Published:Updated:

‘குடிசை மாற்று வாரிய இடத்தைப் பங்கு போட போட்டி’ - அ.தி.மு.க-வினரை சாடும் கே.என்.நேரு

‘குடிசை மாற்று வாரிய இடத்தைப் பங்கு போட போட்டி’ - அ.தி.மு.க-வினரை சாடும் கே.என்.நேரு
‘குடிசை மாற்று வாரிய இடத்தைப் பங்கு போட போட்டி’ - அ.தி.மு.க-வினரை சாடும் கே.என்.நேரு
குடிசை மாற்று வாரிய இடத்தைக் கைப்பற்றுவதில் திருச்சி ஆளுங்கட்சியினர் இடையே போட்டி நடப்பதாகக் குற்றம் சாட்டுகிறார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.
அ.தி.மு.க அரசின் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் ஆகியவற்றைக் கண்டித்து திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியின் பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திருச்சி மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சகிதமாக திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் மைக் பிடித்துப் பேசிய கே.என்.நேருவின் பேச்சு ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக இருந்தது. அவர் பேசும்போது, "அண்ணா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், இந்த ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என்று நடந்துகொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக திருச்சி ஸ்மார்ட் சிட்டி ஆகிறது என்று சொல்லிக்கொண்டே, மக்களுக்குத் தேவையான தண்ணீர், சாக்கடை, மின்வசதி, சாலை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாகவே திருச்சியில் புதிய பூங்காக்களை திறந்து வைக்கிறார்கள்.
நாங்கள் அரசாங்க அதிகாரிகளைக் குறை சொல்ல வேண்டும் என்று எண்ணவில்லை. எந்த வேலைகளைச் செய்தால் பணம் அதிகம் கிடைக்குமோ அந்த வேலைகளைச் செய்ய அமைச்சர்கள் அதிகாரிகளிடம் சொல்கின்றனர். அவர்களுக்கு இந்த அதிகாரிகள் தினந்தோறும் கப்பம் கட்டும் பணியைத் தவிர வேறு எந்தப் பணியையும் செய்வதில்லை.
தமிழத்தில் உள்ள தற்போதைய அனைத்து அமைச்சர்கள் மீதும் வழக்கு இருக்கிறது. ஆனாலும் அவர்கள் வருமானம் நிற்கவில்லை. திருச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை அபகரிக்க இந்த ஊரில் இருக்கும் பெரிய ஆளும் கட்சிக்காரர்கள் இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களிடம் தர வேண்டிய இடத்தைப் பெற்றுக்கொள்ள மூத்த முன்னோடி போட்டி போட்டுக் கொள்கிறார்.
இதை மாவட்ட ஆட்சியர் கவனிக்க வேண்டும் என்றவர், வழக்கமாகத் தி.மு.க-வினர் வைக்கும் பேனர்களை அ.தி.மு.க-வினர் கிழித்து வம்பு பண்ணுவதுதான் வழக்கம். ஆனால், இப்போது அ.தி.மு.க பேனரை அ.தி.மு.க-வினரே கிழிக்கும் நிலை உள்ளது. பதவியை எப்படித் தக்க வைத்துக்கொள்வது என போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
 தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது வெள்ளம் வந்தது, அப்போதுதான் தலைவர் கலைஞர் திருச்சியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாகத் தொட்டிப்பாலம் சாலை வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதன்பிறகு இனி எப்போதும் அதிக அளவில் வெள்ளம் வந்தால்  திருச்சிக்குள் வராது என்கிற நிலைமை உருவாக்கியுள்ளோம். ஆனால், திருச்சி காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் முக்கொம்பு அணை உடைந்து போனபோது அது வெளியேறிய தண்ணீர் முழுவதும் கடலுக்குச் சென்றுவிட்டது. கடலுக்குப் போன தண்ணீரைத் தேக்கி வைத்திருந்தால் கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் சென்று உணவு உற்பத்தி கூடியிருக்கும். நிலத்தடி நீர் உயர்ந்திருக்கும் விவசாயிகள் நன்றாக இருந்திருப்பார்கள். மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரைப் போல் மூன்று மடங்கு தண்ணீர் வெளியேறி கடலில் கலந்துள்ளதுதான் வேதனை.
ஹைட்ரோ கார்பன் திட்டம் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். ஆனால், மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத மத்திய அரசு, தற்போது 46 இடங்களுக்கும் மேலாக ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆதரவாகத்தான் டெல்டா பகுதியில் உள்ள கடைமடை பகுதிக்குத் தமிழக அரசு காவிரி தண்ணீரைத் திறந்து விடவில்லை. தண்ணீர் இல்லை என்றால் விவசாயிகள் விவசாயம் செய்ய மாட்டார்கள் என்பதனால் இப்படி அரசு நடந்து கொண்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், விவசாயிகள் மிகவும் நொந்து போய் உள்ளார்கள். பெல் தொழிற்சாலையைச் சுற்றி 575 கம்பெனிகள் உள்ளது. அதில் 375 கம்பெனிகள் மூடப்பட்டு 30,000 பேர் இழந்துள்ளனர்.
பணம் மதிப்பிழப்பு செய்ததற்குப் பின்னர் கம்பெனிகள் மூடப்பட்டதால் வேலைவாய்ப்புகள் இல்லை. இதுதான் இன்றைக்குத் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியது, இந்த ஆட்சியில் தான்.  தமிழகத்தில் வேறு எந்தப் பணிகளையும் கவனிக்காமல் பத்தாயிரம் கோடி வருமானம் வருமானால் அதில் தொடர்ந்து கமிஷன் எடுக்கலாம் என்று எட்டு வழிச் சாலையில் கவனத்தைச் செலுத்துகின்றனர். தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தால் சிறப்பான ஆட்சி அமையும். வரும் காலங்களில் எந்தத் தேர்தலாக இருந்தாலும் தி.மு.க-வை ஆதரித்தால் மக்களுக்கு நேர்மையான ஆட்சி தரும்" என்றார்.