Published:Updated:

ரஃபேல் பேரம்... எது நிஜம்?

ரஃபேல் பேரம்... எது நிஜம்?
ரஃபேல் பேரம்... எது நிஜம்?

ரஃபேல் பேரம்... எது நிஜம்?

ரஃபேல் பேரம்... எது நிஜம்?

‘‘இந்தியாவின் பிரதமர் ஊழல் செய்திருக்கிறார் என நாங்கள் நம்புகிறோம். இந்த தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடரா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்திருக்கிறது. இந்திய இளைஞர்கள் மிகவும் நம்பிய நரேந்திர மோடி, நம் பாக்கெட்டுகளிலிருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து அனில் அம்பானியின் பாக்கெட்டில் வைத்துவிட்டார். தன் வாழ்நாளில் ஒரே ஒரு விமானத்தைக் கூட செய்திருக்காத அனில் அம்பானிக்கு போர் விமான ஒப்பந்தம் தரப்பட்டிருக்கிறது. இதுபற்றிக் கேட்டால் மோடி வாய்திறக்க மறுக்கிறார்’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம் சாட்டுகிறார்.

போபர்ஸ் ஊழலின்போது, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை நேரடியாகக் குற்றம் சாட்டின எதிர்க்கட்சிகள். அதன்பின் பிரதமர்கள்மீது நேரடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததில்லை. ‘தொழிலதிபர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்’ என்று புகார் கூறப்பட்டாலும், நரேந்திர மோடி தன் பொது வாழ்வில் ஊழல் குற்றச்சாட்டுகள் எதையும் சந்தித்ததில்லை. சொல்லப்போனால், அவரின் நான்கரை ஆண்டு கால அரசுகூட இப்படி ஒரு நெருக்கடியை எதிர்கொண்டதில்லை. ஆனால், ரஃபேல் போர் விமான பேரம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளும், அவற்றில் ஒன்றுக்குக்கூட பிரதமர் பதில் சொல்லாமல் இருப்பதும் இந்த அரசின்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கி யிருக்கிறது. 

ரஃபேல் பேரம்... எது நிஜம்?

கடந்த சில மாதங்களாகவே ரஃபேல் விவகாரம் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் பேசப்பட்டு வந்தாலும், இப்போது சூடுபிடித்திருக்கக் காரணம்... இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது பிரான்ஸ் அதிபராக இருந்த பிரான்ஸ்வா ஹோலாந்த், சில நாள்களுக்கு முன்பு போட்ட குண்டு. ‘‘இந்த ஒப்பந்தத்தின்படி டஸோ நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை இறுதி செய்தது இந்திய அரசுதான்’’ என்று அவர் கூறியதுதான் எதிர்க்கட்சிகள் இப்போது அனல் கக்கக் காரணம்.

ரஃபேல் ஜெட் போர் விமானத்தின் தரம் குறித்தும் திறன் குறித்தும் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், ரஃபேல் பேர விவகாரத்தில் ஆரம்பம் முதலே ரவுசு கட்டும் மர்மங்கள் ஏராளம். இவற்றில் எந்த மர்மத்துக்கும் மத்திய அரசு பதில் தர மறுப்பதுதான் சந்தேகத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

ரஃபேல் பேரம்... எது நிஜம்?

2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், இந்திய விமானப்படைக்கு 126 நவீனரக போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதில் ஐந்து நிறுவனங்கள் போட்டியிட்டன. 2012-ம் ஆண்டு டெண்டரை இறுதிசெய்தபோது, குறைந்தபட்ச விலையைக் குறிப்பிட்டிருந்தது பிரான்ஸ் நாட்டின் டஸோ ஏவியேஷன் நிறுவனம். 126 விமானங்களில் 18 விமானங்களை பிரான்ஸிலேயே தயாரித்து உடனடியாகத் தர வேண்டும் எனவும், மற்ற 108 விமானங்களை இந்தியாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கித் தரவேண்டும் எனவும் நிபந்தனை. வாங்கும் விமானங்களில் இந்தியாவுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும், ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு தொழில்நுட்பப் பரிமாற்றத்தைச் செய்யவேண்டும் எனவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சொன்னது. ஒவ்வொரு விமானத்துக்கும் 526 கோடி ரூபாய் என முடிவாகி, மொத்த ஒப்பந்தத் தொகை 7.75 பில்லியன் யூரோ என்று இறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து டஸோ ஏவியேஷன் நிறுவனமும், ஹெச்.ஏ.எல் நிறுவனமும் தொழில்நுட்ப ரீதியான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன. இதில் ஒரு முடிவை எட்டுவதற்கு முன்பாக, தேர்தல் வந்துவிட்டது. காங்கிரஸ் தோற்று, பி.ஜே.பி வென்றது. நரேந்திர மோடி பிரதமரானார்.

