Published:Updated:

தாலி!

சம்பிரதாயமும் சட்டமும்...

தாலி... தற்போது தமிழகத்தின் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்று!

இந்து திருமணங்களில் தாலி மிக முக்கியமான சடங்காக இருக்கும் அதே நேரத்தில்தான், திருமணத்துக்குத் தாலி அவசியமில்லை என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு 46 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதாவது, மக்களது மத நம்பிக்கைகளையும் கொள்கை சார்ந்த நடவடிக்கைகளையும் எந்த வேறுபாடும் இல்லாமல் அவரவர் மனநிலைக்கு ஏற்ப ஏற்றுக்கொண்டு அமைதியாகப் பின்பற்றும் சமூகமாக தமிழ்நாடு இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போது தாலி பற்றிய ஒரு விவாதம் சர்ச்சை ஆகி, அது வெடிகுண்டு வீசும் அளவுக்குப் போயுள்ளது. தாலியை மத நம்பிக்கையாக சிலர் பின்பற்றியபோது, 'அது அடிமைச் சங்கிலி, அந்தச் சங்கிலி பெண்ணுக்கு மட்டும்தானா? ஆணுக்கு கிடையாதா?’ என்ற பெரியார் இயக்கத்தின் குரலும் தமிழகத்தில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

தாலி!

1958-ல் கவியரசு கண்ணதாசன், 'தமிழர்களின் வாழ்வில் தாலி கிடையாது’ என்று ஆணித்தரமாக வாதிட்டார். கண்ணதாசனின் கருத்தை முதுபெரும் தமிழறிஞரும் வரலாற்று ஆசிரியருமான மா.ராசமாணிக்கனாரும், அப்பாத்துரையும் ஆதரித்து அவர்கள் தங்கள் ஆய்வுகளின் மூலம் தமிழர்களின் வாழ்வில் தாலி அணியும் வழக்கம் கிடையாது என்று வாதிட்டனர். தாலிக்கு ஆதரவாகக் களம் இறங்கியவர் ம.பொ.சி. அவர் தாலி தமிழர்களின் அடையாளம்தான் என்று தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்தார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தாலி அணிந்திருந்தாள் என்றும், கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகி, தாலியைத் தவிர அனைத்து நகைகளையும் கழற்றிவிட்டார் என்றும் ம.பொ.சி சொல்லியிருந்தார்.

இதோ இப்போது மீண்டும் அதே விவாதம்!

''தாலி ஒரு எச்சரிகைக் கருவி!'

தாலியின் உண்மையான தாத்பரியம் பற்றி ஆன்மிகவாதி சேஷாத்திரிநாத ஸ்வாமிகளிடம் பேசினோம். ''தாலி என்பது ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவோ அல்லது  ஒரு பெண் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்பதை காட்டுவதற்காகவோ, ஒரு ஆட்டுக்கும் ஒரு நாய்க்கும் கட்டுவதைப் போன்ற சங்கிலி அல்ல. தாலியை அப்படிப் புரிந்துகொள்ளவும் கூடாது. கழுத்தில் தங்கம் இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆயுர்வேதம் சொல்கிறது. மேலும், ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி இருக்கும்போது, அவள் மாற்றானின் மனைவி என்று மற்றவர்களுக்கு உணர்த்துகிறது. அந்த உணர்த்துதல் பெண்ணுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது. அதுபோல, பெண்களின் அலங்காரத்தில் தாலியும் ஒரு அலங்காரம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய நிலைமையில் தாலிக்கான மரியாதை என்பது அறவே இல்லாமல் ஒழிந்துவிட்டது. மாற்றானின் மனைவி என்றால் விலகிச் சென்றது போன்ற உன்னதமான ஒரு காலம் இன்றில்லை. மேலும், ஒரு பெண்ணின் கழுத்தில் தொங்கும் தாலி, இன்று அதன் பொருளாதார மதிப்புக்காக களவாடப்படுகிறது. தாலியைப் பறித்துக்கொண்டு செல்பவர்கள் அதை காசாக மட்டுமே பார்க்கின்றனர். கௌரவமாகப் பார்ப்பதில்லை. அதனால் ஒரு காலத்தில் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பாக இருந்த தாலி இன்று ஆபத்தாக மாறி இருக்கிறது.

