Published:Updated:

`அந்த 19 கோடிக்கு, பதில் சொல்லுங்கள் செங்கோட்டையன்?'  - ஆர்.டி.ஐ மூலம் வெளியில் வந்த `நீட்' கோல்மால் 

`அந்த 19 கோடிக்கு, பதில் சொல்லுங்கள் செங்கோட்டையன்?'  - ஆர்.டி.ஐ மூலம் வெளியில் வந்த `நீட்' கோல்மால் 
`அந்த 19 கோடிக்கு, பதில் சொல்லுங்கள் செங்கோட்டையன்?'  - ஆர்.டி.ஐ மூலம் வெளியில் வந்த `நீட்' கோல்மால் 

`அந்த 19 கோடிக்கு, பதில் சொல்லுங்கள் செங்கோட்டையன்?'  - ஆர்.டி.ஐ மூலம் வெளியில் வந்த `நீட்' கோல்மால் 

மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள வசதியாக 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். ' இந்தத் திட்டத்துக்காக 19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த அடிப்படையில் கணினி, புரஜக்டர்களை வாங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு அதிகாரிகளிடம் முறையான பதில் இல்லை' என ஆதங்கப்படுகிறார் ம.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன். 

மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக கல்வியாளர்கள் பலரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பிறகு, நீட் குறித்த கொந்தளிப்பு அதிகமானது. ஆனாலும், ' மருத்துவப் படிப்புக்கு நீட் கட்டாயம்' என்ற அறிவிப்பில் எந்த மாறுதலும் நடக்கவில்லை. அதற்கேற்ப, அரசுப் பள்ளி மாணவர்களும் தயாராகி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி மாதம் பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ' மத்திய அரசு நடத்தும் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்வதற்காக 412 பயிற்சி மையங்களை தொடங்க இருக்கிறோம். இதன்மூலம் 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் பலன் பெறுவார்கள். இந்தத் திட்டத்துக்காக அடுத்தாண்டு வழங்க வேண்டிய மடிக்கணினி, குறுந்தகடு போன்றவற்றை இந்த ஆண்டே வழங்க இருக்கிறோம்' என்றார். அமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு நீட் பயிற்சி மையங்களுக்கான பணிகள் வேகம் பெறத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கென வாங்கப்பட்ட உபகரணங்களின் பட்டியல் மற்றும் விலை போன்றவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டார் ம.தி.மு.க பிரமுகரான ஈஸ்வரன். இதற்குப் பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநர்(மின் ஆளுமை), ' திட்டத்துக்காக 19 கோடியே 78 லட்சத்து 93 ஆயிரத்து 224 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுவிட்டு, 'இதர தகவல்கள் இந்த அலுவலகத்தில் இல்லை' எனத் தெரிவித்துள்ளனர். 

ஈஸ்வரனிடம் பேசினோம். " நீட் தேர்வு மையங்களுக்கான உபகரணங்களை எந்த விவரக் குறிப்பின் (Specification) அடிப்படையில் வாங்கினீர்கள்? கருவிகளுக்கு எவ்வளவு செலவானது என்பன உள்பட ஏராளமான கேள்விகளைக் கேட்டிருந்தேன். ஆனால், திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையை மட்டும் குறிப்பிட்டுவிட்டு மற்ற எந்த விவரத்தையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கணிப்பொறி, புரஜக்டர் உள்ளிட்ட கருவிகளை எந்த விவரக்குறிப்பின் அடிப்படையில் வாங்கினார்கள் என்பதைக் கணக்கிட்டால்தான், நீட் பயிற்சி மையங்களுக்கு தரமான உபகரணங்கள் சென்றுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும். இந்த 19 கோடி ரூபாயும் ஊழல் என நாங்கள் அறிவிக்கவில்லை. விவரக் குறிப்பினைத்தான் கேட்கிறோம். இந்தப் பணத்தை இவர்கள் கையாளும் முறை பற்றியும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களும் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளில் நடந்து வருகின்றன. இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட பள்ளியின் மேனேஜ்மெண்ட் கமிட்டிக்குப் பிரித்து அனுப்ப உள்ளதாக சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். 

இதில் கருவிகள் வாங்குவதற்கென 6 கோடியே 60 லட்ச ரூபாயும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க 2 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளனர். இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபாயில் இருந்துதான் இந்த 8 கோடி ரூபாயும் செலவிடப்படுகிறது. பள்ளி மேனேஜ்மெண்ட் கமிட்டிக்கு நிதியை ஒதுக்கினாலும், காசோலை அதிகாரம் என்பது தலைமை ஆசிரியரிடம் உள்ளது. இங்குதான் வில்லங்கமே தொடங்குகிறது. மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், ' இந்தக் கம்பெனியிடம் இருந்துதான் கணினி, புரஜக்டர் வாங்க வேண்டும்' என அழுத்தம் கொடுத்துள்ளனர். அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வித் திட்டத்தில் கோலோச்சும் சில தொழிலதிபர்கள்தான், நீட் பயிற்சி மையங்களுக்கான உபகரணங்களையும் வழங்குகிறார்கள். சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை கொடுப்பதற்கு, தலைமை ஆசிரியருக்கே லஞ்சம் கொடுக்கின்றனர் இந்தத் தொழிலதிபர்கள். பல இடங்களில் தரமற்ற பொருட்களை விநியோகிக்கின்றனர். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் ஆய்வகக் கருவிகளில் பெரும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இதேபோல்தான், நீட் பயிற்சிக்கான உபகரணங்களிலும் நடக்கின்றது. 

தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்களுக்குக் கருவிகள் வாங்குவதை ஏன் ஒருங்கிணைந்த பர்சேஸாக அரசு நடத்தக் கூடாது? ஒட்டுமொத்தமாகப் பொருட்களை வாங்கும்போது விலையும் குறையும். தரமான பொருள்களும் கிடைக்கும். ஸ்கூல் கமிட்டிக்குக் கொடுப்பதன் மறைமுகமான ஊழல் அரங்கேறுகிறது. இதையெல்லாம் யார் கண்காணிக்கிறார்கள்? லோக்கல் பர்சேஸ் என்பதே ஊழலில் இன்னொரு முகம்தான். ' நீட் பயிற்சி வகுப்பு உபகரணங்களுக்கான விவரக் குறிப்பினை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்' என்றுதான் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்கிறோம். நாங்கள் கேட்ட தகவலுக்கு முறையான பதிலை அதிகாரிகள் தரவில்லை. அடுத்தகட்டமாக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். அப்படியும் கிடைக்கவில்லையென்றால் தகவல் ஆணையத்துக்குச் செல்வோம். எங்குமே நியாயம் கிடைக்கவில்லையென்றால் சட்டரீதியாகவே போராட இருக்கிறோம்" என்றார் உறுதியாக. 

நீட் பயிற்சி மையம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நம்மிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர், " அந்தந்த பயிற்சி மையங்களுக்குத் தேவையான பொருட்களை பள்ளியின் மேலாண்மை கமிட்டியே வாங்கிக் கொள்ளலாம் என்பது சிறந்த நடைமுறை. இதன்மூலம் எந்தவித குளறுபடிகளும் நடக்க வாய்ப்பில்லை. எஸ்.எஸ்.ஏ, ஆர்.எம்.எஸ்.ஏ திட்டங்களிலும் இதேமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது. திட்டத்துக்கான நிதியைப் பற்றித்தான் நாங்கள் தெரிவிக்க முடியும்? பொருட்களை வாங்குவது குறித்து தலைமை ஆசிரியர்தான் முடிவு செய்வார். இதில் எங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. கருவிகள் வாங்கியதில் எந்தப் பள்ளியாவது முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்றதோடு முடித்துக் கொண்டார். 
 

அடுத்த கட்டுரைக்கு