Published:Updated:

`மூன்று மாதங்களாகச் சம்பளம் இல்லை’ - கோவை வனத்துறை ஆர்.ஆர்.டி பிரிவினரின் சோகம்!

குருபிரசாத்
`மூன்று மாதங்களாகச் சம்பளம் இல்லை’ - கோவை வனத்துறை ஆர்.ஆர்.டி பிரிவினரின் சோகம்!
`மூன்று மாதங்களாகச் சம்பளம் இல்லை’ - கோவை வனத்துறை ஆர்.ஆர்.டி பிரிவினரின் சோகம்!

கோவை வனத்துறையில் ஆர்.ஆர்.டி ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக  ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

கோவை வனத்துறையில் ஆர்.ஆர்.டி(Rapid Response Team) என்ற பிரிவினர் கடந்த ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். மனித வன விலங்கு மோதல் அதிகமுள்ள கோவையில், வனத்துறையின் முக்கிய ஆபரேஷன்களுக்கு, பக்கபலமாக இருந்தது இந்தப் படைதான். மொத்தம் 10 பேர், அதில் சிலர் பட்டதாரிகள், திருமணம் ஆனவர்களும் இருக்கின்றனர். கோவையில் இவர்களின் பணி திருப்தியளிக்கவே, கூடலூரிலும் ஆர்.ஆர்.டி பிரிவினர் களமிறக்கப்பட்டனர்.

வேட்டைத் தடுப்பு காவலர்கள் செய்யும் அனைத்துப் பணிகளையும் இவர்கள் கவனித்து வருகின்றனர். அதனால்தான், வேட்டைத் தடுப்பு காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இவர்களும் எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவை வனத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "அரசு நிர்ணயித்ததைவிட அவர்களுக்கு குறைவான சம்பளம்தான் வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் 6,000 ரூபாய் வழங்கப்பட்ட சம்பளம், இப்போது 8,000 ரூபாயாக இருக்கிறது. ஆனால், அதுவும் சரியாக வழங்கப்படுவதில்லை. கடந்த மூன்று மாதங்களாக, அவர்களுக்கு சம்பளமே வழங்கப்படவில்லை. அட்வான்ஸ் கேட்டாலும் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கான ஊதியமும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதில்லை. இரவு பகல் பாராமல் வனத்தில் உழைக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு அடுத்தபடியாக அறிமுகப்படுத்தப்பட்ட, கூடலூர் ஆர்.ஆர்.டி பணியாளர்களுக்கு 10,000 சம்பளம் வழங்கப்படுகிறது" என்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷிடம் கேட்டபோது, "இந்தப் பணியாளர்கள் கடந்த ஆண்டு ஆர்.ஆர்.டி திட்டத்தில் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த ஆண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கான ஊதியம் தொடர்பாகக் கடந்த மாதம், மேல் அதிகாரிகளுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த மாத இறுதியில் அவர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படும்" என்றார்.