Published:Updated:

ரசிகர்களை ஈர்ப்பதற்காகவா 100% இருக்கை அனுமதி... ரிஸ்க் எடுக்கிறதா அரசு? மருத்துவர்களின் அலர்ட்

திரையரங்கு
திரையரங்கு

தமிழகத்திலுள்ள திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கியிருப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று பல மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் தமிழகத்திலுள்ள திரையரங்குகள் மூடப்பட்டன. இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் 10-ம் தேதி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க, திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கப்பட்டபோதிலும் படம் பார்க்க வரும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்த காரணத்தால் 400-க்கும் அதிகமான திரையரங்குகள் மீண்டும் பூட்டப்பட்டன.

ஊரடங்கில் மூடப்பட்டிருந்த  திரையரங்கு
ஊரடங்கில் மூடப்பட்டிருந்த திரையரங்கு
ரா.ராம்குமார்

நடிகர் விஜய் நடித்த `மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் விஜய் மற்றும் `மாஸ்டர்’ திரைப்படக் குழுவினர், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து திரைத்துறையினர் மற்றும் தயாரிப்பாளர்களின் கஷ்டங்களைக் கூறி ,100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். இது `மாஸ்டர்’ திரைப்படக் குழுவினரின் கோரிக்கை மட்டும் இல்லை. திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கோரிக்கையாகவும் இருந்தது.

சிம்பு நடித்திருந்த `ஈஸ்வரன்’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நடிகர் சிம்புவும் 100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். பல தரப்பில் கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து, திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு திரைத்துறையினர் பலரும் நன்றி தெரிவித்துவருகின்றனர்.

மாஸ்டர் | ஈஸ்வரன்
மாஸ்டர் | ஈஸ்வரன்

இது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம், புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பரவிவருவது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வகை வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மைகொண்டது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்றளவில் எண்ணிக்கை குறைந்திருக்கிறதே தவிர முழுமையாக நீங்கவில்லை. இந்தியாவில் கொரோனாவை மிகச் சிறப்பாகக் கையாண்ட மாநிலம் தமிழகம் என்று பலராலும் பாராட்டப்பட்டது. அந்த அளவுக்கு இங்குள்ள மருத்துவ ஊழியர்களும், அரசு ஊழியர்கள் பலரும் தங்களின் இன்னுயிரையும், உழைப்பையும் கொடுத்து கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாடுபட்டிருக்கிறார்கள்.

இப்படிக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில்கொள்ளாமல், சிலரின் சுயநலத்துக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. திரையரங்கு முழுமையாகச் செயல்பட விஜய் மற்றும் சிம்பு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதால், அந்த நடிகர்களின் ரசிகர்களின் ஓட்டுக் கிடைக்கும் என்பதற்காக ஆளும்தரப்பினர் அனுமதி வழங்கியிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

டாக்டர் அரவிந்த் viral post
டாக்டர் அரவிந்த் viral post

கடற்கரை, கோயில், வணிக வளாகங்கள், சுற்றுலாத் தலம் என்று பல்வேறு இடங்களில் முழுமையான தளர்வு வழங்கப்பட்டபோது வராத எதிர்ப்பு ஏன் திரையரங்கு திறக்கும்போது மட்டும் வருகிறது என்று நடிகர்களின் ரசிகர்கள் தரப்பு கேள்வி எழுப்பியிருக்கிறது. பிரபலமான நடிகரின் படம் வெளிவரும்போது அவரின் ரசிகர்கள் திரையரங்குக்கு முன்னர் கூட்டம் கூடி, ஆட்டம் ஆடி பாலபிஷேகம், மேளதாளம் என்று ஆர்ப்பரிக்கும் கூட்டம் இருக்குமே... அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கேனும் கொரோனா இருந்தால் அது அந்த ஒட்டுமொத்த கூட்டத்தை அல்லவா பாதிக்கும் என்பதே அந்த கேள்விக்குப் பதிலாக இருக்கிறது. ஒரு திறந்த இடத்தில் கொரோனா வைரஸ் பரவும் சாத்தியக்கூறுகளைவிட, மூடிய அரங்கில் அதிவேகமாகப் பரவும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால்,``ஆற்றில் குளிக்கும்போதும், வெள்ளம் வந்து அடித்துச் செல்லுவதற்கும், குளத்தில் கல்லைக் கட்டிக்கொண்டு குதிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான் மற்ற இடங்களில் வழங்கப்பட்டிருக்கும் 100 சதவிகித அனுமதிக்கும் திரையரங்குகளில் வழங்கப்பட்டிருக்கும் 100 சதவிகித அனுமதிக்கும் உள்ள வித்தியாசம்" என்கிறார்கள் நிபுணர்கள்.

