Published:Updated:

''கடவுளை வாழ்த்திய அதே மேடையில், 'கடவுள் இல்லை' என்றவர் பெரியார்!'' - வழக்கறிஞர் செ.துரைசாமி

த.கதிரவன்
''கடவுளை வாழ்த்திய அதே மேடையில், 'கடவுள் இல்லை' என்றவர் பெரியார்!'' -  வழக்கறிஞர் செ.துரைசாமி
''கடவுளை வாழ்த்திய அதே மேடையில், 'கடவுள் இல்லை' என்றவர் பெரியார்!'' - வழக்கறிஞர் செ.துரைசாமி

'காஞ்சி சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றிருக்கிறார்' என்று சங்கரமடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதேவேளையில், ''தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்ததாக விஜயேந்திரர் மீதான புகாரில், முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்'' எனக் காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திரர் (அன்றைய இளைய மடாதிபதி), தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல், இருக்கையிலேயே அமர்ந்திருந்தார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் விஜயேந்திரரின் செய்கையைக் கண்டித்துக் கண்டனப் போராட்டங்களை நடத்தினர். ஊடகத்திலும் இதுகுறித்தச் செய்திகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டன. 

இந்நிலையில், 'தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக்கோரி தந்தை பெரியார் திராவிடக் கழத்தின் துணைத் தலைவர் செ.துரைசாமி, சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனாலும் நடவடிக்கை ஏதும் இல்லாததால், 'இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும்' எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார் செ.துரைசாமி. இந்த வழக்கில்தான் தற்போது, 'காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசும் வழக்கறிஞர் செ.துரைசாமி, ''தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தேசிய கீதத்துக்கு இணையானது. 1971 ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு, 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தேசிய கீதத்துக்கு இணையாக மரியாதை அளிக்கப்படவேண்டும்' எனக்கூறி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற தமிழ் - சம்ஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா என்பது தனியார் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிதான் என்றாலும்கூட, அந்த விழாவில் தமிழக ஆளுநர் கலந்துகொண்டுள்ளார் என்கிறபோது அது அரசுவிழாவாகத்தான் கருதப்படும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்டபோது ஆளுநரும் அவையோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர். ஆனால், விஜயேந்திரரோ இருக்கையில் அமர்ந்திருந்தவாறே, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்திருக்கிறார். இது தேச விரோத நடவடிக்கையின் கீழ் வருகிறது. 

'தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது, விஜயேந்திரர் தியானத்தில் அமர்ந்திருந்தார்' என சங்கர மடம் விளக்கம் சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். அதே விழாவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செய்கிற விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது மட்டும் தியான நிலையில் அமர்ந்திருந்தார் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், கொள்கைக் கோட்பாடுகள் என முரண்பட்டு நின்றாலும்கூட, பொது இடங்களில், சபை நாகரிகம், மரபு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.... 

 1958 ம் ஆண்டு, சட்டக் கல்லூரியில் முதன்மை இயக்குநராக இருந்த ஜஸ்டிஸ் ஏ.எஸ்.அய்யர், பெரியாரை சிறப்பு விருந்தினராக அழைத்துவந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசவைத்தார். அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. எழுந்து நிற்கமுடியாத உடல்நிலையில் பெரியார் இருந்தபோதும்கூட, தனதருகில் உள்ள இருவரின் உதவியோடு சிரமப்பட்டு எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்த முயன்றார். இதனை பார்த்த, ஏ.எஸ்., 'வயதான நீங்கள் எழுந்து நிற்க வேண்டியதில்லை ஐயா' என்று சொன்னார். ஆனாலும் தேசிய கீதம் முடியும் வரையிலும் நின்று மரியாதை செய்த பெரியார், 'தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும் என்பது நாட்டினுடைய சட்டம். எனவே, இது நான் நாட்டுக்குச் செய்யும் மரியாதை' என்று விளக்கமும் சொன்னார். 

இதுமட்டுமல்ல.... பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அப்போதெல்லாம் கடவுள் வாழ்த்துதான் முதலில் இசைக்கப்படும். அப்போதெல்லாம், 'கடவுள் வாழ்த்து'க்கு எழுந்து நின்று உரிய மரியாதை செலுத்துவார் பெரியார். பின்னர் அதே விழாவில், 'கடவுள் இல்லை' என்ற தனது கொள்கைக் கோட்பாடுகளை இரண்டு மணி நேரம் எடுத்துச்சொல்லிப் பேசுவார். ஆக, பொது நிகழ்வுகளில், அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம்தரக் கூடாது. சபை நாகரிகம், மரபு என்னவோ அதனைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில், மரபுகள்தான் சட்டமாகின்றன.

'தேசிய கீதத்துக்கு இணையாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் மரியாதை அளிக்கப்படல் வேண்டும்' என்ற அரசாங்க உத்தரவை விஜயேந்திரர் மீறியிருப்பதால், இவ்வழக்கு தேச விரோத நடவடிக்கையின் கீழ் வரும் (Prevention of Insults to National Anthem). புகார் நிரூபிக்கப்பட்டால், விஜயேந்திரருக்குக் குறைந்தது 3 வருட சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது'' என்கிறார்.

இவ்வழக்கு விஷயங்கள் குறித்து, காஞ்சி சங்கர மடத்தின் கருத்தினை தெரிந்துகொள்ளும் நோக்கில், மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயரிடம் பேசினோம்... ''வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளபோது, இதுகுறித்து எந்தத் தகவல்களையும் நாங்கள் தெரிவிக்க விரும்பவில்லை'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.