Published:Updated:

`சொகுசு விடுதியாகும் புழல் சிறை!' என்ன நடக்கிறது உள்ளே?

`சொகுசு விடுதியாகும் புழல் சிறை!' என்ன நடக்கிறது உள்ளே?
`சொகுசு விடுதியாகும் புழல் சிறை!' என்ன நடக்கிறது உள்ளே?

சொகுசு விடுதியாகும் புழல் சிறை

மிழகத்தில் உள்ள எட்டு மத்திய சிறைச்சாலைகளில் பெரிய சிறை ஒன்று இருக்கிறதென்றால், அது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் சிறைதான். 212 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் விசாரணைக் கைதிகள் 1,250 பேர் வரை அடைத்து வைக்க முடியும். அதேபோல தண்டனைக் கைதிகளும் 1,250 பேர் வரை அடைத்து வைக்கமுடியும். பெண்கள் சிறையில், 1,200 பேர் வரை தங்க வைக்கும் இட வசதி கொண்டது. மொத்தம் 4,200 பேர் வரை தங்கும் அளவுக்கு இட வசதி கொண்டது புழல் சிறை. விசாரணைக் கைதிகள் என்றால், 24 அடி நீளம் 40 அடி அகலம் கொண்ட ஓர் அறையில் இருபது நபர்களைத் தங்க வைப்பார்கள். அதே  விசாரணைக் கைதி வி.ஐ.பி என்றால், 5 அடி அகலம் 12 அடி நீளம் கொண்ட  ஓர் அறையில் ஒருவரை மட்டும் தங்க வைப்பார்கள். தண்டனைக் கைதிகளுக்கும் இதே இட வசதிதான்.

வெளிநாட்டு விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகளுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அதேபோல உள்நாட்டு கைதிகளுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். இதே நிலைதான் பெண்கள் சிறையிலும். புழல் சிறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் நடக்கும் வழக்கமான நடைமுறை பற்றி ஒரு சிறை அதிகாரியிடம் கேட்டதற்கு, ``தமிழகச் சிறைகளில் சாப்பாட்டு முறைகள் மாறிவிட்டன'' என்றார். தமிழகச் சிறைகளின் உணவுப் பட்டியலில் இப்போது `களி' இல்லை. காலையில் டிபன், பொங்கல், மதியம் சாப்பாடு, சாம்பார், மோர், ரசம், இரவு சப்பாத்தி. கைதி நோயாளியாக இருந்தால், அதற்கேற்ற உணவுகளும் வழங்கப்படுகின்றன. காலை ஆறு மணிக்குச் சிறைக்கதவுகள் திறக்கப்படும்.

வழக்கமான அன்றாடப் பணிகள் முடிந்த பிறகு கைதிகளைச் சிறையில் அடைக்கும் பணி மாலை ஐந்து மணிக்குத் தொடங்கி ஆறு முப்பது மணிவரை நீடிக்கும். பின்னர் கைதிகளின் சிறைக் கதவுகள் மூடப்படும். சிறைவாசிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். பெண்கள் சிறையினுள், ஆண் மருத்துவர்களோ அல்லது மற்ற ஆண்களோ  செல்ல அனுமதி கிடையாது. பெண்கள் சிறையைப் பொறுத்தவரை அனைத்துப் பணிகளையும் பெண் காவலர்களே மேற்கொள்வார்கள். ஆண்களுக்கான சிறைச் சட்டம் என்னவோ அதேதான் பெண்களுக்கும். ஒரு வழக்கில் விசாரணைக் கைதியாகவோ அல்லது தண்டனைக் கைதியாகவோ ஒருவர் சிறையில் அடைக்கப்படும் பொழுது சிறை நிர்வாகத்திடம் ஒரு தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுக்கலாம். கைதிகள் தனது உறவினர்களிடம் ஒரு நாளைக்கு ஒரு முறை அந்த போன் நம்பரில் பேசிக்கொள்ளலாம். இதற்கு அரசு, கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.

மேலும், புழல் சிறை பற்றிய சில விவகாரங்களை நம்மிடம் ரகசியமாகப் பகிர்ந்துகொண்டார் ஒருவர், ``ஆண்கள் சிறையில், குறிப்பாக விசாரணைக் கைதிகள் இருக்கும் அறையில் பெரும்பாலும் மோதல்களோ, சண்டைகளோ இருக்காது. பணம் வைத்துள்ள கைதிகள் தனக்குத் தேவையானதை வாங்கிக்கொள்வார்கள். குறிப்பாக சிகரெட் போன்ற சில போதை வஸ்துகளும் புழங்குகின்றன. தேவைப்படுபவர்கள் இதற்காக தனி அமைப்பாகச் செயல்படும் சில பேரிடம் கணிசமான பணத்தைக் கொடுத்தால், அவர்கள் கைதிகள் இருக்கும் இடத்துக்கே பத்திரமாக எடுத்துவந்து கொடுப்பார்கள். கைதிகளிடம் பணம் இருந்தால், `ஜெயிலுக்குள் இருக்கிறோம்' என்ற நினைப்பே வராத மனநிலையில் இருப்பார்கள். தண்டனைக் கைதிகளின் தினசரி வாழ்க்கை முறையே தனி விதம். பெரிய ரவுடிகள், கொலைக் குற்றவாளிகள், அரசியல் சார்ந்த வி.ஐ.பி-கள் என்றால், அங்கு அவர்களுக்குத் தனி மரியாதைதான். மது, நொறுக்குத் தீனி, சாப்பாடு வரை நன்கு கவனிக்கப்படுவதும் உண்டு. எல்லாம் ஒரு அட்ஜஸ்ட்மென்டில் ஓடுகிறது", என்கிறார்.

`அரசியல் வி.ஐ.பி-க்கள் என்றால், அவர்களின் கவனிப்பே தனிதான்' என்கிறார் திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்குமார். `இருப்பவனுக்கு ஒரு நீதி... இல்லாதவனுக்கு ஒரு நீதி என்பது சமூகத்தில் மட்டும் அல்ல... சிறைச்சாலைகளிலும் தொடர்கிறது' என்கிறார் அவர்.

``சிறையில் நடக்கும் விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள் இப்படிப் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விடுகின்றன. விவாகரத்து, ஒரு தலைக் காதல், குடும்ப வன்முறை, பாலியல் வழக்கு, வரதட்சணைக் கொடுமை அதன் தொடர்ச்சியாக நடக்கும் மரணங்கள் என இதுபோன்ற குற்றங்கள் களையப்பட வேண்டும் என்றால், சமூக சூழ்நிலை மாறவேண்டும். இதற்கு `அடிப்படைக் கல்வி, பொது அறிவு, சூழ்நிலைக் கல்வி'யைப் போதிக்கவேண்டும். சமூகம், உறவு முறை, பாலியல் கல்வி, நண்பர்களிடம் பழகும் முறைகள் போன்றவற்றைப் பிள்ளைகளுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் வழக்கறிஞர் விஜயலட்சுமி.

``2000-ஆவது ஆண்டிலிருந்து 2015 ம் ஆண்டு வரை புழல் உள்பட தமிழகச் சிறைகளில் இது வரை 1,354 பேர் இறந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீஸார் அடித்துக் காயப்படுத்தி சிறைக்கு அனுப்புவதால், சிறையில் சிகிச்சைப் பலனின்றி இவ்வாறு இறக்க நேரிடுகிறது. மேலும் தமிழகச் சிறைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் மற்றும் மனநல சிறப்பு மருத்துவர்கள் போதிய அளவுக்கு இல்லாததும் இதற்கான காரணம்'' என்கிறார் அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் கேசவன்.

``மத்தியச் சிறையில், ஒரு சீஃப் மெடிக்கல் ஆபீஸர், அறுவைச் சிகிச்சை  உதவி மருத்துவர்கள் ஏழு பேர், ஏழு செவிலியர்கள், ஆறு உதவியாளர்கள், நான்கு மருந்தாளுநர்கள், ஆய்வக உதவியாளர்கள் மூன்று பேர், மனநல சிறப்பு மருத்துவர்கள் இரண்டு பேர், மனநல ஆலோசகர்கள் இருவர், ஓர் இளநிலை உதவியாளர் என மொத்தம் 32 பேர் இருக்க வேண்டும். ஆனால், தமிழகச் சிறைகள் ஒவ்வொன்றிலும் 5 பேர் மட்டுமே உள்ளதாக வழக்கு ஒன்றில், அரசே நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. சிறையில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சையோ அல்லது தரமான மருந்து, மாத்திரைகளோ வழங்கப்படுவதில்லை. இதுவே சிறைவாசிகள் இறப்பதற்கு பெரும் காரணமாக அமைகிறது'' என்கிறார் வழக்கறிஞர் கேசவன்.

புழல் சிறை என்பது `ஊமை விழிகள்' படத்தில் வரும் மர்ம தீவாகவே காணப்படுகிறது. தமிழகச் சிறைகளில் அதிகரித்துவரும் லஞ்சத்தை தடுக்கவே முடியாது போல. கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி புழல் சிறைக் காவலர் பிச்சைக்கண்ணு என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். சிறைவாசிகளின் உறவினர்களிடம், பணம் வாங்கிக்கொண்டு சிறையினுள் வெளிப் பொருள்களைக் கொண்டுசெல்ல அனுமதித்தபோது பிச்சைக்கண்ணு கைது செய்யப்பட்டார். இதுபோல பல சிறைக்காவலர்கள் பணம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளுக்குத் தேவையானப் பொருள்களை சிறைக்குள் எடுத்துச்சென்று தருகிறார்கள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. இது தொடர்பாக பல புகார்கள் தினந்தோறும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது!

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை புழல் மத்திய சிறைக் கூடுதல் கண்காணிப்பாளர் சேகரிடம் பேசினோம், ``தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் இல்லை என்று மறுக்க முடியாது. இங்கு காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் அதிகப்படியான சோதனைகளுக்குப் பிறகே பொருள்களை உள்ளே அனுமதித்து வருகிறோம். இனி தவறுகள் நடக்காத அளவுக்குச் சிறை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது", என்றார்.

அடுத்த கட்டுரைக்கு