Published:Updated:

`சமரசம் பேசச் சென்றவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குகிறார்கள்!’ - போலீஸார் மீது சென்னை லாக்நகர் இளைஞர்கள் புகார்

கா . புவனேஸ்வரி
`சமரசம் பேசச் சென்றவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குகிறார்கள்!’ - போலீஸார் மீது சென்னை லாக்நகர் இளைஞர்கள் புகார்
`சமரசம் பேசச் சென்றவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குகிறார்கள்!’ - போலீஸார் மீது சென்னை லாக்நகர் இளைஞர்கள் புகார்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள லாக்நகர் இளைஞர்களுக்கும் உணவகம் ஒன்றின் வேலையாட்களுக்கும் நடந்த பிரச்னையில் போலீஸார் லாக்நகர் இளைஞர்களைக் குறி வைத்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பலத்தகாயமடைந்த இளைஞர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

லாக் நகரைச் சேர்ந்த இளைஞர் பாபு (அம்மன் மெஸ்) உணவகத்தில் உள்ள வேலையாட்களிடம் குறும்பு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த உணவக வேலையாட்கள் பாபுவைத் தாக்கியுள்ளனர். இந்தத் தகவல் அறிந்து லாக்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள்  உணவகத்துக்கு வந்து சத்தம் போட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து உணவக உரிமையாளர்கள் கதவை மூடிவிட்டுப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலீஸ், அந்த இளைஞர்களை நடுரோட்டில் அடித்தது மட்டுமல்லாமல் திருவல்லிக்கேணி D1 காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கேமராக்களைத் திருப்பிவிட்டு, 8 இளைஞர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர்களைப் பார்க்கச் சென்ற லாக்நகர்வாசிகளையும் போலீஸார் திட்டித் தீர்த்ததோடு, அடித்து துவைத்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவன் கவித்ரன் பேசுகையில், `இந்தச் சம்பவத்தில் போலீஸாரிடம் சமரசம் செய்து  பாதிக்கப்பட்ட இளைஞர்களை மீட்கலாம் எனச் சென்ற, இந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், ஜகன் ஆகிய இருவரையும் அங்குள்ள காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் என்பவர் குறிப்பிட்ட சாதிப் பெரைச் சொல்லி `என்னிடம் வந்து சமாதானம் பேசுறீங்களா?’ எனத் தகாத வார்த்தைகளில் திட்டியிருக்கிறார். மேலும், கட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பைப்களைக் கொண்டு 20 காவலர்களை விட்டு மயங்கி விழும் வரை அவர்களை அடித்துள்ளனர். அதில், இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களில் ஜெய்வேல் என்ற 20 வயது இளைஞன் கேட்கும் திறனை இழந்துவிட்டதாகக் கூறுகிறார். மருத்துவ அறிக்கை வந்தால் மட்டுமே முழு விவரம் தெரிய வரும். இந்தநிலையில் தற்போது மருத்துவமனைக்கு வந்த காவல் ஆய்வாளர் மோகன்தாஸ், `ஒழுங்கு மரியாதையா நீங்களே வீட்டுக்க்ச் சென்றுவிடுங்கள்... அங்குள்ள போர்டை உடைத்துவிட்டு நீங்கள் உடைத்தாகக் கூறுவேன்...’ என மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்யத் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.