Published:Updated:

'ஜெயலலிதா படத்திறப்பு... சபாநாயகர் முறைகேடு?!' - சுட்டிக்காட்டுகிறார் ஜெ.அன்பழகன்

'ஜெயலலிதா படத்திறப்பு... சபாநாயகர் முறைகேடு?!' -  சுட்டிக்காட்டுகிறார் ஜெ.அன்பழகன்
'ஜெயலலிதா படத்திறப்பு... சபாநாயகர் முறைகேடு?!' - சுட்டிக்காட்டுகிறார் ஜெ.அன்பழகன்

'ஜெயலலிதா படத்திறப்பு... சபாநாயகர் முறைகேடு?!' - சுட்டிக்காட்டுகிறார் ஜெ.அன்பழகன்

ட்டசபையில் ஜெ.படத்திறப்புக்கு முன்பும் பின்பும் தொடர்ச்சியாகத் தமிழக அரசியல் களம் சூடு பறக்கிறது.
'குற்றவாளியான ஜெயலலிதா உருவப்படத்தை சட்டசபையில் வைக்க அனுமதிக்கக் கூடாது' என்று நீதிமன்றத்தில், வழக்குத் தொடுத்திருந்தவர் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன். அவர் தற்போது, ''ஆட்சி முடியப்போகிற அவசரத்தில், நீதிமன்றத் தீர்ப்பைக்கூட எதிர்பார்க்காமல் அவசரம் அவசரமாக ஜெ. படத்தைத் திறந்திருக்கிறார்கள்'' என்று பத்திரிகையாளர்களிடையே பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் பேசினோம்....

'' 'ஆட்சி முடியப்போகும் அவசரத்தில் படம் திறக்கிறார்கள்' என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?''

''வருகிற 24 -ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினத்தில் ஜெயலலிதா படத்தை கெளரவமாகத் திறந்து வைத்திருக்கலாம்தானே...? ஏன் இப்போதே அவசரம் அவசரமாகத் திறந்திருக்கிறார்கள்? அடுத்ததாகப் படத்திறப்பு நிகழ்வில், தமிழக ஆளுநரும் கலந்துகொள்ளவில்லை. இந்த ஆட்சி சீக்கிரத்தில் முடியப்போகிற ஆட்சியாக இருக்கிறது என்பதை இதுபோன்ற சம்பவங்களே வெட்டவெளிச்சமாக்குகிறதே... 

இப்போது அவர்களுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை. 111 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவோடுதான் ஆட்சி செய்துவருகிறார்கள். இதற்கு இவர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்ததாக, 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். இதுகுறித்த வழக்கில், இன்னும் தீர்ப்பு வரவில்லை. எப்படியும் அந்த 18 எம்.எல்.ஏ-க்களும் இந்த ஆட்சிக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். எனவே, ஆட்சி நிலைத்து நிற்க எந்த வழியும் இல்லை. அதனால் அவசரகதியில் படத்திறப்பை நடத்தியிருக்கிறார்கள்.... அவ்வளவுதான்!''

''ஜெ.படத்திறப்புக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், விஜயதாரணி எம்.எல்.ஏ ஆதரவு தெரிவித்துள்ளாரே...?''

''அதுபற்றி நீங்கள் தமிழக காங்கிரஸ் தலைவரிடம்தான் கேட்கவேண்டும்''

''ஜெ. படம் திறப்பு பெண்களுக்கான பெருமை, ஜெ. படத்தைச் சட்டமன்றத்தில் மட்டுமல்ல... நாடாளுமன்றத்திலும் திறக்கவேண்டும் என்றெல்லாம் அமைச்சர்கள் பேசிவருகிறார்களே...?''

''கட்சியினுடைய தொண்டர்கள் தலைவரை வாழ்த்துவதில் நாங்கள் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. அவர்களது சொந்தச் செலவில், வீட்டுக்கு வீடுகூட ஜெயலலிதா படத்தைக் கொடுக்கட்டும். நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இப்போதுகூட அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் ஜெ. சிலை திறப்பு விழா நடத்தப் போகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே... 

உச்ச நீதிமன்றமே குற்றவாளி என்று தீர்ப்பளித்துவிட்ட ஒருவரது படத்தை சட்டமன்றத்தில் திறந்துவைப்பதென்பது தார்மிக அடிப்படையில் சரிதானா என்றுதானே கேட்கிறோம். 'படம் வைப்பதில் தவறில்லை' என்ற உத்தரவை நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட பிறகு, ஐ.நா மன்றத்தில் கொண்டுபோய்கூட ஜெயலலிதா படத்தை வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் தடை ஏதும் சொல்லமுடியுமா என்ன?''

''தார்மிக அடிப்படையிலான உங்களது கேள்விக்கு, நீதிமன்றமும் சட்ட ரீதியாக எவ்விதத் தீர்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?''

''அதைத் தெரிந்துகொள்வதற்காகத்தான் நாங்களும் வழக்குத் தொடுத்திருக்கிறோம். சட்ட ரீதியில் எவ்விதத் தடையும் இல்லை என்ற காரணத்தால்தான் ஆளுங்கட்சியினர் இன்றைய தினம் படத்திறப்பு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். தார்மிகத்தை மீறிய இந்தச் செயல், வரப்போகும் காலங்களில் தவறானதொரு முன்மாதிரியை ஏற்படுத்திவிடும். எனவே, நீதிமன்றம்தான் இவ்விஷயத்தில் சரியான தீர்ப்பைக் கொடுக்கவேண்டும். இன்றைய தினமே இவ்வழக்கில் நல்லதொரு முடிவு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாங்கள் ஏற்கெனவே தொடுத்திருந்த வழக்கில், மனுதாரராக இருக்கும்  ட்ராஃபிக் ராமசாமி உடல்நிலை சரியில்லை எனக் கூறி, வழக்கைத் தள்ளி வைக்கக் கோரியிருக்கிறார். இதையடுத்து வழக்கும் வருகிற 16-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அந்த வழக்கின் முடிவு என்னவென்பதைத் தெரிந்துகொண்டு படத் திறப்பு விழாவை நடத்தாமல், அவசரமாக நடத்தி முடித்துவிட்டார்கள்.''

''அப்படியென்றால், படத்தைத் திறந்துவைத்த சபாநாயகரின் செயல்பாடு முறைகேடானது என்கிறீர்களா?''

''இதுகுறித்தும் இன்றைய தினம் புதிதாக ஒரு வழக்குத் தொடுத்திருக்கிறோம். அதாவது, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்காமல், படத்திறப்பு விழாவை நடத்தியது முறைகேடு எனச் சொல்லி தனி வழக்காகப் புதிய வழக்கு ஒன்றினையும் நீதிமன்ற அனுமதியோடு பதிவு செய்திருக்கிறோம். விரைவில் நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும்!'' 

அடுத்த கட்டுரைக்கு