Published:Updated:

"தமிழ்க்குடிகளின் தொன்மை கீழடி..!" அமர்நாத் ஆய்வும்... அறிக்கையில் நடக்கும் அரசியலும்!

"தமிழ்க்குடிகளின் தொன்மை கீழடி..!" அமர்நாத் ஆய்வும்... அறிக்கையில் நடக்கும் அரசியலும்!
"தமிழ்க்குடிகளின் தொன்மை கீழடி..!" அமர்நாத் ஆய்வும்... அறிக்கையில் நடக்கும் அரசியலும்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு, தமிழரின் மிகப்பழைமையான வரலாற்றை உலகுக்கு மீண்டும் பறைசாற்றியது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வாக, இது கருதப்படுகிறது. கடந்த 2015ம் வருடம் ஜூன் மாதம், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வு பிரிவு கண்காணிப்பாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது. ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, 2017 ஜனவரியில் தொடங்கிய இரண்டாம் கட்ட ஆய்வின் முடிவில், மொத்தமாய் ஏறத்தாழத் 6000 தொல்பொருள்கள் கிடைத்தன. 

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதெனில், 'ஆதன்', 'உதிரன்', 'திசன்' எனத் தனிநபர்களின் பெயர்களைக் குறிக்கும் தமிழ்ப் பிராமி எழுத்துகள் பொறித்த மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. பளிங்கு, சூது பவளம், அகேட் மணிகள், எழுத்தாணிகள், இரும்பில் செய்த அம்புமுனைகள், தாமிரத்தாலான கண் மைத்தீட்டும் கம்பி, தந்தத்தில் செய்த தாயக்கட்டைகள், பச்சை மஞ்சள் நீலநிறக்கண்ணாடி மணிகள், சுடுமண்ணில் உருவாக்கப்பட்ட பொம்மைகள், முத்திரைக்கட்டைகள், உறைக்கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு அரியத் தொல்பொருள்கள் கீழடி ஆய்வில் கிடைத்துள்ளன. 

'சங்க காலத்தில் கட்டடங்களே இல்லை' என்ற கூற்றினை உடைத்தெறியும் வகையில், சுடுமண் குழாயால் செய்யப்பட்டக் கழிவுநீர்க் கால்வாய் வசதியுடன் கூடிய, பத்துக்கும் மேற்பட்ட செங்கற்கட்டடங்கள் இங்குக் கண்டறியப்பட்டுள்ளன. இவை, வளர்ச்சியடைந்த நகரம் இருந்ததற்குச் சான்றாக அமைகின்றன. இவ்வாறு கிடைக்கப்பெற்ற அரிதினும் அரியத் தொல்பொருள்களும், அகழாய்வுச் சான்றுகளும், சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள தொல்லியல் துறையின் பொறுப்பில் பாதுகாப்பாக அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. 

ஆய்வைத் தொடங்கி, ஆவணப்படுத்தும் வரைக்குமான இந்த மூன்றாண்டுகளிலும் பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்தன. ஆய்வைத் தொடர அனுமதி மறுத்தது, நிதி ஒதுக்கக் காலதாமதம் செய்தது, தொடக்கம் முதல் ஆய்வைக் கவனமாகக் கையாண்டு வந்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணனை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்தது, அடுத்தடுத்தகட்ட ஆய்வைத் தாமதப்படுத்தியது, மொத்த ஆய்வையும் ஒரேயடியாக மண்ணள்ளிப் போட்டு மூடியது என அதிகாரத்தின் அத்தனைக் கிடுக்குப் பிடிகளையும் தகர்த்து ஆதாரங்களாக எழுந்து நிற்கின்றன, கீழடிச் சுவடுகள்! கீழடி ஆய்வுக்காக எழுந்த முழக்கங்கள் நாடாளுமன்றம் வரைக்கும் எதிரொலித்ததை வரலாறு என்றென்றைக்கும் அசைபோட்டுக் கொண்டுதான் இருக்கும்.

இத்தனையும் கடந்து வந்த கீழடி ஆய்வில், மீண்டுமொரு புதிய குழப்பத்தைச் சமீபத்தில் ஏற்படுத்தியிருந்தது மத்திய அரசு. ஆய்வைத் தொடங்கி நடத்தி வந்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணனை, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கக் கோருவதற்கு மாறாக, அவரை மாற்றிவிட்டுப் புதிதாக நியமித்தவரை அறிக்கை தயாரிக்கச் சொல்லிவிட்டதோடு, அதுமட்டுமன்றி, தொல்பொருட்களைப் பத்திரமாகப் பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ள அறைகளைத் திறந்து எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டுச் 'சுதந்திரம்' வழங்கியுள்ளது, மத்திய அரசு. இதற்குத் தமிழ் எழுத்தாளர் அமைப்புகள் மற்றும் தமிழ் இயக்கங்கள் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தன.

இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சு.வெங்கடேசனும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், "குஜராத், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் 2014-ம் ஆண்டுமுதல் தற்போது வரையிலும் அகழாய்வு நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கெல்லாம் கிடைக்கப்பெற்ற பொருள்களைவிடவும் மிகவும் அதிகமான தொல்பொருட்கள் கிடைத்திருக்கும் கீழடி ஆய்வினைத் தடுப்பதில்தான் மத்திய அரசின் கவனம் இருந்தது வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது, ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கு உரியவரான அமர்நாத்துக்கு மாறாய்ப் புதிதாய் வந்த ஒருவருக்கு, அறிக்கையளிக்க உத்தரவிடுவது, உள்நோக்கமுடையது. எனவே, இதற்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், கைகோத்துத் தொன்மை நாகரிகச் சான்றுகளைக் காப்பதற்குத் தமிழ்ச்சமூகம் முன்வர வேண்டும்" எனவும் அழைப்பு விடுத்துள்ளது. தொல்லியல் துறையைச் சார்ந்தவர்களிடம் இதுபற்றிப் பேசியதில், "இத்துறையில், எவர் ஒருவர் ஆய்வை நடத்திப் புதியனவற்றைக் கண்டறிகிறாரோ, அவர்தான் அந்த ஆய்வுகுறித்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். இதுவே, நடைமுறை. ஆனால், கீழடியைப் பொறுத்தவரை இந்த நடைமுறைக்கு மாறாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனப் பொருமுகின்றனர்.

இந்நிலையில், கீழடியில் நடத்தப்பட்ட முதலாம் கட்ட ஆய்வின்போது, முதன்மை அதிகாரியாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் தந்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டாம் எனவும், மத்திய அரசு அறிக்கை கேட்டால், தமிழக தொல்லியல் துறையில் அனுமதி பெற்று அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

தமிழினத்தின் ஆகப்பெரும் சிறப்புகளுள் முதன்மையானது, அதன் தொன்மைப் பண்பு. மண்ணே நிரூபித்துக் காட்டும்போது, மனிதர்கள் யார், அதைத் தடுக்க? ஓர் இனத்தின் வரலாற்றை மறைத்தோ அழித்தோ இன்னொரு இனத்தின் பெருமையை உச்சரிக்கத் துணிவது, வரலாற்றுப் பிழை. வரலாற்றின் போக்கை மாற்றியமைக்கத் துடிப்போருக்கு அந்த வரலாறே பதில் சொல்லும்! ஆட்சி, அதிகாரம் கொண்டு அறத்தை ஒடுக்கி அரசியல் செய்வோருக்கு அவ்வறமே கூற்றாகும்!