2015-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி நரேந்திர மோடி பிரான்ஸ் போனார். அந்த தினத்திலிருந்து தான் சர்ச்சைகள் தொடங்கின. பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஹோலாந்துடன் பாரிஸில் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ‘‘இந்தியா, 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும்’’ என மோடி அறிவித்தார். மொத்த ஒப்பந்தத் தொகை 7.1 பில்லியன் யூரோ. இந்த அறிவிப்புக்குப் பிறகே கேள்விகள் துரத்த ஆரம்பித்தன.

• 2012-ம் ஆண்டில் 126 விமானங்களை வாங்குவதற் காகப் போடப்பட்ட ஒப்பந்தம் என்ன ஆயிற்று? அதை யார் ரத்து செய்தது? இந்திய அரசா? பிரான்ஸ் அரசா? டஸோ ஏவியேஷன் நிறுவனமா? பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை யாருக்கு யார் கொடுத்தது?

• போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் குழு கூடி முடிவெடுக்க வேண்டும். கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் மோடி பாரிஸில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு இந்தியா திரும்பிய பிறகே அமைச்சரவைக் குழு கூடி இதற்கு ஒப்புதல் தந்தது. 2016 செப்டம்பரில்தான் ஒப்பந்தம் இறுதியானது. சுமார் 58,000 கோடி ரூபாய் ஒப்பந்தம். இதை, முறையான ஒப்புதல் இல்லாமல் மோடி ஏன் முன்கூட்டியே அறிவித்தார்?

ரஃபேல் பேரம்... எது நிஜம்?

• 126 விமானங்களை ஒவ்வொரு விமானமும் 526 கோடி ரூபாய் என வாங்குவதற்கு 2012-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. மோடி இதை மாற்றி 36 விமானங்கள் வாங்குவதாக அறிவித்தார். ஒவ்வொன்றின் விலையும் 1,670 கோடி ரூபாய். மூன்றே ஆண்டுகளில் மூன்று மடங்குக்கும் அதிகமாக விலை ஏன் உயர்ந்தது? ‘ஆயுதங்களைச் சேர்த்ததால் இந்த விலை’ என அரசு காரணம் சொல்கிறது. ஆனால், இதற்கு 36 விமானங்களுக்கும் சேர்த்தே 9,022 கோடி ரூபாய்தான் கூடுதலாக ஆகிறது. அப்படியானால், மற்ற தொகைக்கு என்ன கணக்கு?

• முந்தைய ஒப்பந்தத்தில் ‘இந்தியாவின் ஹெச்.ஏ.எல் நிறுவனத்துடன் தொழில்நுட்பப் பரிமாற்றம் செய்துகொள்ளப்படும்’ என விதி இருந்தது. மோடி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த விதி இல்லை. ‘‘இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் மூலம் இந்தியா போர் விமானங்கள் தயாரிக்கும் வல்லரசுகளில் ஒன்றாக மாறும் வாய்ப்பு இருந்தது. அந்த மகத்தான வாய்ப்பை இழந்துவிட்டோம். ‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கத்துக்கு எதிரானது இல்லையா இது?’’ என்கிறார்கள் இந்திய ராணுவ நிபுணர்கள்.

• இந்திய ராணுவ ஒப்பந்தங்களில், மொத்த ஒப்பந்தத் தொகையில் குறைந்தபட்சம் 30 சதவிகிதத்தை இந்தியாவில் முதலீடு செய்யும் வகையில் பங்குதாரர் நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. இந்தியாவில் விமானத் தயாரிப்பில் அனுபவம் உள்ள ஒரே நிறுவனம், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல். அதை விட்டுவிட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை தனது பங்குதாரர் நிறுவனமாகத் தேர்ந்தெடுத்தது டஸோ ஏவியேஷன். இது எப்படி நிகழ்ந்தது?

• 2015 ஏப்ரல் 10-ம் தேதி பிரான்ஸ் சென்று இந்த விமான பேரத்தை மோடி இறுதி செய்தார். அதற்கு 14 நாள்கள் முன்னதாக ஒரு சம்பவம் நிகழ்கிறது. ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை மார்ச் 28-ம் தேதிதான் ஆரம்பித்து பதிவு செய்தார் அனில் அம்பானி. ஆரம்பித்து வெறும் இரண்டே வாரங்கள் ஆகியிருந்த, விமானத்தில் பயன்படுத்தும் ஒரே ஒரு ஸ்க்ரூகூட தயாரித்த அனுபவம் இல்லாத நிறுவனத்தை, உலகின் முன்னணி போர் விமானத் தயாரிப்பு நிறுவனம் எப்படி பங்குதாரராக ஏற்றது?

• இந்த ஒப்பந்தம் அனில் அம்பானியின் நிறுவனத்துக்குத்தான் தரப்படும் என்பதை யார் முடிவு செய்தது? யாரிடம் யார் பரிந்துரைத்தார்கள்? பிரான்ஸ் வரை பெயர் தெரியும் அளவுக்கு அது பெரிய நிறுவனம் இல்லை. அனுபவமும் இல்லை. அதை ஏற்றுக்கொள்ள டஸோ ஏவியேஷன் எப்படி முன்வந்தது?

