`வரிப்பிடித்தம்; அரசின் அறிவிப்பு எங்களுக்குப் பொருந்தாதா?’- அதிருப்தியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

ஊதியப் பிரச்னை காரணமாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்க இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை, தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. சமீபத்தில், மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு அறிவித்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் அது பொருந்துமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தங்களது உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
ஆனால், `நாம் தனியார் நிறுவனம், அரசின் அறிவிப்பு நமக்கு பொருந்தாது’ எனப் பதில் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். இதனால், கவலையடைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான இம்மாத சம்பளத்தில் ரூ.1,300 முதல் ரூ 1,500 வரை வரிப்பிடித்தம் செய்துள்ளனர். இதைக்கண்டு கோபமடைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்,`சிறப்புச் சம்பளமும் இல்லை; இதில், வரிப்பிடித்தம் வேறு செய்துள்ளீர்களா?’ எனக் கூறி அதிருப்தியில் போராட்டத்தில் இறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நம்மிடையே பேசிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர், ``ஒரு மாத சிறப்பு ஊதியம் எங்களுக்குக் கிடைக்குமா எனக் கேட்டோம். `உங்களுக்குக் கிடையாது’ என்று சொல்லிவிட்டனர். இப்போது சம்பளத்தில் வரிப்பிடித்தம் வேறு செய்துள்ளனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வருகிறோம். உயிரைப் பொருட்படுத்தாமல், இந்த வேலையைச் செய்கிறோம்.

பணிகள் முடித்து இரவு வீட்டிற்குச் செல்ல பயமாக உள்ளது. நமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அது நம் குடும்பத்தாரையும் பாதித்துவிடுமோ என்று அஞ்சி தனிமையில் வாழ்ந்து வருகிறோம். வருடா வருடம் சம்பளத்தில் வரிப்பிடித்தம் செய்வது வழக்கம். ஆனால், அதைக் கொரோனா பணியில் இருக்கும் இச்சமயத்தில் செய்வது சரியா?
ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும், அரசுக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் உள்ளது. அதைக் கொரோனா பணிக்காக பயன்படுத்துவதே இல்லை. காரணம், அந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாதம் 30,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிக்கொண்டு அதிகாரிகளைக் கையில் வைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனால், நாங்களோ 10,000 ரூபாய் சம்பளத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல், இரவு பகல் உழைத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எந்த வகையில் குறைந்துவிட்டோம்? பெரிய சலுகைகள் எங்களுக்கு வேண்டாம், கொரோனா காலகட்டம் முடிந்த பிறகு சம்பளத்தில் வரிப்பிடித்தம் செய்யலாமே என்றுதான் கேட்கிறோம். தமிழக அரசு எங்களின் நிலையை அறிந்து, நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்றார் அவர்.
இது தொடர்பாக, ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர், தன்னுடைய நிர்வாக அதிகாரி ஒருவரிடம் பேசும் ஆடியோ வெளியானது. அதில் பதிலளிக்கும் அந்த அதிகாரி, `அரசிடமிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை. அதனால்தான் வரிப்பிடித்தம் செய்தோம்’ என்கிறார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கொரோனா பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.