி) காவல் நிலையம், சி) அரசுப் பள்ளி, டி) மதம் சார்ந்த இடம்
12. பெண்கள் சார்ந்த சீர்திருத்தங்களான விதவை மறுமணம், குழந்தைத் திருமண தடை சட்டத்தை இந்து மற்றும் முஸ்லிம் பழைமைவாதிகள் ஏன் எதிர்த்தனர்?
ஏ) இதனால் குடும்ப மதிப்புகள் தாழ்ந்துவிடும் மற்றும் இந்திய கலாசாரம் சீரழியும்.
பி) இவை பெண்களை ஆற்றல் மிக்கவர்களாக்கிவிடும்.
சி) இதனால் பெண்களின் கீழ்ப்படிதல் குறையும்.
டி) இதனால் ஆண்களின் நிலை தாழ்ந்துவிடும்.
13. எந்த நாட்டில் முஸ்லிம் அல்லாதோர் கோயில், தேவாலயம் போன்றவற்றைக் கட்டக் கூடாது?
14. மதச்சார்பின்மையினால் நமது கலாசார நடைமுறைகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் என்னென்ன?
15) குஜராத்தில் 2002-ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, எந்த அரசியல் கட்சி ஆட்சி செய்தபோது நடைபெற்றது?