ரஃபேல் பேரம்... எது நிஜம்?

• அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், வெளிநாட்டில் வாங்கிய பெரிய கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தமுடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கப்பல்கள் கட்டும் இன்னொரு நிறுவனமான ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினீயரிங், திவாலாகிவிட்டதாக நிறுவனச் சட்டங்கள் தீர்ப்பாயத்தில் ஐ.டி.பி.ஐ வங்கி விண்ணப்பம் செய்திருக்கிறது. இப்படி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத, திவாலான ஒரு தொழிலதிபர் எப்படி ரஃபேல் விமான பேரத்தில் நுழைய முடிந்தது?

• ‘அனில் அம்பானிக்கு இதைத் தரச் சொன்னது இந்திய அரசுதான்’ என மோடியுடன் இணைந்து ஒப்பந்தம் போட்ட பிரான்ஸ்வா ஹோலாந்த் சொல்லிவிட்டார். (அவர் அப்படிச் சொல்ல ஒரு காரணமும் இருக்கிறது. அவரின் தோழியான நடிகை ஜூலி கேயே ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். இந்தியாவில் திவாலாகி இருக்கும் அனில் அம்பானி, இந்த சினிமா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ‘ரஃபேல் பேரத்தை முடித்துக்கொடுத்ததற்கு இது நன்றிக்கடனா?’ என்ற கேள்வி எழுந்தபோதே அவர் அதைச் சொன்னார்.) ஆனால், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘டஸோ ஏவியேஷன் இந்தியாவில் எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் என்பதை நான் பரிந்துரைக்கவும் முடியாது; ஒப்புதல் கொடுக்கவும் முடியாது; நிராகரிக்கவும் முடியாது. இது அந்த இரண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். எங்களுக்கு கடைசிவரை தெரியாது’’ என்றார். பாதுகாப்பு கொள்முதல் விதிகள் என மத்திய அரசு உருவாக்கி வைத்திருக்கும் விதிகளிலேயே, ‘இந்த ஒப்பந்தம் பற்றி அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்’ என்று இருக்கிறது. இதை நிர்மலா சீதாராமன் படிக்கவில்லையா? 

• அனுபவமுள்ள ஹெச்.ஏ.எல் நிறுவனம் ஏன் இதில் புறக்கணிக்கப்பட்டது? ‘‘இங்கு போதுமான வசதிகள் இல்லை’’ என்கிறார் நிர்மலா சீதாராமன். பெங்களூரில் இருக்கும் இந்த நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். மிராஜ், ஹாக், சுகோய் என பல விமானங்களை உருவாக்கிய அனுபவம் பெற்ற நிறுவனம் இது. பாதுகாப்பு அமைச்சகத்தின் பாராட்டுகளை அடிக்கடி பெற்ற நிறுவனம் இது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 61,000 கோடி ரூபாய் பணிகளைச் செய்ய ஒப்பந்தம் பெற்றுள்ளது இந்த நிறுவனம். 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் போர் வெடித்தபோது, அவசரமாக இந்த நிறுவனம் ரெடி செய்துகொடுத்த விமானங்கள்தான் நாம் போரில் வெல்ல முக்கியமான காரணம். இதைப் புறக்கணிக்கலாமா?

எதற்கும் சரியான பதில் இல்லை. ‘ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது’, ‘எதிர்க்கட்சிகளுக்கு நாங்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும்?’, ‘நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த முடியாது’... இப்படி ஒருவித ஆணவத்துடனே அருண் ஜெட்லியும் நிர்மலா சீதாராமனும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கேள்வி கேட்பவர்களை ‘தேசத் துரோகிகள். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இவர்கள் உதவுகிறார்கள்’ என்கிறார்கள்.

2005-ம் ஆண்டு அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் போட்டது. அப்போது இதில் ரகசியம் காக்கப்படுவது பற்றி எதிர்க் கட்சிகள் கொந்தளிக்க, முக்கியமான தலைவர்களை அழைத்து ஒப்பந்தம் பற்றிச் சொன்னார் பிரதமர் மன்மோகன் சிங். ரஃபேல் விமானத்தின் தொழில்நுட்ப ரகசியங்களை யாரும் கேட்கவில்லை. அந்த ஒப்பந்தம் எப்படிப்பட்ட சூழலில் போடப்பட்டது, பங்குதாரர்கள் எப்படி இணைந்தார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல இந்த அரசு கடமைப்பட்டது. சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என யாரும் இல்லை; சந்தேகத்தைக் கேட்பது தேசவிரோதமும் இல்லை.

- தி.முருகன்
அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி

அடுத்த கட்டுரைக்கு