Published:Updated:

`ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது பி.ஜே.பிக்குத்தான் உதவும்!’ - டி.டி.வி.தினகரன்

`ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது பி.ஜே.பிக்குத்தான் உதவும்!’ - டி.டி.வி.தினகரன்
`ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது பி.ஜே.பிக்குத்தான் உதவும்!’ - டி.டி.வி.தினகரன்

தி.மு.க தலைவர் ஸ்டாலின், ராகுல்காந்தியை தர்மசங்கடத்துக்கு உள்ளாகிவிட்டார் என்றும் ஓ.பி.எஸ் குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதும் விரைவில் அம்பலமாகும் என்று டிடிவி தினகரன் கூறினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சி வந்தார். சங்கம் ஹோட்டலில் அக்கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர்கள் ஜெ.சீனிவாசன், மனோகரன், ராஜசேகரன் ஆகியோர் சகிதமாகத் திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தின் அட்ராசிட்டி என்பது ஊருக்கே தெரியும். ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியைக் காப்பாற்றிவிட்டதாகக் கூறியிருக்கிறார்களே... ஓ.பி.எஸ் தம்பி மட்டுமல்ல, ஓ.பி.எஸ் மகன்கள் மற்றும் உறவினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது கூடிய விரைவில் எல்லோருக்கும் தெரிய வரும்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எப்போதும் அ.தி.மு.க-வுடன் இணைய வாய்ப்பே இல்லை ஜெயலலிதாவின் தொண்டர்கள் 90 சதவிகிதம் பேர் எங்களுடன் இருக்கிறார்கள். மீதமுள்ள தொண்டர்களும் விரைவில் எங்களுடன் இணைவார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தலைவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும். அவர்கள் இல்லாமல் மற்றவர்கள் விரைவில் எங்களுடன் இணைவார்கள். என்னதான் வதந்திகளைக் கிளப்பினாலும் துரோகிகளுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைய வாய்ப்பு இல்லை. ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக அவர்களுடன் இணைவது என்பது சாத்தியமில்லை. ஆட்சி, அதிகாரம் போய்விட்டால் அ.தி.மு.கவே இருக்காது. பதவிக்கும் பயத்தினாலும் எங்களுடன் வருவார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை சில மாதங்களில் திறக்கும் என்கிறார்கள். வரும் தேர்தல்வரை இழுப்போம், தேர்தலுக்குப் பிறகு, ஸ்டெர்லைட் திட்டம், நியூட்ரினோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன், 8 மற்றும் 16 வழிச்சாலைகள் உள்ளிட்ட மக்கள் விரும்பாத திட்டங்களை வரவிடாமல் தடுக்கும் சக்தி மக்களிடம் உள்ளது. மக்களுக்கு எதிரான சக்திகளை வரும் தேர்தலில் புரிந்துகொண்டு தடுத்து நிறுத்துவார்கள்.

ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது. சிறுபிள்ளைத்தனமான முடிவு. பி.ஜே.பி-க்கு எதிராக வலுவான கூட்டணி உருவாகிவிடக் கூடாது என்பதற்காக பி.ஜே.பி-க்கு உதவி செய்வதுபோல உள்ளது. ராகுல்காந்திக்கு தர்ம சங்கடத்தை ஸ்டாலின் ஏற்படுத்திவிட்டார். கூட்டணி கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் திடீரென்று ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது. சந்தர்ப்பவாதமாகவும் நயவஞ்சகமாகவும் தெரிகிறது.

ஒரு கட்சிக்குத் தலைவராக, 40 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள ஒருவராக இல்லாமல் மைக் கிடைக்குது ஏதோ சிறுபிள்ளைத்தனமாகப் பேசியுள்ளார். கூட்டணிக் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் ஸ்டாலின் பேசியது காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில், கூட்டணி என்கிற பேரில் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடிக்கத் திட்டமிடுவதாகவும், தி.மு.க-வுக்கு பி.ஜே.பி-யுடன் புரிந்துணர்வுடன் இருப்பது வெளிப்படுகிறது” என்றார்