"100% தியேட்டர் திறப்பு அப்பட்டமான படுகொலை..." மருத்துவரின் கேள்விக்குத் தமிழக அரசின் பதில் என்ன?!

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கியதற்குப் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பொது சுகாதார நிபுணர் மருத்துவர் பிரதீப் கவுர் , ``சமூக இடைவெளி இல்லாமல் மூடிய இடங்களில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவக்கூடும். அது போன்ற இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது 2021-ம் வருடம் என்று நாம் நினைக்கலாம். அது வைரஸுக்குத் தெரியாது. வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டேதான் இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து
கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து
twitter

தொற்றுநோய் நிபுணர் கணேஷ்குமார் பரசுராமன், ``உலக அளவில் திறக்கப்பட்ட திரையரங்குகள் அனைத்திலும் இதுவரை 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்படத்தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்படுகிறது" என்று கூறினார்.

மேலும், ``திரையரங்குக்குள் உணவு விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. குறைக்கப்பட்ட இருக்கை அனுமதி, ஒவ்வொரு காட்சிக்கு இடையிலும் இருக்கைகளைச் சுத்தம் செய்தல், காற்று சுழற்சியை அதிகரித்து காற்றோட்டத்தை அதிகரித்தல் போன்றவற்றை அமெரிக்கா கடைப்பிடித்து திரையரங்குகளைச் செயல்படுத்திவருகிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

"100% தியேட்டர் திறப்பு அப்பட்டமான படுகொலை..." மருத்துவரின் கேள்விக்குத் தமிழக அரசின் பதில் என்ன?!

சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி இது குறித்து கூறுகையில், ``திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது தவறான செயல். கொரோனா பரவலைப் பொறுத்தவரை, திறந்தவெளிகளில் பிரச்னை இல்லை. திரையரங்கு போன்ற மூடிய இடங்களில்தான் வேகமாகப் பரவும். திரையரங்குகளைப் பொறுத்தவரை மூடிய மற்றும் காற்றோட்டம் இல்லாத கதவுகள் மூடப்பட்ட இடமாக இருக்கும். அதுவுமில்லாமல் இரண்டு மூன்று மணி நேரம் அங்கேயே இருக்க வேண்டியிருக்கும். கொரோனா வைரஸைப் பொறுத்தவரை, காற்றோட்டமான இடங்களிலேயே ஆறடிவரை பரவக்கூடியது என்று கூறுகிறார்கள். அதிலும் காற்றோட்டம் இல்லாத இடம் என்றால்,18-20 அடி வரை பரவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் அது கொரோனா பரவ அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அது பெரும் ஆபத்தில் முடியும்." என்று கூறினார்..

மருத்துவர் புகழேந்தி
மருத்துவர் புகழேந்தி

தொடர்ந்து பேசிய அவர், ``திரையரங்குகளில் அனைவருமே பொது கழிப்பறைகளைத்தான் பயன்படுத்துவார்கள். அப்படித் தொற்று இருக்கும் ஒருவர் கழிவறையைப் பயன்படுத்துவதன் மூலம் அவர் மூலம் பலருக்கும் பரவும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் விசிலடிப்பார்கள், கத்துவார்கள் இது போன்ற செயல்களால் காற்றோட்டம் இல்லாத காரணத்தால் வைரஸ் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். அரங்குகளில்தான் நாம் காற்றை நன்கு உள்ளிழுத்துச் சுவாசிப்போம். அப்போது எளிதில் வைரஸ் பரவிவிடும். அது பெரும் ஆபத்தில் சென்று முடியும்" என்று கூறினார்.

``இன்று அனுமதி கேட்ட எந்த நடிகரும் படம் வெளியாகும் அன்று திரையரங்குக்கு வந்து ரசிகர்களோடு கூட்டமாக அமர்ந்து படம் பார்க்கப்போவதில்லை. அனுமதி வழங்கிய எந்த அரசியல்வாதியும் திரையரங்கு வந்து படம் பார்க்கப்போவதில்லை. ஒரு தரப்பினரின் சுயலாபத்துக்குப் பொதுமக்களை பலியாக்குவது எந்த வகையிலும் நியாயமில்லாத செயல். அரசு வழங்கிய அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும்’’ என்பதே மருத்துவ நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு