Published:Updated:

``அற நிலையத் துறையிடமிருந்து கோயிலைப் பறிப்பது தீ எரிவதை விட அபாயகரமான அரசியல்!’’ - சு.வெங்கடேசன்

``அற நிலையத் துறையிடமிருந்து கோயிலைப் பறிப்பது தீ எரிவதை விட அபாயகரமான அரசியல்!’’ - சு.வெங்கடேசன்
``அற நிலையத் துறையிடமிருந்து கோயிலைப் பறிப்பது தீ எரிவதை விட அபாயகரமான அரசியல்!’’ - சு.வெங்கடேசன்

பிப்ரவரி 2-ம் தேதி இரவு 10 மணியளவில் மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்கு கோபுரம் பகுதியிலுள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு கோபுரப் பகுதியிலுள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து அந்த மண்டபத்திலும் பரவியது. அந்த மண்டபத்தின் சில தூண்கள் இடிந்து விழுந்தன. இந்த தீ விபத்தில் 7,000 சதுர அடி பரப்புள்ள அந்த மண்டபம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மீனாட்சி அம்மன் கோயில் முழுக்கமுழுக்க காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள்  கடுமையான சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். அப்படியிருந்தும் இப்படியொரு விபத்து ஏற்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மின்கசிவு அல்லது கற்பூரம் கொளுத்தும்போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. உண்மையான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சூழலில் `இது சிலரின் சதியாக இருக்கும்’ என எச்.ராஜா சந்தேகப்படுகிறார்.

தீ விபத்துக்கான காரணங்களைத் தாண்டி வழக்கம்போல, பிரச்னையை வேறொரு சர்ச்சைக்குள் எடுத்துச் செல்லும் முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களும் கூட, இந்த விஷயத்தில் அக்கறைகொள்ள முக்கிய காரணம், பாதிப்படைந்த பல்லாண்டுகால சிற்பங்கள்.  தமிழ்ச் சமூகத்தில் பேணி பாதுகாகக்க வேண்டிய பல அரிய சிற்பங்களை, கோட்டைகளை நாம் கவனிக்க மறந்து அழித்துவிட்டோம். எஞ்சியிருக்கும் சில வரலாற்றின் சாட்சியாக இருப்பவை கோயில்களில் மட்டுமே உள்ளன. அவையும் இதுபோன்ற விபத்துகளால், விரிவாக்கப் பணிகளால் சிதைக்கப்படுபவது நிச்சயம் தடுக்க வேண்டியது. ஆனால், இந்த சம்பவம் அறநிலையத் துறை மீதான தாக்குதலாக மட்டுமே மாறியுள்ளது போல தோன்றுகிறது. ஜோதிடர்களோ டிவி சேனல் விவாதங்களில், ``இதுபோன்ற விபத்து ஏற்படும் என்பது முன்னாடியே தெரியும்"என்கிற தொனியில் பேசுகின்றனர். ஒருவேளை முன்பே அவர்களுக்கு தீ விபத்து குறித்து தெரிந்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாமே என எதிர்தரப்பினர் கருத்து தெவித்தனர்

மீனாட்சி அம்மன் கோயிலை நேரில் பார்வையிட்ட பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ``குரங்கு கையில் கிடைத்த மாலை போல அறநிலையத்துறையிடம் மாட்டிக் கொண்டுள்ளன தமிழகக் கோயில்கள். கோயிலின் சொத்து மதிப்புகளைக் கண்காணிகக்க வேண்டும். இது விபத்தா, சதியா என சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும்’’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தநேரத்தில் நாம் அறநிலையத்துறை குறித்து சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். நம் தமிழகத்திலுள்ள கோயில்கள் அனைத்துக்கும் சொந்தமாக அசையும், அசையா சொத்துகள் இருக்கின்றன. இவையனைத்தும் அந்தந்த பகுதிகளிலுள்ள தனியார் குருக்கள் வசமிருந்தன. அவர்கள்தான் அவற்றைப் பராமரித்து வந்தனர். அந்த மடாதிபதிகளுக்கும் அவர்களைச் சார்ந்த  சிலருக்குமான அதிகாரம் நிறைந்த ஒன்றாகவே கோயில்கள் இருந்தன.

இந்நிலையில், 1922-ம் ஆண்டு நீதிக் கட்சியின் ஆட்சியில், இந்து அறநிலையச் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, 1925-ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம்தான் தற்போது நம் அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் அறநிலையத்துறைக்கு முன்னோடியான ஒன்று. தற்போது அரசின் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல கோயில்கள் உள்ளன. பல்வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகிறது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு வருகிறது. எல்லாத் துறைகளிலும் விபத்துகள், ஊழல்கள் நடைபெறும்போது அதை எப்படி தடுப்பது என்பது பற்றிதான் விவாதங்கள் ஏற்படும். ஆனால், அந்தத் துறையே வேண்டாம் என்கிற ரீதியில் பேசவது எந்த விதத்தில் பயனுள்ளதாக அமையும்?

தீ விபத்து குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், ``கோயிலுக்குள் கடைகள் இருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. பூஜை செய்வதற்கும், வழிபடுவதற்கும்தான் கோயில் பிரகாரமே தவிர கடைகள் வைப்பதற்கு அல்ல. இதை எதிர்த்து நாங்கள் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளோம். கோயிலைச் சுற்றி திருவிழாக்கள் நடக்கும் வீதிகள் ஆக்கரமிக்கப்பட்டுள்ளன. அதைச் சரிசெய்ய வேண்டும். இந்த ஆக்கிரமிப்பு காரணமாகத்தான் தீயணைப்பு வண்டிகள் வர சிரமம் ஏற்பட்டது. பாதுகாப்பு விஷயத்தில் அறநிலையத் துறை அலட்சியம் காட்டுகிறது. எனவே, கோயில்களை எல்லாம் பக்தர்கள் ஓட்டு போட்டு திருக்கோயில் திருச்சபை  நிர்ணயிக்க வேண்டும். அதை அரசும் கவனிக்கலாம். இட ஒதுக்கீடும் அளிக்கலாம். ஆனால், அறநிலையத் துறை தேவையற்றது. தாஜ்மஹால் தீ பிடித்திருந்தால் நாடே பரபரப்பாயிருக்கும். ஆனால், மீனாட்சியம்மன் கோயில் பற்றி யாரும் கவலைப்படவில்லை. பா.ஜ.க அரசே இதைப் பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் வந்து விசாரித்திருக்க வேண்டும். உடனே இதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். இந்த விபத்துக்குப் பின்னால் சதியிருப்பதாக சந்தேகப்படுகிறேன்" என ஆதங்கப்பட்டிருந்தார். 

தமிழகத்தில் அறநிலையத் துறை அமைத்த வரலாறு குறித்தும், இந்த விபத்து குறித்தும்  திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டினிடம் பேசினோம். அவர் கூறியதாவது, ``1863-ம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி மத விவகாரங்களில் தலையிடுவதில்லை எனத் தெரிவித்து கோயில்களை தன் கட்டுப்பட்டிலிருந்து விலக்கிக் கொண்டது. அதன்பிறகு 1925 வரை கோயில்கள் அந்தந்த தனியார் குருக்கள் வசமிருந்தன. அப்போது ஏரளாமான ஊழல்கள் நடைபெற்றன. குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் வலுத்தது. கோயில் சொத்துகளுக்கு பாதுகாப்பில்லை என பகுத்தறிவாளர்கள் அல்ல, ஆத்திகர்களின் சபையான `தர்ம லக்ஷன சபை' யே அரசாங்கத்திடம் புகார் கொடுத்தது. அந்தப் புகார் அடிப்படையில்தான் 1922-ல் நீதிக் கட்சி ஆட்சியின்போது அறநிலையத் துறை கொண்டுவர முயற்சி நடந்தது. அதை சத்தியமூர்த்தி ஐயர் போன்றோர் அப்போது கடுமையாக எதிர்த்தனர். அந்தச் சட்டம் அப்போது வரவில்லை. மீண்டும் 1923-ல் நீதிக் கட்சி வெற்றி பெற்றபோது N.கோபால்சாமி அய்யங்காரை சிறப்புக் குழு உறுப்பினராக முதல்வர் பானகல் அரசர் நியமித்தார். அவர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் அறநிலையத் துறை அமைக்கப்பட்டது. நீதிபதி சதாசிவம் அய்யர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இப்படியாக, 1925-ம் ஆண்டு ஜனவரியில் அறநிலையத் துறை உருவானது. அதன்படி தற்போது அறநிலையத் துறையின் கீழ்  36,435 கோயில்களும், 56 மடங்களும், அந்த மடங்களின் கீழ் 47 கோயில்களும் உள்ளன. அதன் கீழ் பல கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகள் உள்ளன. நிலம் மட்டும் 4.78 லட்ச ஏக்கர்கள் உள்ளன. ஆக, தற்போது கோயில்கள் மேல் ஏற்படும் அக்கறை பக்தி குறித்தோ, மதம் குறித்தோ அல்ல, பணம் குறித்தானது. கேரளாவில் சமீபத்தில் 30  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தோழர்களும், 6 தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தோழர்களும் அர்ச்சகராகியுள்ளனர். இந்த ஜனநாயகத் தன்மை நாடு முழுவதும் பரவி விடும் என்ற அச்சத்தில்தான் அறநிலையத் துறையை வேண்டாம் என்கிறார்கள்.

அது ஒட்டுமொத்த கோரிக்கை இல்லை. மிகச்சிறிய அளவிலான சிலரின் கோரிக்கை. அறநிலையத் துறையில் ஊழல் என்றால் அதை சீர்படுத்த வேண்டுமே தவிர, துறையையே தனியாரிடம் ஒப்படைப்பது சரியல்ல. இதேபோல சிதம்பரம் கோயிலும் அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு சிதம்பரம் கோயிலில் முழுக்கமுழுக்க தீட்சிதர்களின் ஆதிக்கம் உள்ளது. அங்கு தமிழில் பாடல் பாடிய ஒரு பெரியவரை அவர்கள் சர்வாதிகாரகப் போக்குடன் துன்புறுத்தினார்கள். அவர்கள் கையில் கோயில் நிர்வாகம் இருந்தபோது காட்டிய வருமானத்தைவிட, அறநிலையத் துறையினர் பலமடங்கு அதிக வருவாயைக் காட்டினர். ஆகவே, எல்லா கோயிலும் அறநிலையத் துறையின் வசம் இருப்பதுதான் முறையானது. தவறுகள் நடப்பின் அதைச் சரிசெய்ய வேண்டுமே தவிர, அவர்கள் கூறுவது போல தனியார் வசம் ஒப்படைத்தல் தவறானது’’ என்றார்.

இதுபற்றி எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான சு.வெங்கடேசனிடம் பேசினோம். அவர் கூறியதாவது,

"இதில் குறிப்பிட வேண்டிய முதல் விஷயம் கோயிலுக்குள் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்பதுதான். தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு அரசுகளுமே கடைகளை அகற்றுவதில் அக்கறை செலுத்தவே இல்லை. நிர்வாகிகள் பலமுறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு காரணம் அந்தக் கடைகாரர்களுடன் ஆளும் கட்சிகளுக்கு இருந்த தொடர்பு. முதல் வேளையாக கோயில் மற்றும் புதுமண்டபத்திலுள்ள கடைகளை அகற்ற வேண்டும். ஆனால், இதைப் பயன்படுத்தி கடைகளை அப்புறப்படுத்துவதைத் தவிர்த்து, அறங்காவல் நிலையத்திடமிருந்து கோயிலைப் பறிப்பது திட்டமிட்ட இந்துத்துவா வேலை. இது தீ எரிவதை விட அபாயகரமான அரசியல். இப்போதே  கோயில் கருவறைக்குள் அனைத்துத் தரப்பு மக்களும் செல்லமுடிவதில்லை. அறநிலையத்துறை வசம் கோயில் இருப்பதால்தான் சட்டமன்றத்தில் அதுகுறித்தான மானியக் 
கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் அதுகுறித்து பேசுகிறார்கள். கோலிலுக்குள் ஒரு  ஜனநாயகக் கலப்பாடு நிலவுகிறது.

தனியார் வசம் சென்றால் குறிப்பிட்ட சாதியினரின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் சென்றுவிடும். அனைத்து மக்களுக்கான உரிமை மறுக்கப்படும். வழிபாட்டுத்தலங்கள் முழுக்க தங்களுடைய அரசியல் களமாக்க முயற்சி செய்கிறார்கள். இந்த செயல்களுக்கெதிராகத்தான் தமிழகத்தின் சமூக சீர்திருத்தத் தலைவர்கள் போராடினார்கள். எல்லா சாதியினரும் கோயிலுக்குள் நுழையலாம் என்ற உரிமையைப் போராடிப் பெற்றுக் கொடுத்தார்கள். இது மீண்டும் வரலாற்றை பின்னோக்கி கொண்டு செல்லும் முயற்சி. பிரிட்டிஷ் அரசு சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மட்டுமே  நேரடியாக நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. கோயில் குறிப்பிட்ட சமூகத்தின் கையில் இருந்ததை, நிர்வாகக் குழு அமைத்து அதனிடம் ஒப்படைத்தனர். அறநிலையத் துறையில் சீர்கேடுகளைத்தான் சரிசெய்ய வேண்டுமே தவிர, அந்தத் துறையை அல்ல" என்றார்.

மக்கள அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது நிர்வாகத்தின் கடமை. அதேசமயம் வழிபாட்டுத் தலங்களை வியாபாரத் தலமாக்கும்  செயல்களையும் சரிசெய்ய வேண்டும். அதைவிடுத்து அரசிடமிருந்து கோயிலை தனியார்களிடம் ஒப்படைப்பது, பிற்போக்குத் தனமான தவறான செயலாகவே முடியும் என்ற கருத்தையே பலரும் முன்வைக்கிறார்கள்.