மேலும், தாலி கட்டினாலும் கட்டாவிட்டாலும் பதிவு செய்தால்தான், அது சட்டப்படி செல்லும் என்று சட்டமே கொண்டு வந்துவிட்டார்கள். அதுவும், செல்லும் திருமணம் என்றாகிவிட்டபின், தாலிக்கான மதிப்பு போய்விட்டது. அதைப்போல, ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறி மறுமணங்கள், விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் திருமணம் செய்வது போன்ற பழக்கங்கள் சாதாரணமாகிவிட்டன. அதனால் தாலிக்கான மரியாதையும் போய்விட்டது. இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும். ஏனென்றால் வாழ்க்கையில் மன அமைதி வேண்டுமென்றால், அதற்கு ஒழுக்கம் வேண்டும். அந்த ஒழுக்கத்துக்கு சில சட்டதிட்டங்கள் தேவை. அப்படியான சட்டத்திட்டங்களில் ஒன்றுதான் தாலி. வாழ்க்கைத் தவறாகப் போகும் நேரத்தில், எச்சரிக்கும் ஒரு கருவி தாலி. தாலியை அணிந்து கொள்வதில் என்ன சிரமம்? மிகவும் விலை உயர்ந்த செல்போன்களை இரண்டு கைகளிலும், கைகளுக்கு  ஒன்றாக வைத்துக்கொண்டு, படுக்கையறை, கழிப்பறை, உணவறை என்று எல்லா இடங்களுக்கும் சுமந்து கொண்டு திரிகிறோம். தாலியைச் சுமப்பது அவ்வளவு சிரமமான காரியம்கூட கிடையாது. ஆனால், இதை மட்டும் நாங்கள் சுமக்கமாட்டோம் என்றால் அது நல்லதல்ல!' என்றார் அவர்.

'தாலி என்பது அடிமைச்சின்னம்!’

திராவிடர் கழக பிரசார அணிச் செயலாளரும் வழக்கறிஞருமான அ.அருள்மொழி இதுபற்றி என்ன சொல்கிறார்? ''தாலி அணிதல் என்பது ஒட்டுமொத்த இந்து மக்களின் பழக்கவழக்கமாக முதலில் இருந்தது இல்லை. இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டுமே பழக்கத்தில் இருந்த ஒரு வழக்கம்.

தாலி!

வட இந்தியாவில், பெரும்பாலான இந்து மக்களிடம் இன்றைக்கும் தாலி அணியும் பழக்கம் கிடையாது. 'மங்கள் சூத்ரா’ என்ற தாலி அணியும் வழக்கம், அங்குள்ள ஒரு சில உயர் சாதியினரிடம் மட்டுமே உள்ளது. அதுபோல, மேற்கு வங்காளத்தில், இன்றைக்கும்கூட பெரும்பாலான இந்துக்களின் திருமண அடையாளம் என்பது, பெண்களின் தலை வகிட்டில் நீளமாக தீற்றப்படும் குங்குமமும், இரண்டு சிவப்பு நிற பீங்கான் வளையல்கள் மட்டும்தான். அவர்களும் இந்துக்கள்தான். இந்துக் கடவுள்களை வணங்குபவர்கள்தான். நிலைமை இப்படி இருக்கும்போது, தாலி அணிதல் என்பதை இந்துக்களின் பழக்கம் என்று சொல்வதும் இந்தியாவின் கலாசாரம் என்பதும் தவறான வாதம்.

சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் திருமணச் சட்டத்தில்கூட, அக்னி வளர்த்தலும், அதைச் சுற்றி எடுத்துவைக்கும் ஏழு அடிகளும் அப்போது சொல்லப்படும் மந்திரமும்தான் திருமண சடங்காக முன்வைக்கப்படுகிறது. அதிலும் தாலி பற்றிய வேறு எந்தக் குறிப்பும் இல்லை. தமிழர் வாழ்விலும் தாலி என்பது இருந்ததில்லை. அது எப்போது தமிழர்கள் வாழ்வில் வந்தது என்பதற்கும் சரியான ஆதாரமும் இல்லை. நம்முடைய சங்க இலக்கியங்களில்  'ஐம்படைத்தாலி’ என்று ஒரு தாலி சொல்லப்படுகிறது. ஆனால், அது குழந்தைகளுக்கு, அதுவும் ஆண் குழந்தைகளுக்கு கட்டப்பட்ட அரைஞாண் கயிறுதான். சிறிது காலம் முன்புவரை பரவலாக இருந்த இந்தப் பழக்கத்தை இப்போதும்கூட சிலர் பின்பற்றி குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு என்னும் ஐம்படைத்தாலி கட்டுகின்றனர். தமிழின் மிகப்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் கோவலன் கண்ணகிக்கு தாலி அணிவித்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக பின்னால், கண்ணகியைப் பற்றிச் சொல்லும்போது, மங்கல அணி என்று ஒரு இடத்தில் வருகிறது. ஆனால், அந்த மங்கல அணி தாலிதான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இங்குள்ள பல ஆதிகுடி மக்களிடம் தாலி அணியும் பழக்கம் இன்றும் இல்லை.  

தாலி!

தாலியைப்போல பெண்கள் காலில் அணியும் மெட்டியும், ஒரு காலத்தில் திருமணமான ஆண்களின் அடையாளமாகத்தான் இருந்துள்ளது. அதன் பிறகுதான் மெட்டி ஆண்களின் கால்களில் இருந்து பெண்களின் கால்களுக்கு மாற்றப்பட்டது. பிறகு பெண்களை அடிமைப்படுத்த தாலியை பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனை பெரியார் 1928-ம் ஆண்டிலேயே கண்டித்தார். சுயமரியாதைத் திருமணங்களை நடத்தினார். தாலி அணிந்தும் அணியாமலும் அவை நடைபெற்றன. சுயமரியாதைத் திருமணங்கள் 1968-ல் இந்து திருமணச் சட்டத்தோடு இணைக்கப்பட்டும்விட்டது. நிலைமை இப்படி இருக்கும்போது, சட்டத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை சட்டம் அளித்த உரிமையையொட்டி ஒரு விவாதம் நடத்துவதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் சட்டப்படி குற்றமாகும்!' என்று சொல்கிறார்.

தாலி குறித்த மோதல், கருத்து மோதலாக இருக்கட்டும். வெடிகுண்டுகள் இல்லாமல்!

ஜோ.ஸ்டாலின்

சட்டம் என்ன சொல்கிறது?

தாலி இல்லாமலே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டம் தமிழகத்தில் 1968-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தி.மு.க., ஆட்சியைப் பிடித்து அண்ணா முதலமைச்சரானதும், பெரியாரின் யோசனைப்படி அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை சட்டப்படி அங்கீகரிக்கப்படாத சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கொடுக்கப்பட்டு, இந்து திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தாலி அணிந்தோ அல்லது அணியாமலோ வெறும் மாலையை மட்டும் மாற்றிக்கொண்டோ அல்லது மோதிரத்தை மட்டும் மாற்றிக்கொண்டோ அல்லது இவற்றில் ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றியோ திருமணம் செய்துகொண்டு அதை முறையாகப் பதிவு செய்தால் அந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று இந்து திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது!

மாலதி - நாராயணன் வழக்கு!

2009-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு, மாலதி - நாராயணன் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாலதி - நாராயணன் இருவரும் காதலித்து, 1987-ம் ஆண்டு கோயிலில் வைத்து, மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தாலி கட்டிக் கொள்ளவில்லை. இந்த நிலையில், 1988-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பிரச்னை நீதிமன்றம் வந்தது. தாலி கட்டாததால் எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி எங்களுக்குள் திருமணம் நடந்தது உண்மை என்று சொல்லி வழக்கை நடத்தினார். இதில், 1994-ம் ஆண்டு தீர்ப்பளித்த கீழ் நீதிமன்றம், 'தாலி கட்டாமல், மாலை மாற்றினாலே திருமணம் செல்லும்’ என்று தீர்ப்பளித்தது. மணமகன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். அதில் தீர்ப்பளித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், 'திருமணத்துக்கு தாலி அவசியம் இல்லை. மாலை மாற்றிக் கொண்டாலே அது திருமணம்தான்’ என்று தீர்ப்பளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு