Published:Updated:

``நிச்சயம் சபரிமலைக்குள் செல்வேன்!'' திரிப்தி தேசாய்

சபரிமலைக்கு எல்லா வயது பெண்களுக்கும் அனுமதி என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு, முழு ஆதரவைக் கொடுத்துவரும் `பூமதா ப்ரிகேட்ஜ்’,எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார், திரிப்தி தேசாய்.

``நிச்சயம் சபரிமலைக்குள் செல்வேன்!'' திரிப்தி தேசாய்
``நிச்சயம் சபரிமலைக்குள் செல்வேன்!'' திரிப்தி தேசாய்

``நான் கேரள விமான நிலையத்தில் இன்று காலை 4:30 மணிக்கு வந்து இறங்கினேன். ஆனால், என்னை கேரளாவுக்குள் நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தனர். காவல் துறையினர் என்னை மற்றொரு பாதையில் அழைத்துச்செல்ல முயன்றபோது, அவர்கள் அங்கும் நின்று தடுத்தனர். ஆனால், அவர்களைப் பார்த்து எனக்கு துளியும் பயம் இல்லை" என்று தீர்க்கமான குரலில் சொல்கிறார் திரிப்தி தேசாய்!

சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களுக்கும் அனுமதி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பைச் சமீபத்தில் வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு, முழு ஆதரவைக் கொடுத்துவரும் `பூமதா ப்ரிகேட்ஜ்”, (Bhumata Brigade) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார் திரிப்தி தேசாய். எதிர்ப்பாளர்களில் கூச்சலுக்கு மத்தியில் துணிவோடு, தெளிவான குரலில் தம் முடிவைத் தெரிவிக்கிறார் தேசாய். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பொது மேடைகளிலும் இந்த விவகாரத்தில் பெண்களுக்கு, தன் ஆதரவைக் தெரிவித்து வந்தவர், சில நாள்களுக்கு முன் `நவம்பர் 17-ம் தேதி சபரிமலைக்குச் செல்வேன்’ என்று அறிக்கை விடுத்தார்.

மேலும், அவர் தனக்கும் தங்களின் குழுவினருக்கும் கேரளாவில் பாதுகாப்பு அளிக்குமாறு கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதினார். அதில் திரிப்தி தேசாய், ``சில குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களும் ஐயப்பப் பக்தர்களில் சிலரும் நாங்கள் கேரளாவுக்கு வரும் வேளையில் அமைதியைக் குலைக்க வாய்ப்பிருக்கிறது. அந்தப் பழியை எங்கள் மீது போடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால், காவல்துறையினர், சபரிமலைக்குப் பெண்கள் செல்வதை எதிர்ப்பவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து, எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்களுக்குப் பல்வேறு வகையில் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவற்றில் ஒன்று, `நாங்கள் கேரளா விமான நிலையத்துக்கு வந்தவுடன், எங்கள் கால்களைத் தனியாக வெட்டிஎடுத்து, மீதமுள்ள எங்களின் சடலங்களை மகாராஷ்ட்ராவுக்கு அனுப்பிவைப்போம்” என்று கூறியுள்ளது. இது எங்களின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்நிலையில், எங்களுக்குக் கேரள அரசு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும், இந்தக் கடிதத்தில் திரிப்தி, தன் போக்குவரத்துச் செலவுகளையும் கேரள அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம், பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கேரள டி.ஜி.பி மற்றும் புனே காவல்துறை ஆணையர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 

இந்த நிலையில்தான், இன்று (வெள்ளிக்கிழமை) காலை கேரள விமான நிலையத்தில் வந்திறங்கிய திரிப்தி தேசாயிக்கு, கடும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதுகுறித்து அவரிடம் அலைபேசி வழியே பேசுகையில், ``எனக்குக் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு அளித்துவருகின்றனர். ஆனால், என்னை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள், ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று பயந்து வரவில்லை. இங்கிருக்கும் எந்த விடுதிகளிலும் எங்களைத் தங்க வைக்க மறுக்கின்றனர். எனக்கு இதைப் பற்றி எல்லாம் கவலையோ பயமோ இல்லை. ஆனால், `லா அண்ட் ஆர்டர்’ பிரச்னை வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், நான் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) காலை சபரிமலை கோயிலுக்குள் நிச்சயம் செல்வேன்!” என்று தீர்க்கமாகத் தெரிவிக்கிறார் திரிப்தி தேசாய்.

இந்நிலையில், சபரிமலை கோயிலுக்குள் நுழையும் சம்பிரதாயத்தையும், 41 நாள் விரத முறையை அவர் கடைப்பிடித்திருக்கிறாரா என்று எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஏற்கெனவே சபரிமலைக்குள் செல்லமுயன்ற ரெஹானா ஃபாத்திமா மீது வழக்கும், அதைத் தொடர்ந்து அவர் கேட்ட, முன் ஜாமீனை கேரள உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.